Last Updated : 22 Nov, 2018 06:37 PM

 

Published : 22 Nov 2018 06:37 PM
Last Updated : 22 Nov 2018 06:37 PM

சி(ரி)த்ராலயா 43: ‘அவசர நிலை’யில் ஒரு நாடகம்!

சிவாஜியை இயக்கி வெற்றிகள் கொடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீதர், ‘உரிமைக் குரல்’ மூலம் எம்.ஜி.ஆரை இயக்கத் தொடங்கினார். இதனால் நட்சத்திர யுத்தத்தில் சிக்கிக்கொண்டார் ஸ்ரீதார். அப்போது அந்த யுத்தத்தில் தலையைக் கொடுக்காமல் பாதுகாப்பாகக் களமாடிக்கொண்டிருந்தார் கோபு. நண்பர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று பல பத்திரிகைகள் எழுதிவந்த நேரத்தில், விழாவில் ஒன்றில் சந்தித்துக்கொண்ட கோபுவும் ஸ்ரீதரும் நீண்டநேரம் பேசிக்கொண்டார்கள்.

அப்போது கோபு, ஸ்ரீதரிடம் “‘உரிமைக் குரல்’ வெற்றிக்கு வாழ்த்துகள் ஸ்ரீ; அதே நேரம், நீ ஏன் சிவாஜி அண்ணனுடன் சமரசம் செய்து கொண்டு, பாதியிலேயே நிற்கும் ‘ஹீரோ 72’ படத்தை முடிக்கக் கூடாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேரையும் இயக்கினால் உனக்குப் பெருமைதானே?” என்று கேட்க, உடனே ஸ்ரீதர், அந்த யோசனையை ஏற்றார்.

‘ஹீரோ 72’ படத்தின் பெயரை ‘வைர நெஞ்சம்’ என்று மாற்றி, மீதமிருக்கும் பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடத்தப்போவதாக அறிவிக்க, சிவாஜியும் வருத்தங்களையெல்லாம் விட்டுவிட்டு ஸ்ரீதருக்கு கால்ஷீட் கொடுக்க ‘வைர நெஞ்சம்’ 1975 நவம்பர் 2 அன்று வெளியாகி ஸ்ரீதர், இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கும் பொதுவான இயக்குநர் என்ற உண்மையை உறுதிசெய்தது.

ஜூலை 1975. ஜூன் மாதம் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, ஒரு மாதம் முடிந்திருந்தது. அந்த நேரத்தில் தனது யூனிட்டி கிளப் குழுவுக்கு கோபு ஒரு நாடகம் எழுதிக்கொண்டிருந்தார். இரவு 11 மணி அளவில் தொலைபேசி ஒலிக்க கோபுதான் எடுத்தார்.

“கோபு... ரொம்ப அவசரம்! நாளைக் காலை காபி கூடக் குடிக்காம கிளம்பி வா. நான் காபி தரேன். தலை போற விஷயம் நடந்துகிட்டு இருக்கு” என்று தான் யார் என்றுகூடக் கூறாமல் எதிர்முனையில் பேசிய குரல் பதற்றப்பட்டது. அந்தக் குரலில் ஒலித்த நையாண்டியை வைத்தே அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் சோ என்பதைக் கண்டுகொண்டார்.

வைதேகி காத்திருந்தாள்!

அரசியல் நையாண்டிக்கும் கேலிக்கும் பெயர்போன சோ காரணம் இல்லாமல் அழைக்க மாட்டாரே! மறுநாள் அதிகாலையில் அவரது வீட்டில் இருந்தார் கோபு. “எனக்கு உடனடியா ஒரு நாடகம் தேவை” என்று ஆவி பறக்கும் காபியை கோபுவின் கையில் கொடுத்தபடியே கேட்டார் சோ. திகைத்துப்போனார் கோபு! “நீயே ஒரு நாடக ஆசிரியர். உன்னோட சட்டயர் நாடகங்களைக் காண ஒரு கூட்டமே காத்துக்கிடக்கு. என்கிட்டே எதுக்கு நாடகம் கேட்கிறே?” சூடான காபியைச் சுவைத்தபடி கோபு கேட்டார்.

“இல்லே கோபு.. இப்ப அவசர நிலையை அறிவிச்சிருக்காங்க. என்னோட ‘முகமது பின் துக்ளக்’நாடகத்தைப் போட மூணு நாளைக்கு சபா காரங்க டேட்ஸ் கொடுத்திருக்காங்க. இந்த நிலையில என்னோட தொழிலதிபர் நண்பர் மூலமா அந்த நாடகத்தின்போது என்னைக் கைதுசெய்யத் திட்டம் இருக்கிறதா கேள்விப்பட்டேன். சாஸ்திரி பவன்ல இருந்து அதிகாரிகள் வந்து நாடகம் பார்க்கப் போறதாகவும், அரசியல் நையாண்டி வசனத்தைக் காரணம் காட்டி என்னைக் கைதுசெய்யப் போறதாவும் சொல்றாங்க.

கைது ஆகிறது பத்தி எனக்குப் பயமில்லே. ஆனால், எங்க நாடகக் குழு ‘முகமத் பின் துக்ளக்’ நாடகத்தைப் போட விருப்பப்படல. அதுக்குதான் உன்னைக் கூப்பிட்டேன். எனக்காக ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதித் தா. அரசியலே இல்லாத நாடகமா இருக்கணும்னுதான் உன்னை எழுத சொல்லறேன்” சோ சொன்னார்.

“அவ்வளவுதானே. எழுதித் தரேன். நாடகம் எப்ப வேணும்?” என்று கோபு கேட்க, “வர்ற சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் நாடகத்துக்குத் தேதி கொடுத்திருக்கோம். அதுக்குள்ள வேணும் கோபு முடியுமா?” என்று கேட்டு அசரடித்தார் சோ. மலைத்துப்போன கோபு, “இன்னும் ரெண்டு நாள்தானேப்பா இருக்கு!” என்று காபியை இஞ்சிக் கசாயம்போல் குடித்துக்கொண்டே கேட்க, “உன்னால முடியும்டா கோபு. நீ எழுதிக் கொடு. நாங்க எப்படியாவது ராத்திரி பகல்னு பார்க்காம ஒத்திகை செஞ்சு ஒப்பேத்திடறோம்!” என்றார் சோ.

தலைபோகிற அவசரம் என்று கேட்கும்போது கைகொடுக்காவிட்டால் எப்படி? அன்று மதியமே அமர்ந்து ஒரு நாடகத்தை எழுதி, இரவுக்குள் முடித்து சோவுக்கு போன் செய்து விட்டார். “சோ... நாடகம் ரெடி! ஆளை அனுப்பு கொடுத்தனுப்புறேன்” என்றவுடன், சோவுக்கு வியப்போ வியப்பு! “சபாஷ்டா! இதுக்குதான் உன்னை எழுதச் சொன்னேன்” என்றார். ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற அந்த நாடகத்தைப் படித்துப் பார்த்ததும் சோவுக்குப் பிரமிப்பு தாங்கவில்லை. உடனே தொலைபேசியில் அழைத்து “அருமைடா அம்பி... பின்னிட்டே போ!” என்று பாராட்டினார்.

பிசுபிசுத்துப்போன கைது!

சனிக்கிழமை அன்று சாஸ்திரி பவனில் இருந்து வந்த அதிகாரிகள் சோவின் நாடகத்தைக் கண்டு திகைத்தனர். சோவைக் கைதுசெய்வதற்கு இரண்டு மூன்று ஜீப்களில் காவல் படையினர் வந்திருந்தனர். சோ கைதுசெய்யப்படுவார் என்று பார்வையாளர்கள் கிசுகிசுப்பான குரலில் பேசுக்கொண்டிருந்தபோதே நாடக அரங்கின் மணி அடித்து திரை எழுந்தது. கணீர் என்ற சோவின் குரல் “ ‘சித்ராலயா’ கோபு எழுதி, சோ நடிக்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற புதிய நாடகம் இப்போது அரங்கேறும்” என்று மட்டும் கூறிவிட்டு நாடகத்தைத் தொடங்கினார் சோ.

சாஸ்திரி பவனிலிருந்து வந்திருந்த அதிகாரிகள் ஆங்காங்கே அமர்ந்து நாடகத்தை நோட்டம் விட்டுக்கொண்டிருக்க, மருந்துக்குக்கூட நாடகத்தில் அரசியல் இல்லை. மனைவி மீதும், குடும்பத்தின் மீதும் மிகவும் பாசம் கொண்ட ஒரு தொழிலதிபராக நடித்தார் சோ. அந்தத் தொழிலதிபர் நகரின் ஷெரீஃப் ஆக அறிவிக்கப்பட, அவர் ஒரு கர்நாடக சங்கீதப் பெண் வித்வானின் பாராட்டு விழா ஒன்றில் கலந்துகொள்கிறார்.

உண்மையிலேயே அவரது இசை ஷெரீஃப்பை ஈர்த்துவிட, அவர் அந்தப் பாடகியிடம் நட்பு பாராட்டுகிறார். இருவரையும் இணைத்து வதந்திகள் கிளம்புகின்றன. உடனே பதவியும் வேண்டாம்; பாடகியின் தோழமையும் வேண்டாம் என்று கூறிவிட்டு மீண்டும் தனது குடும்பத்தில் ஐக்கியமாகி விடுவதுதான் கதை. சித்ராலயா கோபுவின் குபீர் நகைச்சுவை வெடிகள், சோவின் குரலில் அரங்கத்தையே அதிரவைத்தன. கண்களில் விளக்கெண்ணெய்யை விட்டு, நாடகத்தைப் பார்த்த சாஸ்திரி பவன் அதிகாரிகள் திகைத்தனர்.

சோவைக் கைதுசெய்வதற்கு, நாடகத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. அரசியலே இல்லை...” என்று உயர் அதிகாரிகளுக்குத் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. சோவைக் கைதுசெய்வதற்காக ஜீப்பில் காத்திருந்த காவல்துறையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாடகத்தின் நூறாவது நாள் விழாவில் சோ கோபுவை மேடையேற்றிப் பாராட்டினார். இந்த நாடகம் பிறகு, முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்த ‘ஆசைக்கு வயசில்லை’ என்னும் திரைப்படமானது. முத்துராமன் தொழிலதிபராகவும் கே.ஆர்.விஜயா அவர் மனைவியாகவும், பிரவீனா (பாக்யராஜின் முதல் மனைவி) பாடகியாகவும் நடித்தனர். முத்துராமன் – பிரமிளா ஜோடியைக் கொண்டு ‘பெண்ணொன்று கண்டேன்’ என்ற மற்றொரு படத்தை இயக்கினார் கோபு.

தன் நண்பரின் படம் என்பதற்காக, எம்.எஸ்.விஸ்வநாதன், அருமையான பாடல்களைத் தந்தார். குறிப்பாக, “நீ ஒரு ராக மாலிகை. என் நெஞ்சம் உன் காதல் மாளிகை” என்ற பாடலையும் அது படமாக்கப்பட்ட விதத்தையும் பத்திரிகைகள் பாராட்டி இருந்தன. கோபுவுக்கு நகைச்சுவைதான் வரும் என்று நினைத்திருக்க, அவரது ஆசானைப் போன்று காதல் காட்சிகளையும் எடுக்கத் தெரியும் போலும் என்று வாரப் பத்திரிகை ஒன்று கிண்டலடித்திருந்தது.

மெட்ராஸ் பாஷையில் வசனம் எழுதுவது என்றால் கோபுவுக்கு அல்வா சாப்பிடுவது போல. சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளி ஆகியோர் அவரது வசனங்களை மிகவும் ரசித்து நடிப்பார்கள். ஆனால், இந்த மெட்ராஸ் பாஷை தனது பெரிய பிரச்சினையாக மாறும் என்று கனவிலும் அவர் எதிர்பார்க்கவில்லை. காரணம், மெட்ராஸ் பாஷையை மட்டுமே பேசத் தெரிந்த சொர்ணக்காவை போன்ற ஒரு கோபக்காரப் பெண்மணி கோபுவைப் படம் இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்ய வந்தார்.

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x