Last Updated : 05 Oct, 2018 11:32 AM

 

Published : 05 Oct 2018 11:32 AM
Last Updated : 05 Oct 2018 11:32 AM

பராசக்தி நாயகன்!

நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவை திரும்பிப் பார்த்தால், இரண்டே இரண்டுபேருக்கு மட்டும்தான், முதல் படமே ‘ஸ்டார்’ என்கிற நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. ‘பருத்திவீரன்’ எனும் முதல்படமே கார்த்தியை அப்படியொரு உயரத்துக்குக் கொண்டுசென்றது. அதற்கு முன்பு, இப்படியான பரபர நெருப்பைப் பற்ற வைத்தது ‘பராசக்தி’ ஹீரோதான். அவர்... சிவாஜிகணேசன்! இது 2-வது சக்ஸஸ்.

அக்கினியை வார்த்து எழுதினாலும் உச்சரிப்பில் அனல் தெறிக்கவிட்டால்தான் தமிழுக்கும் பெருமை. எழுத்தின் வீரியமும் புலப்படும். வசன நடையிலும் மாற்றம் செய்து, வசனத்திற்குள்ளேயும் திரிகிள்ளிப் போட்ட எழுத்தை தமிழ் மக்களுக்குக் கடத்தியிருப்பார் சிவாஜி. அந்த அனல்கனல் எழுத்தாளர் கலைஞர். இது 3-வது சக்ஸஸ்.

“எல்லாம் நல்லாருக்கு. ஆனா, அந்தப் பையன் வத்தலும் தொத்தலுமா சரியா இல்லியே முதலியார். அவனைத் தூக்கிட்டு வேற ஆளைப்போட்டு படத்தை திரும்பவும் எடுத்துருங்க” என தயாரிப்பாளர் ஜாம்பவான் ஏவி.மெய்யப்பச் செட்டியார் படத்தின் சக தயாரிப்பாளரான பெருமாள் முதலியாருக்கு அறிவுரையாகவும் கட்டளையாகவும் சொல்ல, அவற்றையெல்லாம் கடந்து, “இந்தப் பையன் மேல நம்பிக்கை இருக்கு. நல்லாப் பண்ணுவான்னு தோணுது. கொடுத்துதான் பாப்போமே செட்டியார்” என்று பெருமாள் முதலியார், நாசூக்காகச் சொன்னது, கலைத்தாயின் லீலையோ மகிமையோ... என்னவோ?

குணசேகரன் எனும் சமகாலப் பிரதி

ரங்கூனிலிருந்து தமிழகத்தில் இறங்குகிற குணசேகரனாக வரும் சிவாஜி, பிறகு மக்களின் மனங்களில் ஏறி சிம்மாசனமிட்டு உட்கார்ந்துகொண்டார். அந்தப் பணக்கார மிடுக்கை, அலட்சியமான சிரிப்பில் காட்டுவார், தாய்மண்ணுக்கு வந்த பூரிப்பை கண்கள் உணர்த்தும். ஆனால் தனிமையும் சபலமும் கைகோர்க்க, பணத்தையெல்லாம் இழந்து நிற்பார். அவரை இந்தச் சமூகம் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதை, கொஞ்சம்கொஞ்சமாக, உணர்த்திக் கொண்டே வருவார் குணசேகரன் என்கிற சமகாலத்தின் பிரதியாகப் படைக்கப்பட்ட சிவாஜி.

ஒரு பிச்சைக்காரனைப்போல, பைத்திய வேஷமும் கட்டிக்கொண்டு, இந்தச் சமூகத்தை சவுக்கால் விளாசுவது போல் இருக்கிற குணசேகரன் கதாபாத்திரம், கவனிக்கத்தக்கது. பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் குணாவை, போலீஸ்காரர் எழுப்புவார். “என்னடா முழிக்கிறே?” என்பார். “தூங்கிட்டிருக்கறவனை எழுப்பினா முழிக்காம என்ன பண்ணுவான்?” என்பார். அதில் நக்கல் லேசாகத்தான் இருக்கும். ஒரு கோபமும் சலிப்புமாகத்தான் வெளிப்படுத்துவார். அடுத்து, “என்ன, பிக்பாக்கெட்டா?” என்பார். உடனே சிவாஜி, “இல்ல, எம்ட்டி பாக்கெட்” என்று, பேண்ட் பாக்கெட்டை பிரித்துக்காட்டுவார். இதுதான் நக்கல். இந்த வித்தியாசத்தை, வசன உச்சரிப்பின் மூலமும் முகபாவனைகள் மூலமும் விநாடி நேரத்துக்குள் நமக்குக் கடத்திவிடுவார்.

கைத்தட்டல்களை அள்ளிய கலைஞன்

தங்கை கல்யாணியைப் பார்த்துவிடுவார். ஆனால் தங்கை என அழைக்கமுடியாத நிலை. ஆகவே அங்கேயே பைத்தியக்காரன்போல சுற்றிச்சுற்றி வருவார் சிவாஜி. ரங்கூனில் இருந்து இங்கே வந்து அகதி வாழ்க்கை வாழும் உண்மையான குணசேகரனே இவர்தானோ என்று பார்த்தவர்கள் நடிப்பால் மிரண்டுபோனார்கள். தமிழ் சினிமா உலகில், முதல் படத்திலேயே காட்சிக்குக் காட்சி கைத்தட்டல்களை அள்ளியது நடிகர் திலகமாகத்தான் இருக்கும்.

கோயிலையும் கோயிலில் நடக்கிற ஊழல்களையும் அர்ச்சகரின் அத்துமீறல்களையும் ஆன்மிகம் பேசுகிறவரின் எல்லை மீறல்களை யும் பொளேர் பொளேர் என முகத்தில் அறைந்து சொல்வதற்கு வீரிய வசனமும் அதை இன்னும் வீரியப்படுத்தும் உச்சரிப்புமாகக் கலந்துகட்டி, வண்டிச்சக்கரம்போல இரண்டு விஷயங்களும் உருண்டு வந்துகொண்டே இருக்கும்.

‘பராசக்தி’ என்று பெயர் வைத்து, ஆன்மிகக் கூட்டத்தை உள்ளே இழுத்ததுதான் முதல் வெற்றி. அதேபோல ‘சக்ஸஸ்’ என்கிற வசனத்தைத்தான் சிவாஜி முதலில் பேசி எடுத்தார்களாம். ஆனால், படம் முழுவதும் அடுத்தடுத்த தோல்விகளும் காயங்களும் எதிர்கொண்ட கதாபாத்திரம் குணசேகரன்! எவ்வளவு பெரிய முரண்...!

குத்தீட்டி வசனங்கள். அந்த குத்தீட்டியின் முனையில் இன்னும் கூர் செய்யப்பட்ட விதமாக ஏற்ற இறக்கத்துடன் கர்ஜித்து ஓலமிட்டு உலுக்கியெடுத்த குரல். இரண்டும் கைசேர்ந்து, இரண்டறக் கலந்து, மும்மடங்கு வசூல் சாதனை செய்தது. அவ்வளவு ஏன்... தடையே செய்யப்பட்டது.

காலம் மறக்காத நீதிமன்றக் காட்சி

ஐம்பதுகளிலிருந்துதான் தொடங்கி யது நாயகனுடனேயே இருக்கிற காமெடி கேரக்டர்களும். ஆனால், இங்கே குணசேகரனே ஹீரோ. அவரே காமெடியன். இந்த இரண்டையும் வெகு அழகாகப் பிரித்தாள, சிவாஜியாலும் அவர் கண்களாலும் குரலாலும் மட்டுமே முடியும்.

ஓ... ரசிக்கும் சீமானே, ‘ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசுகாரியத்தில் கண்வையடா தாண்டவக் கோனே, முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே, கா கா கா..., என்கிற பாடலின் போது, ஒவ்வொருவித சூழல். மனதில் ஒவ்வொருவிதமான நிலை. ஒரு குணசேகரனாகவே மாறியிருப்பார் சிவாஜிகணேசன்.

நீதிமன்ற இறுதிக்காட்சியில் குற்றவாளிக்கூண்டுக்குள் நின்று கொண்டு, நீதிபதியை (கவிஞர் கண்ணதாசன்) பார்த்து, சிவாஜியின் பார்வையில் பாதியும் குரலில் மீதியுமாய் தெறித்துக்கொண்டே இருக்கிற வசனங்கள், எரிமலைக்கு நிகரானவை. இரண்டு கைகளையும் கூண்டில் வைத்துக்கொண்டு, அவலங்களையும் அவமானங்களையும் பரிசாகப் பெற்ற முகத்தில், நொடிக்கொரு எக்ஸ்பிரஷன்கள் காட்ட, சிவாஜியால் மட்டும்தான் முடியும். “கோயில் கூடாது என்றேன் ஏன்..அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக” என்று சொல்லிக் கொண்டே வந்து, “இது கல்யாணியின் குற்றமா, யார் குற்றம்...?” என்று கேட்டுக்கொண்டே வந்து, ஷாட் பை ஷாட், வார்த்தைக்கு வார்த்தை ஏற்ற இறக்கங்களுடன் பேசிய வசனங்களை வைத்துக்கொண்டு, ‘சிவாஜி மாதிரி பராசக்தி வசனம் பேசிக் காட்றேன்’ என்று நடித்துக்காட்டி, வசனம் பேசி, சினிமாவுக்குள் நுழைந்து, ஜெயித்தவர்கள் உண்டு. ஆனால் என்ன... இதுவரை ஒரு சிவாஜி கூட அப்படி வந்துவிடவில்லை. ஏனென்றால்... ஒரு கலைஞரின் வசனம்... ஒரு பராசக்தி சினிமா... ஒரேயொரு நடிகர்திலகம்!

பராசக்தி என்று பெயர் வைத்து, ஆன்மிகக் கூட்டத்தை உள்ளே இழுத்தது தான் முதல் வெற்றி. ‘சக்ஸஸ்’ என்ற வசனத்தைத்தான் சிவாஜி முதலில் பேசி முதல்நாள் முதல் காட்சியை எடுத்தார்களாம். ஆனால், படம் முழுவதும் தோல்விகளையும் காயங்களையும் எதிர்கொண்ட கதாபாத்திரம் குணசேகரன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x