Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM
ஆயிரம் உண்மைக் கதைகளில் இருந்து உத்வேகம் பெற்று எடுக்கப்பட்ட கற்பனைக் கதை என்ற அறிவிப்போடு தொடங்கும் ஃபிராக், அந்த ஆயிரமாயிரம் கதைகளுக்கு நியாயம் செய்துள்ள ஒரு படம். முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை உறைய வைத்து, கட்டிப் போடுகிறது.
ஷேக்ஸ்பியரின் 'மேக்பெத்' நாடகத்தில் அரசனைக் கொல்லும் லேடி மேக்பெத்தின் கைகளில் இருந்து ரத்தக்கறை அகல்வதே இல்லை. மீண்டும் மீண்டும் கைகளைக் கழுவிக் கொண்டேயிருக்கும் மனப்பிறழ்வு நிலைக்கு அவள் செல்கிறாள்.
மதக் கலவரத்தின்போது தங்கள் உயிரைப் பாதுகாக்கச் சொல்லி சிலர் கதவைத் தட்டும் ஓசையும், உயிருக்குப் போராடும் முஸ்லிம் பெண் ஜன்னலில் நின்று மன்றாடும் சித்திரமும், லேடி மேக்பெத்தைப் போல தினம்தினம் மனதில் எதிரொலித்து பயமுறுத்திக்கொண்டே இருக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண், என்ன செய்வாள்?
ஒரு குற்றத்துக்குத் துணையாக இருப்பவரும் குற்றவாளிதான் என்கிறது சட்டம். ஆனால், ஒரு குற்றம் நடக்கும்போது வாயடைக்கப்பட்டவள், முடக்கப்பட்டவள் என்ன செய்ய முடியும்? அவளது கணவன், மதத் தீவிரவாதி. வேலைக்காரச் சிறுவனின் பெயரை, வலிந்து கேட்டறிவதன் மூலம் அவனுடைய மதத்தை அறியத் துடிக்கும் மாமனாருக்கு அவள் மருமகள். முஸ்லிம் பெண்களை, "ஒரு பழத்தைச் சுவைப்பது" போலக் கணவனின் நண்பன் கலவரத்தில் துய்த்திருக்கிறான். இவற்றையெல்லாம் சந்திக்கும் ஒரு இந்துப் பெண், என்ன பெரிதாகச் செய்துவிட முடியும்?
மதக் கலவரத்துக்குப் பிந்தைய பூமியில் இருக்கும் அந்தப் பெண்ணுக்கும், இப்படிப்பட்ட கடுமையான மனஅழுத்தம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை குற்றஉணர்வு மனதை அழுத்தும்போதும், கொதிக்கும் எண்ணெயால் சூடு போட்டுக் கொள்ளும்போதும், அவளது மனஅவசங்கள் நம்மைச் சுடுகின்றன. சிறந்த நடிகையான தீப்தி நாவல் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
தோழியின் கேள்வி
தீப்தி நாவலைப் போலவே குற்றஉணர்வை அனுபவிக்கும் மற்றொரு இந்து இளம்பெண், தன் கீழ் வீட்டு முஸ்லிம் தோழியின் பரிதாப நிலையைக் கண்டு, அவள் சம்பாதிக்க உதவுகிறாள். கைக்குழந்தையோடு இருக்கும் அவளது முஸ்லிம் தோழி, மதக் கலவரம் நடந்த நேரத்தில் வெளியூரில் இருந்ததால் உயிர் பிழைத்தவள்.
இந்துத் தோழியின் உதவியோடு மருதாணி இட்டுச் சம்பாதிக்கப் போகிறாள் அவள். இருந்தபோதும், தன் வீட்டை எரித்தது, அந்த இந்துத் தோழியாக இருக்கலாமோ என்ற கேள்வி அவளது அடிமனதை அரித்துக்கொண்டே இருக்கிறது.
ஒரு முஸ்லிம் மேல்தட்டு இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட படித்த மேல்தட்டு குஜராத்தி பெண், கண்ணெதிரில் மனிதர்கள் கொன்று குவிக்கப்படுவது கண்டு பதறிப் போகிறாள். அவளது கணவனோ 'மதில் மேல் பூனை'யாகக் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறான். தற்போது அவன் வசிப்பது, சொந்த ஊர். ஆனால், மதக் கலவரத்துக்குப் பின் தொடர்ந்து அங்கு வாழ முடியாது என்று நம்புகிறான். தான் ஒரு முஸ்லிம் என்பதைத் தைரியமாக வெளியே சொல்ல முடியுமா, தான் இங்கே தொடர்ந்து வாழ முடியுமா, நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுச் செத்து போக வேண்டுமா என்பது போன்ற கேள்விகளால் குத்திக் கிழிக்கப்படுகிறான்.
மற்றொருபுறம் எறும்பு போல ஆட்டோ ஓட்டி சேர்ந்த காசு மூலம் சிறுகச்சிறுகப் பெருகிய வசதிகள் அனைத்தும், சாம்பலாக்கப்பட்டது கண்டு இந்துக்களைக் கொல்லத் துடிக்கிறான் முஸ்லிம் ஆட்டோ டிரைவர். அவனுடைய பழிவாங்கல் உணர்வு நொறுக்கப்பட்டு, எப்படிப்பட்ட துர்அவலமான முடிவை அடைகிறான் என்பதைச் சொல்லும்போது படம் முகத்தில் அறைகிறது.
ஆண்களும் பெண்களும்
இப்படி முஸ்லிம் ஆண்கள் மனநெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டவர்களாகவும், பெண்கள் இந்துவோ, முஸ்லிமோ தர்க்க ரீதியாகவும், அடிப்படை மனித அறம் சார்ந்து செயல்படுவதையும் பதிவு செய்துள்ளது இந்தப் படம்.
நந்திதா தாஸ் போன்ற படைப்பாளுமை மிகுந்த ஒரு பெண் இயக்கியுள்ளதால்தான், இப்படிப்பட்ட வித்தியாசமான, வலுவான கதாபாத்திரச் சித்தரிப்பு நிகழ்ந்துள்ளது. பெண்கள் வழியாகத்தான் சாதியும் மதமும் செயல்பட்டுவருகின்றன என்ற அடிப்படை நம்பிக்கையை இப்படம் கட்டுடைக்கிறது.
பொதுவாகக் குடும்ப நிறுவனம் மூலமாகத் தங்களை நிறுவிக்கொள்ளும் சாதியும் மதமும், பெண்களின் வழியாகத்தான் நடைமுறைச் செயல்பாடுகளாக உருவெடுக்கின்றன. பெண்கள் பெரிதும் கடைப்பிடிக்கும் சடங்குகள், உந்துதல் வழியாகவே அவை தங்களை நிகழ்த்திக் கொள்கின்றன என்ற நம்பிக்கையை உடைத்து, பெண்களைப் பற்றிய காத்திரமான சித்தரிப்பை இப்படம் முன்வைக்கிறது.
எப்பொழுதுமே பற்றியெரியும் பிரச்சினைகள், திரைப்படக் கருவாக மாறுவது உண்டு. அதிலிருந்து சற்றே மாறுபட்டு ஓர் மதக் கலவரத்துக்குப் பிந்தைய காலம் பற்றி பேசுகிறது இந்தப் படம். வெவ்வேறு மதம், வர்க்கம், வயது சார்ந்தவர்களின் பின்னணியில் இருந்து இப்படம் பிரச்சினையை அணுகுகிறது. அவலமும், நம்பிக்கையும் சிதறிக் கிடக்கும் பாதையில் நகரும் 'ஃபிராக்', எந்தப் பக்கமும் சாயாமல் நடைபோடுகிறது. தேர்ந்த நடிகையாக அறியப்பட்ட நந்திதா தாஸ் இயக்கிய முதல் படம்.
ஆதரவற்ற மோஷின்
கலவரத்தில் தன் கண் முன்னாலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரும் கொடூரமாகக் கொல்லப்படுவதை மறைந்திருந்து பார்க்கிறான் சிறுவன் மோஷின். திறந்தவெளிச் சிறை போலிருக்கும் மறுவாழ்வு முகாமில் எந்தப் பற்றுதலும் இன்றி அவன் வெளியேறுகிறான். ஆனால், மதத் தீவிரவாதமோ பல்வேறு வடிவங்களை எடுத்து அவனைத் துரத்துகிறது.
எந்தப் பற்றுக்கோடும் கிடைக்காமல், கடைசியில் புறப்பட்ட இடத்துக்கே அவன் வந்து சேருகிறான். வாழ்க்கையைப் பற்றியும், உலகின் எதிர்காலத்தைப் பற்றியதுமான மிகப் பெரிய கேள்விகளுடன், சோகத்தில் உறைந்து கிடக்கின்றன அவனது கண்கள்.
“மனிதன் சக மனிதனைச் சாகடிப்பதுதான், உலகின் மிகப் பெரிய கொடுமை” என்று படத்தில் முதிய முஸ்லிம் இசைக்கலைஞராக வரும் நஸீருத்தின் ஷா கூறும் வசனம், எத்தனை தலைமுறைகள் தோன்றினாலும் மாறாது. சிறுவன் மோஷினின் கண்களில் உறைந்து கிடக்கும் கேள்விகளும் அதையேதான் சொல்கின்றன. அந்தக் கண்கள் நம் காலத்தைப் பற்றிய மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்புகின்றன. அந்தச் சந்தேகம் நம்மைப் பற்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT