Published : 22 Nov 2018 06:42 PM
Last Updated : 22 Nov 2018 06:42 PM
“டென்னிஸ் பாலில் என்னோடு கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயனே என்னை வைத்து ஒரு கிரிக்கெட் படம் தயாரிச்சிருக்கார்!” நெகிழ்ச்சி கலந்த உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் நடிகர், பாடலாசிரியராகக் கவனம் பெற்று தற்போது ‘கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும், நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பரான அருண்ராஜா காமராஜ்.
பெண்கள் கிரிக்கெட்டை பின்னணி யாகக் கொண்டு முதல் படம் இயக்க வேண்டும் எனத் தோன்றியது ஏன்?
ஒரு விவசாயி மகள் எப்படி தன் கனவை நனவாக்கி கிரிக்கெட் வீராங்கனையாகிறாள் என்பதே ‘கனா’ படத்தின் கதை. இக்கதைக்காக வங்கதேச அணிக்குப் பயிற்சியாளராக இருக்கும் தேவிகா பல்சீகர், தமிழ்நாடு பயிற்சியாளர் ஆர்த்தி ஆகியோரிடம் பேசினேன். நிறைய விஷயங்களைக் கேட்டு தெரிந்து எழுதிய கதை இது. என்னுடைய நிஜவாழ்க்கையில் கிரிக்கெட் விளையாடுவதற்குப் போராடியிருக்கிறேன்.ஒரு பையனாக இருந்தும் எனக்கே இவ்வளவு போராட்டம் என்றால், பெண்ணுக்கு எவ்வளவு போராட்டம் இருக்கும். அதனால், தனிப்பட முறையில் இக்கதைக்கு இவர் தான் உத்வேகம் என்று சொல்லிவிட முடியாது.
கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷைத் தேர்வு செய்ய என்ன காரணம்?
ஒரு கிரிக்கெட் வீராங்கனைக்கு என்ன பயிற்சி இருக்குமோ, அதை எடுத்துக்கிட்டாங்க. ஆரம்பக் கட்டத்திலிருந்து மாநில அளவு கிரிக்கெட் அணிக்குத் தேர்வாவதுவரை என்ன பயிற்சி இருக்குமோ அதற்கு முழுமையா தன்னை அர்ப்பணிச்சாங்க. ‘கிரிக்கெட் கதை. இதில் காம்பரமைஸ் பண்ண முடியாது’ என்று முதலில் சொன்னேன்.
‘நீங்க காம்பரமைஸ் பண்ணினாலும், நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். என்னால் என்ன முடியுமோ பண்றேன். வேறு எந்தப் படமும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இப்படத்தை முடிஞ்சுட்டு அடுத்த படங்களுக்குப் போறேன். இதை ஒப்பந்தமாகக்கூட போட்டுக் கொள்ளுங்கள்’ என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னார். அந்த வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தின. நடிப்பிலும் பிரமாதப்படுத்தியிருக்கார். செமயா கிரிக்கெட் விளையாடி இருக்கார்.
உங்களை இயக்குநர் ஆக்கவே சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் என்பது உண்மையா?
ஒவ்வொரு முறை என் பாடல் வெளியாகும்போதும் போன் அடிப்பான். பாட்டு நல்லாயிருக்கு என்று சொல்லாமல் “எப்போ டைரக்டர் ஆகுற” எனக் கேட்பான். “ஒவ்வொரு பாட்டுமே பெரிய ரீச் கொடுக்குது. ஆனால், அது உன் இடமில்லை. எனக்குத் தெரியும் நீ எங்கே இருக்கணும் என்று. உன்னோடக் கனவை இன்னும் துரத்து” என்று சொல்வான்.
ஒரு நாள் என்ன கதை வைச்சுருக்க சொல்லு என்று கேட்டான். உடனே என்னிடம் இருந்த ஐடியாக்கள் அனைத்தையும் சொன்னேன். இதெல்லாம் நல்லாயிருக்கு. ஆனால், நீ இப்போது அனைவருக்கும் தெரிந்தவன். அப்படியிருக்கும்போது இதைவிட நல்ல கதையா நீ முதல் படமா பண்ணணும் என்றான் சிவா. அப்போது தோன்றியது பெண்கள் கிரிக்கெட் ஐடியா.
இவ்வளவு நாளா நல்ல விவசாயம் பண்ணிட்டு, இப்போது விவசாயம் பண்ணவே முடியாமல், அதை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் கஷ்டப்படுகிற ஒரு அப்பாவை கதாபாத்திரமாக உருவாக்கினேன். அந்த அப்பா தன் பெண்ணோட கனவுக்கு என்ன ஒத்துழைப்பு கொடுத்தார், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருமே எப்படி உதவினார்கள் என்பதே திரைக்கதை. அப்பா கதாபாத்திரத்துல சத்யராஜ் வாழ்ந்துருக்கார்.
இக்கதையை முழுமையாகத் தயார் பண்ணிட்டு போய் சிவாகிட்ட சொன்னவுடன், தயாரிப்பு நிறுவனம் தொடங்குறோம் என்று சொன்னார். எனக்கே ஆச்சர்யம்.! தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் எனக்கு முதல் வாய்ப்பைக் கொடுக்கிறான் என்றவுடன், ரொம்பவே எமோஷனல் ஆகிட்டேன். தனக்காகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்காதவன், நண்பனுக்காகக் தொடங்கும்போது எப்படியிருக்கும். “படம் பார்த்துவிட்டு நல்ல படம் எங்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்று சந்தோஷமாகச் சொன்னால் போதும்டா!” எனச் சொன்னான். அவன் எல்லோரையுமே ஊக்குவிப்பவன். இது நண்பன் கொடுத்த வரம்.
இயக்குநராகி விட்டீர்கள். இனிமேல் பாடலாசிரியராகத் தொடர்வீர்களா?
என் படத்திலேயே இரண்டு பாடல்கள் எழுதியிருக்கேன். மற்ற படங்களுக்கும் எழுதுவேன். சினிமா பாட்டு எழுதுவதற்கு அங்கு போய் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. டியூன் கொடுப்பார்கள், அதைக் கேட்டு பாடல் வரிகளைப் போட்டு எழுதிவிட வேண்டியதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT