Published : 26 Oct 2018 10:45 AM
Last Updated : 26 Oct 2018 10:45 AM

திரைப்பள்ளி 21: தெரிந்த முடிவு… திகைப்பூட்டும் திரைக்கதை!

தொடக்கம் முதலே, ஹாலிவுட் மசாலாக்கள், அழுத்தமான கதைப்படங்கள் இரண்டிலுமே மாறி மாறி நடித்து வந்திருப்பவர் வில் ஸ்மித். குறிப்பாக, வெவ்வேறு பயோபிக் கதாபாத்திரங்களில் ஒரு கால இடைவெளியில் தொடர்ந்து நடிப்பதன் மூலமே, ரசிகர்கள் விரும்பும் தனது கோணங்கித்தனங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, அசலான, இயல்பான நடிப்புத்திறமையை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறவர்.

உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக 2001-ல் வெளியான ‘அலி’ படத்தில் அவரது கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் வில் ஸ்மித். பின்னர் வில் ஸ்மித் நடிப்பில், 2006-ல், அமெரிக்காவின் புகழ்பெற்ற பங்குத் தரகர், தொழில்முனைவர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் கிறிஸ் கார்டனரின் வாழ்க்கை வரலாறு, ‘த பர்சூய்ட் ஆஃப் ஹேப்பினெஸ்’ என்ற படமாக வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்காகவும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு வில் ஸ்மித் பரிந்துரைக்கப்பட்டார்.

வில் ஸ்மித்தின் விருதுக்கான போராட்டம் தொடரும் அதேநேரம், உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்த ‘த பர்சூய்ட் ஆஃப் ஹேப்பினெஸ்’ படத்தின் முடிவு, பார்வையாளர்களுக்கு தெரிந்த ஒன்றுதான். ஏனென்றால் கிறிஸ் கார்டனரின் வெற்றிக் கதை அமெரிக்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

அவர்களுக்கு உத்வேகம் அளித்த தனிமனித வாழ்க்கைக் கதைகளில் ஒன்று. ஆனால், கிறிஸ் எப்படி வெற்றிபெற்றார் எனும் அந்தப் படத்தின் தெரிந்த முடிவை நோக்கி, திகைப்பூட்டும் திரைக்கதை அரங்கேற்றும் நாடகம்தான் பார்வையாளர்களை இருக்கையில் இருத்தியது.

சூழ்நிலையே வில்லன்

வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் என்றில்லை, எவ்வகைத் திரைக்கதை என்றாலும் முதன்மைக் கதாபாத்திரத்தின் முக்கிய செயல் என்பது திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு போராட்டம்தான். பெரும்பாலான முதன்மைக் கதாபாத்திரங்கள், வில்லனை எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டியிருக்கிறது. இதனால், முதன்மைக் கதாபாத்திரத்தை, போராடுபவர் என்ற அர்த்தத்தைக் குறிக்கும்விதமாக, திரைக்கதையின் மொழியில் ‘புரட்டகானிஸ்ட்’ அல்லது ஹீரோ என்கிறோம்.

புரட்டகானிஸ்டை மட்டுமல்ல; அவரைச் சுற்றி இருக்கும் அனைவரையும் அழிக்க நினைப்பதால்தான் எதிர்மறைக் கதாபாத்திரத்தை ‘ஆன்டகானிஸ்ட்’ அல்லது வில்லன் என்று குறிக்கிறோம். ஆனால் எல்லா வாழ்க்கை வரலாற்றுப் படங்களிலும் ஆன்டகானிஸ்ட் என்பவர் ஒரு கதாபாத்திரமாக இருப்பதில்லை.முக்கியமாக பயோபிக் படங்களில் புரட்டகானிஸ்ட் எதிர்கொள்ளும் அவரது வாழ்க்கையின் எதிர்பாராத, ‘சூழ்நிலை’களே வில்லனின் இடத்தை எடுத்துக்கொண்டுவிடுகின்றன.

‘த பர்சூய்ட் ஆஃப் ஹேப்பினெஸ்’ படத்தில் அதன் புரட்டகானிஸ்ட் கிறிஸ் கார்டனருக்கும் வாழ்க்கைச் சூழ்நிலைதான் வில்லன்.

ஒரு தந்தையின் கதை

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு சேல்ஸ்மேனாக இருக்கிறார் கிறிஸ். அவரது மனைவி லிண்டா நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் தூய்மைப் பணியாளர். இவர்களுக்கு 5 வயதில் கிறிஸ்டோபர் என்றொரு மகன். வாடகை வீட்டில் வசிக்கும் இந்தத் தம்பதிக்கு, வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிந்தது. இடத்தை அடைக்கும் எக்ஸ்-ரே இயந்திரங்களுக்கு மாற்றாக, கையால் எளிதாக எடுத்துச் செல்லும் எலும்பு ஸ்கேனர் இயந்திரங்களை வாங்கி, தனது வீட்டில் அடுக்கி வைத்துக்கொண்டு, அவற்றை விற்பனை செய்யத் தொடங்குகிறார் கிறிஸ். அதுவரையிலான தனது சேமிப்பு அனைத்தையும் முதலீடு செய்து, அந்த ஸ்கேனர்களை வாங்கிய கிறிஸ், அவற்றை ஒவ்வொன்றாக அலைந்து திரிந்து விற்பனை செய்கிறார்.

ஸ்கேனர்களை விற்பதில் ஏற்படும் கால தாமதமும் குடும்பத் தேவைகளுக்கான பணத் தேவையால் விளையும் நெருக்கடிகளும் நேரெதிராக நின்று அவரை மூச்சுத்திணற வைக்கின்றன. ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல், மகனின் பிளே ஸ்கூலுக்கு பீஸ் கட்ட முடியாமல், வீட்டுக்கான அன்றாடச் சிறு தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல்போகவே, கணவன் மீது நம்பிக்கை இழக்கிறாள் லிண்டா.

எஞ்சியிருக்கும் ஸ்கேனர்களை விற்பதற்காக மல்லுக்கட்டும் கிறிஸை, சற்றும் எதிர்பாராத நிலையில் லிண்டா பிரிந்து செல்கிறாள். தனது இயலாமையால் கூனிக் குறுகிப்போகும் கிறிஸுக்கு, இப்போது மகனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பெருங்கடமையும் சேர்ந்துகொள்கிறது.

இந்த நேரத்தில், டீன் விட்டர் ரினால்ட்ஸ் எனும் பெரும் பங்குத்தரகு நிறுவனத்தில் பணியாற்றும் ஜே ட்விஸ்டில் என்பருடன் இணைந்து வாடகை காரில் பயணிக்கிறார் கிறிஸ். அந்தப் பயணத்தின்போது ‘ரூபி க்யூப்’ (Rubik's Cube) சதுரம் ஒன்றைக் கைகளில் வைத்துக்கொண்டு, அதன் கட்டங்களைச் சில நிமிடங்களில் இணைத்துவிடும் கிறிஸின் திறமையைக் காணும் ஜே, கிறிஸுக்கு உதவ நினைக்கிறார். ஜே பணிபுரியும் நிறுவனத்தில் அதிகாரபூர்வ பங்குத்தரகராகத் தேர்வு செய்யப்படத் தரப்படும் ‘இன்டெர்ன்ஷிப்’ பயிற்சியில் சேர பரிந்துரைப்பதாகச் சொல்கிறார்.

கிறிஸும் அது சிறந்த வாய்ப்பு என்பதைத் தெரிந்தவர்தான். பயிற்சியில் சேர்ந்து எழுத்துத்தேர்வு மற்றும் சில்லறை பங்கு விற்பனை ஆகியவற்றில் வென்றால் பங்குத்தரகராக ஆகிவிடலாம். ஆனால், டாக்ஸிக்கு ஐந்து டாலர் கொடுக்கவே வழியில்லாத கிறிஸ், அந்தப் பயிற்சியில் அதிர்ஷ்டவசமாக இடம்கிடைத்தால் கூட அதற்கு அடிப்படைக் கட்டணம் செலுத்தவும் வக்கில்லை.

பயிற்சிக்கான நேர்காணலில் வெல்வதே பெரும் சவால் என்ற நிலையில், ஜேயின் பரிந்துரையுடன் மிக இக்கட்டான சூழ்நிலையில் கிறிஸ் அந்த வாய்ப்பை எப்படி முயல்கிறார், அவரால் பங்குத் தரகராக முடிந்ததா, மகனை அவரால் காக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் முடிவு.

தெரிந்த முடிவை நோக்கி

மனைவி கைவிட்டுச் செல்ல, வாடகை கொடுக்க முடியாமல் வீட்டிலிருந்து அதன் உரிமையாளரால் வெளியேற்றப் படுகிறார்கள் தந்தையும் மகனும். வீடற்றவர்களுக்கான விடுதியில் ஒருநாள் இரவு இடம்கிடைக்காமல் போகவே, ரயில் நிலையத்தின் கழிவறைக்குள் மகனுடன் வசிக்கும் மிகக் கொடுமையான தருணங்களைக் கடந்துவர, கிறிஸுக்கு அவரது தன்னம்பிக்கையும் உழைப்பும் மட்டுமே கைகொடுக்கின்றன.

கிறிஸ் இறுதியில் வெற்றிபெற்றுவிடுவார் என்பது தெரியும். என்றாலும் அவர் கடுமையான சூழ்நிலைகளை எப்படிக் கடந்து வருகிறார் என்பதையும் அவர் வெற்றிபெறும் தருணங்கள் தரப்போகும் பரவசங்களுக்காகவும் வரும் பார்வையாளர்களை ஈர்க்கும் முதல் அம்சம் ‘ஸ்டார் கேஸ்ட்’ ஆக இருக்கலாம். அதைத் தாண்டி, பயோபிக் திரைப்படங்களின் வெற்றி திரைக்கதை உருவாக்கும் திகைப்பூட்டும் தருணங்களில்தான் அடங்கியிருக்கிறது.

கிறிஸ் கார்டனரின் போராட்டம் மிகுந்த, உணர்ச்சிகரமான வாழ்க்கைத் தருணங்களில் திரைக்குத் தேவையானவை மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டு, காட்சிரீதியாக அவை எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ‘த பர்சூய்ட் ஆஃப் ஹேப்பினெஸ்’ படத்தைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். கிறிஸ் கார்டனரின் வெற்றி, முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளத் தக்க, தர்க்க ரீதியான முடிவாக இருந்தபோதும் அதை அடைவதற்கான போராட்டங்களே படத்தைத் தாங்கி நிறுத்தின.

ஆனால் சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ எனும் ஒரு இளைஞனின் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் கதையின் முடிவு, பார்வையாளர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக வடிவைக்கப்பட்டிருந்தது. அந்தத் திரைக்கதையின் மற்ற எல்லா அம்சங்களும் பாராட்டப்பட்டது போலவே அந்தப் படத்தின் முடிவும் பாராட்டப்பட்டது.

சமூகத்தில் பெரும்பான்மையாக நிலவும் பொதுப்புத்தியின் சமரசங்களுக்கு உட்படாமல் படத்தின் முடிவை அமைத்திருந்தார் இயக்குநர்.

எதிர்பாராத அந்த முடிவை, பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் கலாச்சார சூழல் எப்படிப் பங்காற்றியது என்பதையும் ஒரு திரைக்கதைக்கு கலாச்சாரரீதியான அடையாளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் அடுத்த வகுப்பில் அலசுவோம்.

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x