Last Updated : 02 Nov, 2018 11:27 AM

 

Published : 02 Nov 2018 11:27 AM
Last Updated : 02 Nov 2018 11:27 AM

டிஜிட்டல் மேடை 06: நேதாஜியின் மரண மர்மம்!

தேச விடுதலைக்கான போராட்டம் முதல் மக்கள் மத்தியிலான அபிமானம் வரை லால்பகதூர் சாஸ்திரி மற்றும் சுபாஷ் சந்திரபோஸை இணைக்கும் புள்ளிகளில் அவர்களின் மரணத்திற்கும் முக்கிய இடமுண்டு. இருவரின் மரணங்களும் இன்றுவரை விடை காணப்படாத மர்மங்களுடன் நீடிக்கின்றன. லால்பகதூர் சாஸ்திரி மரணத்தை ’ஜீ5 ஒரிஜினல்ஸ்’ ஆவணப்படமாக பதிவு செய்துள்ளது. ’அல்ட் பாலாஜி’ நேதாஜியின் வாழ்க்கையையும் மரணத்தையும் பிரத்யேக வெப் சீரிஸாக வெளியிட்டுள்ளது.

இந்த இரு தலைவர்கள் குறித்தான மர்மங்களில், இருவரும் ரஷ்யாவில் சந்தித்ததாகச் சொல்லப்படுவதும் அடங்கும். அதனை மேற்கண்ட ஆவணப்படம் மற்றும் வெப்சீரிஸில் முக்கிய காட்சியாக கையாண்டுள்ளனர். (ஜீ5, அல்ட் பாலாஜியின் வெளியீடுகளை ஏர்டெல் போன்ற செல்போன் சேவையாளர்கள் தங்களது செயலி வாயிலாக இலவசமாக வழங்குகின்றனர்)

சாஸ்திரியின் சந்தேக மரணம்

நேருவுக்குப் பிறகு நாட்டின் செல்வாக் கான பிரதமராக அரியணை யேற்றவர் லால்பகதூர் சாஸ்திரி. பாகிஸ்தான் உடனான போரை தீரத்துடன் செயல்படுத்திய இவர், போரை முடிவுக்கு கொண்டு வந்த தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானபோது மர்மமான முறையில் இறந்தார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போதைய ரஷ்யாவின் தாஷ்கண்டிற்கு சென்ற லால்பகதூர் சாஸ்திரி சடலமாகவே தாய்நாடு திரும்பினார். முன்னாள் இந்தியப் பிரதமரின் இந்த மர்ம மரணத்தை ஆராய்கிறது ’ஜீ5 ஒரிஜினல்ஸ்’ ஆகஸ்டில் வெளியிட்ட ஆவணப் படம். ‘லால்பகதூர் சாஸ்திரியின் மரணம்-முடிவில்லாத ஒரு கதை’ என்ற தலைப்பில் இதனை தமிழிலும் காணலாம். தற்போதைய தலை முறையினர் அறிந்திராத தகவல்களுடன் இந்த ஆவணப் பதிவு 20 நிமிடங்களில் நிறைவடைகிறது.

சாஸ்திரியின் மகன் சுனில் சாஸ்திரி, பேரன் சித்தார்த் நாத் சிங், தாஷ்கண்ட் பயணத்தின்போது உடன் சென்ற பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் ஆகியோரின் பேட்டிகளுடன், சித்தரிக்கப்பட்ட நாடகக் காட்சிகள் வாயிலாக ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

சாஸ்திரியின் சடலம் நீலமாகவும் காயங்களுடன் காணப்பட்டது குறித்து அவரது மனைவி எழுப்பிய ஐயங்கள், சாஸ்திரியின் வல்லரசு கனவுக்காக அவருடன் அணுசக்தி யோசனைகளை முன்னெடுத்த ஹோமிபாபா அடுத்த சில தினங்களில் விமான விபத்தொன்றில் இறந்துபோனது, மத்திய அரசின் கண்துடைப்பு விசாரணைக் கமிஷன், அதில் ஆஜராக வந்த சாட்சிகள் பலர் திடீர் விபத்துகளில் செத்துப்போவது ஆகியவற்றுடன் ரஷ்யாவில் அவர் நேதாஜியை சந்தித்து சில யோசனைகள் பெற்றதாகச் சொல்லப்படுவதையும் மர்ம முடிச்சுகளில் கோத்திருக்கிறார்கள்.

நேதாஜியின் மர்ம வாழ்க்கை

‘அல்ட் பாலாஜி’யின் பிரத்யேக தயாரிப்பாக ‘போஸ்: டெட்/அலைவ்’ என்ற வெப் சீரிஸின் முதல் சீஸன் கடந்த வருடம் வெளியானது. இதன் இரண்டாவது சீஸன் புத்தாண்டில் வெளியாக இருக்கிறது.

நேதாஜி இறந்ததாக வானொலி யில் அறிவிப்பு வெளியாகும்போது ‘இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டாம்’ என்று நேதாஜியின் குடும்பத்தி னருக்கு காந்திஜியின் தந்தி கிடைப்பதாக முதல் அத்தி யாயம் அதிரடியாக ஆரம்பிக்கிறது.

தொடர்ந்து நேதாஜியின் படிப்பு, காதல், காங்கிரஸ் கட்சிப் பணி எனத் தொடங்கி காந்தி நேருவுடனான அரசியல் உரசல், இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைப்பது, ஹிட்லரைச் சந்திப்பது என அடுத்தடுத்த அத்தியாயங்களில் விறுவிறுப்பு கூட்டுகிறார்கள். நேதாஜி இறந்ததாக சொல்லப்படும் விமான விபத்து நிகழ்வின் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்ய தேசத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியை சந்திப்பதுடன் 9 அத்தியாயங்கள் அடங்கிய முதல் சீஸனை முடித்திருக்கிறார்கள். இன்றும் இந்திய இளைஞர்களால் அதிகம் நேசிக்கப்படும் நேதாஜியை சதா புகைப்பிடிப்பவராக காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

சாஸ்திரி உடனான ரஷ்ய சந்திப்பின் பின்னணி , நேதாஜியின் உலகம் அறியாத கடைசிக் காலம் ஆகியவற்றை இரண்டாவது சீஸன் பதிவு செய்ய உள்ளதாம்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x