Published : 26 Oct 2018 10:44 AM
Last Updated : 26 Oct 2018 10:44 AM
‘ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா’, ‘ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது’, ‘அமைதி இல்லாத என் மனமே’, ‘நீதானா என்னை அழைத்தது’, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘தேசுலாவும் தேன்மலராலே….’ போன்ற காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களைப் பாடி, நம் நினைவுகளில் உறைந்திருப்பவர் கண்டசாலா.
இசைப் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்த கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ், சிறுவயதிலேயே இசையின் மீது அளவற்ற ஈடுபாடு காட்டினார். நாட்டுப்பற்றுடன் இருந்ததால் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கெடுத்தவர் இவர். நாடு விடுதலை அடைந்த பிறகே இசையில் முழு மனதாக ஈடுபட்டார்.
கண்டசாலாவின் இசைப் பயணம் தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளைக் கடந்து சகாப்தம் படைத்தது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய கண்டசாலாவுக்கு ஐ.நா. சபையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.
தனித்துவமான குரல்
கண்டசாலா பாடும் பாடல்களில், ஒரு பாடல் எத்தகைய உணர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கிறதோ, அந்த உணர்ச்சி அவரின் குரலிலும் உரிய முறையில் வெளிப்படும். இது எல்லா பாடகர்களிடமும் வெளிப்படும் பொது அம்சமாக இருந்தாலும் கண்டசாலாவின் வித்தியாசமான குரல் வளம், அந்தப் பொதுவான அம்சத்தின் உச்சமாக இருக்கும். அவர் பாடும் பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட எல்லா உணர்வுகளும் அநாயசமாக வெளிப்படும். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர்.
திரைத் துறையில் பாடகராகத் தொடங்கிப் பல திரைப்படங்களைத் தயாரித்து, இசையமைப்பாளராகி, பலருக்கும் இசை குருவாக விளங்கியவர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, துளு ஆகிய பல மொழிகளில் இவர் குரல் ஒலித்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக் காரணமாக இருந்ததோடு, அதன் தலைவராகவும் பதவிவகித்தவர். தனது இசையாலும் குரலாலும் மொழி எல்லை கடந்து மகிழ்வித்த கண்டசாலா 52 வயதிலேயே மறைந்தார்.
கண்டசாலா புரஸ்கார் விருது
கண்டசாலாவின் நினைவைப் போற்றும் வகையில் நடனமணியும் அவரின் மருமகளுமான பார்வதி ரவி கண்டசாலா, அவருக்கு நாட்டிய சமர்ப்பணம் செய்துவருகிறார். இவர் தனது நடனப் பள்ளியான `கலாபிரதர்ஷினி’ மூலம் கண்டசாலா இசையமைத்துப் பாடிய பாடல்கள் பலவற்றுக்கு, நடன வடிவம் கொடுத்து, `கான கந்தர்வ கண்டசாலா சமர்ப்பணம்’ எனும் தலைப்பில் அரங்கேற்றியிருக்கிறார்.
கண்டசாலாவின் 96வது பிறந்தநாளை ஒட்டி நாரதகான சபாவில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் பிரபல நடனக் கலைஞர்கள் வைஜெயந்திமாலா பாலி, சி.வி.சந்திரசேகர், தனஞ்ஜெயன், சாந்தா தனஞ்ஜெயன், ஷோபா நாயுடு, சரோஜா வைத்தியநாதன், லீலா சாம்சன் ஆகியோரின் நாட்டிய சமர்ப்பணம் நடந்தது. அவர்களுக்கு கலா பிரதர்ஷினி - கண்டசாலா புரஸ்கார் விருதுகளை பார்வதி ரவி கண்டசாலா வழங்கி கவுரவித்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT