Published : 22 Nov 2018 06:37 PM
Last Updated : 22 Nov 2018 06:37 PM

என்றும் மின்னும் ‘தங்கப் பதக்கம்’

காவல் துறை அதிகாரியின் கடமை உணர்வை மையப்படுத்தி மகேந்திரன் கதை ஒன்றை எழுதினார். மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தைக் கருவாகக் கொண்ட அந்தக் கதையை நாடகமாக அரங்கேற்றினார் செந்தாமரை.

‘இரண்டில் ஒன்று’ என்ற தலைப்பில் அரங்கேறிய நாடகம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. சபாக்களில் இந்த நாடகத்துக்கு ‘முதல் மரியாதை’ கிடைத்தது. ஒரு முறை சென்னை அண்ணாமலை அரங்கில் நாடகத்தைப் பார்த்த சிவாஜி, நாடகக் கதையில் தன்னைத் தொலைத்தார். தனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருப்பதை உணர்ந்த சிவாஜி, தனது நாடக மன்றத்தின் மூலம் ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தை அரங்கேற்ற விரும்பினார்.

தனது விருப்பத்தை செந்தாமரையிடம் தெரிவித்த சிவாஜி, கதையின் உரிமத்தை சிவாஜி நாடக மன்றதுக்கு வாங்கிக்கொண்டார். கதையில் சில மாற்றங்களைச் செய்து, தனக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை உருவாக்கி ‘தங்கப் பதக்கம்’ என்ற பெயரில் சிவாஜி அரங்கேற்றினார். காவல் துறை அதிகாரியாகத் தோன்றிய சிவாஜி கதாபாத்திரத்துக்குக் காவல் துறை அதிகாரி அருளனின் நடை, உடை, பாவணைகளைத் தனது ஒப்பனையில் காட்டினார்.

சிவாஜியின் கம்பீரமான நடிப்பில் நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றிட, சென்னையில் பிரபலமாக இருந்த அத்தனை சபாக்களும் தங்கள் அரங்கில் ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தை அரங்கேற்ற போட்டா போட்டி போட்டன. பிரபல அரசியல் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள், திரையுலகக் கலைஞர்கள் ஆகியோர் சிவாஜி காட்டிய கம்பீரத்தில் மிரண்டுபோனார்கள்.

சிவாஜியின் நடிப்பில் மைல்கல்லாய் ஆவணம் கண்ட ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தைப் படமாகத் தயாரிக்க சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் முடிவு செய்தது. ‘வியட்நாம் வீடு’, ‘புதிய பறவை’க்குப் பின் சிவாஜி கலைக்கூடம் ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தைப் படமாக்க கையில் எடுத்தது. படத்தை பி. மாதவன் இயக்கினார். 01-06-1974 அன்று படம் வெளியானது. படம் பெரும் வெற்றி பெற்றது. ‘தங்கப் பதக்க’த்தின் வெற்றி விழாக்கள் பல்வேறு ஊர்களில் நடைபெற்றன.

‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘கட்டபொம்மன்’, ‘வியட்நாம் வீடு’ போன்ற நாடகங்கள் சிவாஜியின் நடிப்பில் திரைப்படங்களாக வெளிவந்தபோது திரைப்பட வரலாற்றில் சாதனைகளாகத் தடம் பதித்தன. அந்த வரிசையில் ‘தங்கப் பதக்க’மும் இடம் பிடித்தது.

காவல் துறைக்கு அங்கீகாரம் கொடுத்த படமாக ‘தங்கப் பதக்கம்’ திகழ்ந்ததால், துறை சார்பில் நடைபெற்ற காவல் துறை விழாக்களில் ‘தங்கப் பதக்கம்’ அதிக அளவில் திரையிடப்பட்டது.

சிவாஜி ஆளுமை - பாகம் 3

நூல் ஆசிரியர்: மு.ஞா.செ. இன்பா

பக்கம்: 348 | விலை: ரூ. 350

வெளியீடு: கைத்தடி பதிப்பகம்

தொடர்புக்கு: 044-48579357

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x