Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM

இந்த எக்ஸ்பிரஸ் இனி நிற்காது!: பிரசாந்த் பேட்டி

பொன்னர் சங்கர் , மம்பட்டியான் படங்களைத் தொடர்ந்து சாகஸம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் பிரஷாந்த். ‘டூப் இல்லாத ஹீரோ’ என்று ஸ்டண்ட்மேன்களால் பாராட்டப்படும் பிரஷாந்த், ஆக்‌ஷன் காட்சிகளில் எப்போதும் தன்னைத் தனித்துக் காட்டி வந்திருக்கிறார். பல காதல் கதைகளில் நடித்து வரிசையாக வெற்றிகள் கொடுத்திருக்கும் பிரஷாந்துக்கு சாகஸம் மிகப் பெரிய ஆக்‌ஷன் படமாகத் தயாராகிவருகிறது. சென்னை பின்னி மில் வளாகத்தில் படப்பிடிப்பிலிருந்த பிரஷாந்தைச் சந்தித்தபோது, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனிடம், அந்தக் காட்சியில் வரும் விஷுவல் எஃபெக்ட்டை எப்படி அமைக்கப் போகிறோம் என்பதை விளக்கிக்கொண்டிருந்தார். ஆமாம், சமீபகாலமாகத்தான் நடிக்கும் படங்களின் விஷுவல் எஃபெக்ட் டைரக்டராகவும் பணிபுரியும் அவர் நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது...

செம்பருத்தி, ஜீன்ஸ், வின்னர், படங்களில் பார்த்த அதே பிரஷாந்த். உங்களுக்கு வயதே ஆகாதா? தவிர சிக்ஸ் பேக்கைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்களே?

ரொம்ப சிம்பிள். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவேன். இரண்டரை மணிநேரம் ஜிம்மில் இருப்பேன். காலை, இரவு பிரார்த்தனை செய்யப் பிடிக்கும். இரவு படப்பிடிப்பு இருந்தால் மட்டும் விழித்திருப்பேன். மற்ற நாட்களில் சரியாகப் பத்து மணிக்குத் தூங்கப் போய்விடுவேன். இதுதான் எனது ஃபிட்நெஸ் ரகசியம். பொன்னர் சங்கர் படத்துக்கு வாள் சண்டை போட வேண்டியிருந்ததால் 20 கிலோ எடை ஏற்றினேன். ஏற்றும்போதும் கஷ்டம், இறக்கும்போதும் கஷ்டம்தான். ஆனால் சிக்ஸ் பேக்கை முறையாகச் செய்தால் நோ பெயின் மோர் கெயின்.

அவ்வப்போது கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்வதால் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்களா?

நான் நடித்த ஏதாவது ஒரு படத்தைக் குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று உங்களால் சொல்ல முடியுமா? என் ஒவ்வொரு படமும் மொத்தக் குடும்பத்துக்குமான பொழுதுபோக்கு படங்களாக இருக்குமே தவிர, அதில் கொடூரமான வன்முறையோ, ஆபாசமோ இருக்காது. ஆக்‌ஷன் என்றாலும், காதல் கதைகள் என்றாலும் யதார்த்தமாக இருக்குமே தவிர அதில் கற்பனை குறைவாகத்தான் இருக்கும். இதனால் இந்தப் பிரஷாந்த் என்றைக்கும் ரசிகர்களின் செல்லப்பிள்ளைதான். இண்டர்நெட் வளரும் கட்டத்தில் இருந்த 90களிலேயே எனக்கு இணையத்தில் பத்து லட்சம் வெளிநாட்டு வாழ் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போது அதைவிடப் பத்து மடங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்கு வரும் ஈமெயில்களுக்கு இப்போதும் நானே சளைக்காமல் பதில் அனுப்புகிறேன். பொது இடங்களில் நான் ரசிகர்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் கேட்கிற முதல் கேள்வி “ அடுத்த படம் எப்போ சார்?” என்பதுதான். ஒரே இரவில் புகழ்பெறுவதைவிட ஒரு நடிகன் சுலபமாகப் பெயரைக் கெடுத்துக்கொள்ள முடியும். ஆனால் ரசிகர்களிடம் ‘க்ளீன் அண்ட் கம்ப்ளீட் ஆக்டர்’ என்று பெயர் வாங்குவது அத்தனை சுலபமல்ல. அந்த இடத்தை எனக்கும் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எப்போதும் ஒரு முழுமையான படத்தைக் கொடுக்க வேண்டும் என்று சரியான கதைக்காகக் காத்திருப்பதால் எனக்கு எனக்கு நானே எடுத்துக்கொள்ளும் இடைவெளி இது.

பிரஷாந்த் அப்பாவின் விரலைப் பிடித்துக் கொண்டு திரியும் ஹீரோ என்ற பேச்சு இப்போதும் இருக்கிறதே?

அப்படியொரு மாயையை கிரியேட் செய்தவனே நான்தான். சினிமாவில் நல்லவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதேநேரம் அடுத்தவர்களைக் கெடுக்க நினைப்பவர்களும் உண்டு. அப்படிப்பட்ட சிலர் வாங்க பாண்டிச்சேரி போகலாம், கோவா போகலாம், பாங்காக் போகலாம் என்று என்னை இழுத்ததுண்டு. அவர்களுக்கெல்லாம் அப்பாவின் பெயரைச் சொல்லித் தப்பித்துக்கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்டவர்கள் யாரும் என்னை மறுபடி நெருங்கக் கூடாது என்பதற்காக நான் அமைத்துக்கொண்ட பாதுகாப்பு வளையம் அது. அப்பாவைப் போல எனக்குச் சுதந்திரம் கொடுத்தவர் யாருமில்லை. அவர் எனக்கு பெஸ்ட் ஃபிரெண்ட். அப்பாவைத் தூரமாக நின்று விமர்சிக்கிறவர்கள் அவரிடம் பழகிப் பார்த்த பின்பு அவர் எத்தனை இனிமையான மனிதர் என்பதைப் புரிந்துகொள்வார்கள். அவரிடம் நல்ல பழக்கங்களை மட்டுமல்ல, சினிமா இயக்கத்தையும் தயாரிப்பையும் கற்றுக்கொண்டேன். நான் விஷுவல் எஃபெக்ட்ஸ், ரோபாட்டிக்ஸ் கற்றுக்கொண்டதும் அவரால்தான்.

சாகஸம் படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

ரவி என்ற சென்னை இளைஞனாக நடிக்கிறேன். ஒரு இளைஞன் தனது வாழ்நாளில் எவ்வளவு சாகஸங்களைச் செய்கிறான் என்பதுதான் படத்தின் தீம். வில்லனும் ஹீரோவும் கடைசி ரீலில்கூடச் சந்தித்துக்கொள்ளமாட்டார்கள். வில்லன் இதை உன்னால் செய்ய முடியாது என்று சவால் விடுவான். அதை நேர்மையான வழியில் புத்திசாலித்தனமாகச் செய்து முடிப்பவன்தான் ரவி. அதேபோல இந்தக் கதையின் நாயகன் ரவி செய்யும் சாகஸங்களுக்காகவே ரசிகர்கள் திரும்பத் திரும்ப இந்தப் படத்தைப் பார்க்க வருவார்கள்.

படத்தின் இயக்குநர் அருண் வர்மாவைப் பற்றிச் சொல்லுங்கள்.

இயக்குநர் மேஜர் ரவியின் உதவியாளர். மேஜர் ரவி, மக்கள் மத்தியில் பிரபலமான சம்பவங்களையும், செய்திகளையும் கொண்டு கதை எழுதிப் படமாக்குவார். அவரது படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் அபாரமாக இருக்கும். அருண் வர்மா தனது குருவிடமிருந்து ஆக்‌ஷன் காட்சிகளை எப்படிப் பிரமாண்டமாகப் படமாக்க வேண்டும் என்பதை நன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். கதையைப் பொறுத்தவரை ரொம்பவே ஃபிரெஷ்ஷாக யோசித்திருக்கிறார். மேஜர் ரவியின் நியூஸ் ஆங்கிள் இவரது கதையில் இருக்காது. இந்தக் கதை இன்றைய இளைஞர்களின் வேகத்துக்கு நாம் எப்படித் தீனி போட வேண்டும் என்பதை டிஸ்கஸ் செய்கிறது.

நர்கீஸ் ஃபக்ரியை எப்படி ஒப்பந்தம் செய்தீர்கள்?

அப்பாவுக்கு பாலிவுட்டில் இருக்கும் பெயர்தான் முக்கியக் காரணம். நர்கீஸ் சாகஸம் படத்தின் கதையைக் கேட்டார். பாடலைக் கேட்டார். பாடல் வரிகளின் அர்த்தத்தைக் கேட்டார். ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பில் எனது நடனத்தைப் பார்த்துவிட்டு, அவருடைய வேகத்துக்கு ஆடும்படி கேட்டுக்கொண்டார். அழகான பெண்கள் கேட்டால் நமக்குத்தான் மனசு தாங்காதே. நர்கீஸுக்காக காத்ரீனா கைஃபின் மேக்கப் மேன் சுபாஷை அழைத்து வந்தோம். அவர் ஆடிய பாடலுக்கு மொத்தம் 12 உடைகள். நம்ம ஊர் தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய், மிளகு ரசம் எல்லாமே அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. நர்கீஸ் தற்போது நடித்துவரும் ‘ஸ்பை’ என்ற ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் புத்தாபெஸ்ட்டில் நடக்கிறது. இந்தப் பாடலுக்கு ஆட நேரே அங்கிருந்து வந்ததால்.. ‘ஹாலிவுட்டில் ஃப்ளைட் ஏறி , பாலிவுட்டில் டிரெயின் மாறி கோலிவுட்டில் எனக்காக வந்தவளே’ என்று மதன் கார்க்கி பாடல் எழுதிக் கலக்கிவிட்டார். நர்கீஸ் தமிழில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.

பிரஷாந்தின் அடுத்த பாய்ச்சல்?

தமிழில் நிஜமான ஒரு மார்ஷியல் ஆர்ட் படம் தர வேண்டும். அது ஹாலிவுட்டை மிஞ்சும் விதமாக இருக்கும். அதற்கு நிறைய அவகாசம் இருக்கிறது. அதற்குமுன் என் ரசிகர்களை ஆண்டுக்கு இருமுறை சந்தோஷப்படுத்த முடிவுசெய்திருக்கிறேன். இனி பிரஷாந்த் எக்ஸ்பிரஸ் நிற்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x