Published : 22 Nov 2018 06:41 PM
Last Updated : 22 Nov 2018 06:41 PM
அமேசான் பிரைம் வீடியோ தனது ஒரிஜினல்ஸ் வரிசையில் ’ஹோம் கம்மிங்’, ’மிர்ஸாபூர்’ என வெப் சீரிஸ்களை நவம்பரில் களமிறக்கி உள்ளது. ஜூலியா ராபர்ட்ஸ் முதல் முறையாகத் தோன்றும் வெப் சீரிஸ் ’ஹோம் கம்மிங்’. இந்த த்ரில்லர் தொடருக்கு ஆஸ்கர் விருது நாயகியான ஜூலியா தனது நடிப்பால் கனம் சேர்த்துள்ளார்.
போர் முனையில் இருந்து நாடு திரும்பும் வீரர்களை ஆற்றுப்படுத்தி இயல்பு வாழ்க்கையில் ஒன்ற வைக்கு உதவும் ‘ஹோம் கம்மிங்’ என்ற ஆற்றுப்படுத்தும் மையத்தின் ஆலோசகராக வருகிறார் ஜூலியா ராபர்ட்ஸ். போர் வீரர்களிடம் தொடர்ந்து உரையாடும் ஜூலியாவுக்குச் சில நெருடலான அனுபவங்கள் நேர்கின்றன. அடுத்தடுத்த அமர்வுகளுக்கு வரும் வீரர்களிடமும் விநோதமான மாற்றங்களையும் அவர் அடையாளம் காண்கிறார். பணியாற்றும் நிறுவனத்தின் மர்மமான இயக்கம், வீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க அவர்கள் மேற்கொள்ளும் முனைப்பு ஆகியவை அவரது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
ஒரு கட்டத்தில் பணியைத் துறந்து தனது தாயுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். உணவகச் சிப்பந்தியாக வாழ்க்கையைத் தொடரும் ஜூலியா, தன்னுடைய நினைவுகள் பல அழிந்திருப்பதை உணர்கிறார். தான் ஏதோ தவறான நோக்கத்துக்காகப் பணயம் வைக்கப்பட்டதையும் அவர் அறிகிறார். அவ்வாறு நினைவுகள் தொலைத்த, தனது பழைய பணிக்கால நண்பர்களையும் சந்திக்கிறார். அங்கே அவருக்கு மேலும் அதிர்ச்சி கள் காத்திருக்கின்றன.
தொடரின் முதல் சீஸன் மொத்தம் 10 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் 2022-ம் ஆண்டு, நினைவுகூரப்படும் 2018-ம் ஆண்டு ஆகியவற்றுக்கு இடையே தொடரின் ஒவ்வோர் அத்தியாயமும் ஊடாடுகிறது. ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் தொடருக்குத் தேவையான சுவாரசியத்தை இந்த ஊடாட்டமே தருகிறது. ஆனால், கதை நகரும் வேகம் சோதிக்கிறது. நம்மூர் வானொலியின் ஒலிச்சித்திரப் பாணியில் ‘ஹோம் கம்மிங்’ என்ற தலைப்பில் வெளியான அமெரிக்கத் தொடரில் தேவையான மாற்றங்களைச் செய்து வெப் சீரிஸ் ஆக்கி உள்ளனர்.
ரத்தமும் சதையுமாக..
அமேசான் பிரைமின் மூன்றாவது இந்திய வெளியீடு ‘மிர்ஸாபூர்’ அனுராக் காஷ்யபின் ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ பாதிப்பில், ஒரு கேங்ஸ்டர் கதையாக ‘மிர்ஸாபூர்’ வெப் சீரிஸை உருவாகி உள்ளது.
சட்டம் ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு விலை என்று கேட்கும் ஊர் மிர்ஸாபூர். ஊரின் பெரிய மனிதருக்குப் போதை, கள்ளத் துப்பாக்கி என சட்டவிரோதத் தொழில்கள் அத்தனையும் அத்துப்படி. முறைகேடான பணத்தில் கொழிக்கும் அவருக்கு ஒரு முரட்டு மகன். அப்பாவின் வழியில் பேராசையும் அதிகாரமும் அலைபாய துக்கிரித்தனத்துடன் அவன் வலம் வருகிறான்.
துப்பாக்கியும் கையுமாக அலைபவன் ஒரு திருமணக் கூட்டத்தில் அலட்சியமாய் சுட்டதில் மணமகன் பலியாகிறார். அந்த வழக்கு துணிச்சலான வழக்கறிஞர் ஒருவரிடம் செல்கிறது. வழக்கறிஞரிடம் மோதும் தாதாவின் மகனை வழக்கறிஞரின் இரு மகன்களும் எதிர்கொள்கின்றனர். மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த இந்த இரு இளைஞர்களையும் இந்த மோதலே துப்பாக்கியும் கையுமாகத் தெருவில் கொண்டுவந்து நிறுத்துகிறது. அதன் பின்னர் மிர்ஸாபூர் என்னவானது என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் சொல்கிறார்கள்.
தணிக்கை இல்லாத இணைய உலகத்தில் வெளியாகும் தொடர்களுக்கான போக்கை மிர்ஸாபூரில் தரிசிக்கலாம். காட்சி தோறும் தெறிக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுடன் மெய்யாலுமே ரத்தமும் சதையுமாகக் கதை சொல்லி இருக்கிறார்கள். ‘வட சென்னை’ வசைகளுக்காக பொங்கியவர்கள் இந்தத் தொடரைத் தவிர்ப்பது நல்லது. தமிழிலும் பார்க்கக் கிடைக்கிறது இந்தத் தொடர். ஆண்களின் உலகத்தை முன்னிலைப்படுத்தும் கதையில் பெண் கதாபாத்திரங்கள் அனாயசமாக களமாடுவது ஆறுதல். முதல் அத்தியாயம் உருவாக்கிய எதிர்பார்ப்பை அடுத்து வந்த எட்டு அத்தியாயங்களில் தொடரச் செய்திருக்கலாம்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT