Published : 22 Nov 2018 06:40 PM
Last Updated : 22 Nov 2018 06:40 PM
நவம்பர் 24: ஃப்ரெட்டி மெர்க்குரியின் நினைவு நாள்
எத்தியோப்பியா நாட்டின் வறட்சியைப் 1984-ல் படம்பிடித்துக் காட்டியது பி.பி.சி. தொலைக்காட்சி. அந்தச் செய்தி அறிக்கை, ஒரு புதிய கலாச்சாரப் போக்கை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல பாடகர் பாப் கெல்டாஃப், எத்தியோப்பிய மக்களுக்கு உதவ நிதி திரட்டத் தொடங்கினார். அப்படித்தான் ‘செலிபிரிட்டி ஃபண்ட் ரைஸிங்’ எனும் விஷயம் பிறந்தது.
இந்த நிதி திரட்டலுக்காகத் தனது நண்பரும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபலப் பாடகருமான மிட்ஜ் யுரே உடன் இணைந்து, 1985 ‘லைவ் எய்ட்’ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தினார் பால் கெல்டாஃப். அந்த நிகழ்ச்சியில், டேவிட் பொவீ, எல்டன் ஜான், பாப் டிலன் போன்ற பிரபலப் பாடகர்கள் கலந்துகொண்டு அசத்தினார்கள்.
அந்த அசத்தல்கள் அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டது, ஃப்ரெட்டி மெர்க்குரியின் ‘பெர்ஃபாமன்ஸ்’. அவரது ‘குயின்’ எனும் ‘ராக்’ இசைக் குழு அன்று நிகழ்த்திய 21 நிமிட இசை விருந்து, உலக இசை வரலாற்றில் ஒரு மைல்கல்! வரும் 24-ம் தேதி, ஃப்ரெட்டி மெர்க்குரியின் நினைவு நாள். அதையொட்டி, சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ‘பொஹீமியன் ராப்சடி’ எனும் அவரைப் பற்றிய பயோபிக்!
இசை உலகின் ‘ராணி’
தான்சானியா நாட்டின் சான்ஸிபாரில் இந்தியக் குடும்பத்தில் பிறந்தார் ஃபரூக் புல்சாரா. மும்பையில் 7 வயதிலேயே பியானோ கற்கத் தொடங்கிய ‘ஃபரூக்’, தன் பள்ளி நண்பர்களின் செல்ல உச்சரிப்பால் ‘ஃப்ரெட்டி’ ஆனார். பின்னாளில், லண்டனுக்குக் குடிபெயர்ந்தது அவரது குடும்பம்.
கிட்டாரிஸ்ட் ப்ரையன் மே, ட்ரம்மர் ரோஜர் டெய்லர் ஆகியோர் உருவாக்கிய ‘ஸ்மைல்’ எனும் ராக் இசைக் குழுவில் டிம் ஸ்டாஃபெல் பாடகராக இருந்தார். அன்றைய தினம், அவர் வேறொரு குழுவுக்குப் பாடச் சென்றுவிட, அவர்கள் இருவரும் செய்வதறியாது திகைத்தனர்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஃப்ரெட்டி, தன் பாட்டுத் திறமையைக் காட்டி, அந்தக் குழுவில் இடம்பிடித்தார். அடுத்த சில இசை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அந்தக் குழுவுக்கு ‘குயின்’ என்ற புதிய பெயரை அவர் சூட்டினார். அப்படியே தன் குடும்பப் பெயரான புல்சாராவைக் கைவிட்டு, மெர்க்குரி என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு, ‘ஃப்ரெட்டி மெர்க்குரி’ ஆனார்.
அந்த இசைக் குழுவின் மகத்தான சாதனைகளில் ஒன்று ‘பொஹீமியன் ராப்சடி’. அந்தப் பாட்டு மூலமாகத்தான் ‘குயினை’ அடுத்த பத்தாண்டுகளுக்கு இசை உலகை ஆட்சிசெய்த ‘ராணி’யாக மாற்றினார், இந்த ராக் இசையின் ராஜா!
கற்பனை உலகக் கலைஞன்!
ஃப்ரெட்டி எழுதி, முதலில் ‘சிங்கிள் ட்ராக்’ ஆக வெளியிடப்பட்ட அந்தப் பாட்டு, 1975-ம் ஆண்டு வெளியான அந்த இசைக் குழுவின் ‘எ நைட் அட் தி ஓபெரா’ எனும் நான்காவது ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. ‘பொஹீமியன் ராப்சடி’ என்பதற்கு ‘கற்பனை உலகக் கலைஞன்’ என்று அர்த்தம்.
அன்றெல்லாம், ஒரு சிங்கிள் ட்ராக் என்பது சுமார் 3 நிமிடங்கள்தான் இருக்கும். எனவே அந்தப் பாட்டின் நீளம் கருதி (சுமார் 6 நிமிடங்கள்) அதை வெளியிட பல இசை நிறுவனங்களும் வானொலி நிலையங்களும் தயங்கின. பின்னர் ‘கேப்பிடல் ரேடியோ’வில் அது ஒலிபரப்பாக, மக்கள் வெறிகொண்டது போல அந்தப் பாட்டைக் கொண்டாடினார்கள்.
‘குயின்’, அந்தப் பாடல், அதை உருவாக்கியவரின் வாழ்க்கை… இவைதான் ‘பொஹீமியன் ராப்சடி’ படத்தின் கதை. தன்பால் ஈர்ப்பாளரான ஃப்ரெட்டிக்கு 1987-ல் எய்ட்ஸ் தொற்றியிருப்பது தெரிய வந்தது. 1991-ல் அவர் இறந்துவிட, அவரது இசைக் குழுவினர் எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தினார்கள். அதன்மூலம் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பலர் பயனடைந்து வருகிறார்கள். இப்படியாக, இன்றும் வாழ்ந்து வருகிறான் அந்த உண்மைக் கலைஞன்!
படத்தில் ஃப்ரெட்டி மெர்க்குரியாக ரமி மாலெக் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இதுவரை வெளியான ‘மியூஸிக் பயோபிக்’ படங்களில் அதிக வசூல் செய்த படம் எனும் சாதனையைப் படைத்திருக்கிறது இது. ஆனாலும் ‘ஃப்ரெட்டியின் வாழ்க்கை முழுமையாகச் சொல்லப்படவில்லை’ என்று விமர்சனங்களும் வரவே செய்கின்றன.
அதுசரி… சினிமாவுக்கு நாம் போவது சரித்திரப் பாடம் படிப்பதற்கு அல்லவே!
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT