Published : 12 Oct 2018 11:29 AM
Last Updated : 12 Oct 2018 11:29 AM

திரைப் பார்வை: காதலுக்குள் மரியாதை! (96)

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட பல திரைப்படங்களுக்கு அந்த எதிர்பார்ப்பே எதிரியான கதைகள் ஏராளம். சில படங்கள் எதிர்பார்க்கப்பட்டதைவிடச் சிறப்பாக இருப்பதும் நிகழ்ந்துவிடுவதுண்டு. கடந்த வாரம் வெளியான ‘96’ அப்படிப்பட்ட ஒன்றுதான். ‘96’ அழகான காதல் படமாகவும் அரிதான காதல் படமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அரிதான காதல் படம் என்பதால், இது குறைகளற்ற படம் என்றோ, இதுவரை வெளியான காதல் படங்களிலேயே ஆகச் சிறந்தது என்றோ பொருளல்ல. இந்தப் படத்திலும் பல குறைகள் உண்டு, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஒரு தலை ராகம்’, ‘வருஷம் 16’, ‘இதயம்’, ‘காதல் கோட்டை’ ‘காதலுக்கு மரியாதை’, ‘அலைபாயுதே’, ’அழகி’, ‘ஆட்டோகிஃராப்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ எனக் குறிப்பிட்ட கால இடைவெளியில் வரும் காதல் படங்கள், அந்தந்த காலகட்டத்துக்கான காதல் படங்களாகக் கச்சிதமாகப் பொருந்திவிடும். அப்போது காதலித்துக்கொண்டிருப்பவர்களால் அவை கொண்டாடப்படும். இந்தப் படமும் இந்தக் காலகட்டத்துக்கான காதல் படம்தான்.

காதலியாகச் சுருங்காத நாயகி

ஆனால், இந்தப் படம், இதுவரை வந்த காதல் படங்களில் இல்லாத பலவற்றைச் சாதித்திருக்கிறது. காதலை அணுகிய விதத்தில் அரிதான படம் என்று சொல்லத்தக்கதாகிறது. காரணம் கதாநாயகி ஜானு என்ற ஜானகிதேவியின் கதாபாத்திர வார்ப்புதான். ஜானு, ராம் என்ற ராமச்சந்திரனின் காதலி மட்டும் அல்ல. ராம் மீதான அவளது காதலும் அந்த நினைவுகளிலிருந்து அவள் மீளாமல் இருப்பதும்கூட அவளது ஆளுமையின் பகுதிகள்தாம்.

விஜய் சேதுபதிக்கு சாதாரணமாகவும் த்ரிஷாவுக்கு மாஸ் கதாநாயகர்களுக்குத் தருவதைப் போன்ற அறிமுகக் காட்சியையும் மிக இயல்பான விஷயங்களாகத் தூவியிருக்கிறார் இயக்குநர். 90-களில் நடந்த முன்கதை, இருவரது பார்வையிலிருந்தும் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாதியில் இருவருக்குள்ளும் நிகழும் உரையாடல், இருவரது வாழ்க்கை பற்றியும் சமமாகப் பேசுகிறது. இப்படி இறுதிவரை இருவருக்கும் சமமான முக்கியத்துவத்துடன் நகர்வதில் காதல் இரு பாலருக்கும் பொதுவான உணர்வு என்பது அழுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

பழைய காதல் புதுப்பிக்கப்படும் நேரத்தில், ராமுக்கு திருமணமாகவில்லை என்பதும் ஜானு ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதும் அடுத்தகட்டப் பாய்ச்சல். 37-38 வயதுப் பெண்ணின் பழைய காதல், பழைய நண்பர்களின் சந்திப்பில் மீட்டெடுக்கப்படுகிறது. அப்படி மீட்டெடுக்கப்படும் அற்புதம் நிகழும் நாளை, தன் பழைய காதலுனுடன் கழிப்பதும் அவளது முடிவுகள்தாம். நல்ல மனைவி அல்லது தாய்க்கு தமிழ் சினிமா வகுத்து வைத்துள்ள இலக்கணங்களை உடைக்கிறாள் ஜானு. “சந்தோஷமாக இருக்கிறாயா?” என்று ராம் கேட்க, “நிம்மதியாக இருக்கிறேன்” என்று பதில் சொல்வதன் மூலம், தன் கணவன் மீதும் அன்பு கலந்த மரியாதை இருப்பதை வெளிப்படுத்துகிறாள்.

ராம் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி ஜானுவைக் குடைகிறது. ஆனால், அது மற்ற பல காதல் படங்களில் இருப்பதுபோல் குற்ற உணர்வல்ல. சொல்லப் போனால், ஜானுவின் நினைவுகளால்தான் ராம் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை அவனது வாயாலேயே கேட்டறிவதில் அவளுக்கு ஒரு சின்ன திருப்தியும் இருக்கிறது. இருந்தாலும் அவன் மீதான அக்கறையால் மட்டுமல்லாமல், இவ்வளவு நல்லவன், வேறோரு பெண்ணுக்குக் கணவனானால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை இனிமையாக இருக்குமே என்ற எண்ணத்தினால் அவனைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி, மெல்லிதாக வற்புறுத்துகிறாள். அதுவும்” நீ ஒரு ஆம்பளை நாட்டுக்கட்டை டா” என்று சொல்லிக் கிண்டலடிக்கிறாள்.

ஊடாடும் மரியாதை

‘உல்லாசம்’ படத்தில் பாலகுமாரன் ஒரு வசனம் எழுதியிருப்பார். அஜித்திடம் அவரது வளர்ப்புத் தந்தை ரகுவரன், “ஒரு பொண்ணு உன்னக் காதலிக்கறது அவ உன் மேல வெச்சிருக்கிற மரியாதை டா” என்று சொல்வார். பாலகுமாரன் சொன்னதைப் போல் மரியாதையையும் உள்ளடக்கியதுதான் காதல், திருமண உறவு. இந்த மரியாதை இல்லாவிட்டால், ஒருவர் இன்னொருவரைச் சுரண்டுவதாகவே அமையும். காதலர்களுக்கு இடையே ஊடாடும் மரியாதை என்பதை, மிக ஆழமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தியிருக்கிறது ‘96’.

ராம் எப்போதும் ஜானுவை மரியாதையுடனே அணுகுகிறான். அவளைத் தன் வீட்டுக்கு அழைக்கும்போதுகூட, பயந்துகொண்டேதான் கேட்கிறான். ராமின் மீதான ஜானுவின் மரியாதை இவ்வளவு வெளிப்படையாக இல்லை. சில இடங்களில் அவள் அவன் மீது அன்பான அதிகாரம் செலுத்துவதுபோல்கூடத் தோன்றும். ஆனால் “மேனகை, ரம்பை ஊர்வசியை எல்லாம் உன்கிட்ட தனியா விட்டுவிட்டுப் போகலாம்” என்று ஜானு சொல்வது ராமின் மீதான கிண்டலைப் போல் வெளிப்பட்டாலும், அது அவன் மீது அவள் வைத்திருக்கும் மரியாதையும் நம்பிக்கையும்தான். “உன்னிடம் எந்தச் சூழலிலும் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்” என்று சொல்வதைவிட ஒரு ஆண் ஒரு பெண், மீதான மரியாதையை வேறெப்படி வெளிப்படுத்திவிட முடியும்.

புனிதமாக்கப்படாத காதல்

படம் முழுவதும் ராம் - ஜானு இடையில் பால் ஈர்ப்பு சார்ந்து எதுவும் நிகழ்வதில்லை. ஆனால் அந்தக் காதல் அப்படி இருப்பதால் அது புனிதமானது என்று எங்கும் கற்பிக்கப்படவும் இல்லை. அவர்களது காதலைப் பற்றிய வேறெதையுமே கூட படம் புனிதப்படுத்தவில்லை. ராம் தன் காதல் நினைவுப் பொக்கிஷங்களைச் சேகரித்து வைத்திருக்கும் பெட்டி திறக்கப்படும்போதோ, மழையில் நனைந்த ஜானு, ராமின் சட்டையை அணிந்துகொள்ளும்போதோ பின்னணி இசையும், கேமராக் கோணமும் ‘இது எப்பேர்ப்பட்ட காதல் பாருங்கள்’ என்று  மறைமுகமாகச் சொல்வதில்லை.

இதற்குக் காரணம் ராம் - ஜானு காதலை பிரேம்குமார் புரிந்துகொண்டு, இப்படியும் காதலிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இதுதான் சிறந்த காதல் என்று சொல்லவில்லை. அதுவே ‘96’ படத்தைச் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக ஆக்குகிறது.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x