Last Updated : 02 Nov, 2018 11:28 AM

 

Published : 02 Nov 2018 11:28 AM
Last Updated : 02 Nov 2018 11:28 AM

ஹாலிவுட் ஜன்னல்: ஒரு தூரிகையின் துயரம்

‘ஓவியங்கள் தவிர்த்து உலகிடம் பேசுவதற்கு வேறு ஒன்றுமே இல்லை’ என்றவர் உலகப் புகழ் ஓவியரான வின்சென்ட் வான்கா. இதைக் கலையார்வத்தில் மட்டும் அவர் சொல்லவில்லை. வாழ்ந்த காலத்தில் அந்த அளவுக்குப் பெரும் புறக்கணிப்புக்கு அவர் ஆளானார். 37 வயதில் அகாலமாய் முடிந்த வான்காவின் உருக்கமான வாழ்க்கை ’அட் எடர்னிடி’ஸ் கேட்’ என்ற திரைப்படமாக வருகிறது.

சிறுவயது முதலே குடும்பம், பள்ளி, மதபோதகர் எனப் பலரால் வான்கா புரிந்துகொள்ளப்படாமலும் போதிய அரவணைப்பின்றியும் மனச்சோர்வுக்கு ஆளானார். வளர்ந்ததும் வறுமையும் சேர்ந்துகொள்ள மன அழுத்தத்தில் விழுந்தார். வாழ்நாளில் பத்தாண்டுகளுக்கும் குறைவான காலத்திலே அவர் தூரிகை ஏந்தியிருந்தார். அதிலும் கடைசி 6 ஆண்டுகளில் பின்னாளில் உலகப் பிரசித்தி பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து தள்ளினார். அதற்கான பொருளையோ புகழையோ வாழ்நாளில் வான்கா ருசிக்கவில்லை என்பது மற்றுமொரு சோகம்.

பிரான்சில் வாழ்ந்த கடைசி 2 ஆண்டுகளில் வான்காவை அலைக்கழித்த மன பாதிப்புகளும் வறுமையும் அவற்றின் மறுமுனையில் பீறிட்ட கலைத்தாகமும் உச்சத்திலிருந்தன. ஓவியங்களின் வழியே ஆதியும் அந்தமுமற்ற வெளியுடனான வான்காவின் உரையாடல் அப்போதுதான் நிகழ்ந்தது. தன் காதை அறுத்துக்கொண்டது முதல் சர்ச்சைக்குரிய தற்கொலை முயற்சி வரையிலான தருணங்களை இந்தத் திரைப்படம் அலசுகிறது.

கலைஞனின் துயர வாழ்க்கையைப் பகிரும் படம் என்றாலும், வான்காவின் பார்வையிலான காடு, மலை, வானம் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளைத் தனித்துவமாகப் படம் பிடித்திருக்கின்றனர். வான்காவாக வில்லெம் டேஃபோ (willem dafoe) நடித்திருக்கிறார். படத்தை இயக்கியவர் ஜூலியன் ஸ்னாபெல் (julian schnabel). சாவதற்கு 2 மாதம் முன்பாக வான்கா வரைந்த ஓவியத்தின் பெயரையே திரைப்படத்தின் தலைப்பாகச் சூட்டியுள்ளனர். ‘அட் எடர்னிடி’ஸ் கேட் திரைப்படம் நவம்பர் 16 அன்று திரைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x