Last Updated : 15 Aug, 2014 12:00 AM

 

Published : 15 Aug 2014 12:00 AM
Last Updated : 15 Aug 2014 12:00 AM

திரையில் ஒளிர்ந்த தேசபக்தி

இந்திய சினிமா தோன்றியதற்கும் தேசபக்திக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஆங்கில ஆட்சியின் கீழ் நமது நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டத்தில், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றிய பல வெளிநாட்டுப் படங்களை, தாதாசாகேப் பால்கே பார்த்தார். அப்படங்கள் தந்த உத்வேகத்தில் ஒரு இந்தியக் கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என நினைத்தார். அந்தக் கதை ‘ராஜா ஹரிச்சந்திரா’.

ஆனால் படம் தயாரிப்பதில் பால்கேவுக்குப் பொருளாதார ரீதியில் பல விதமான சிக்கல்கள் வந்தன. இதை அறிந்த சுதந்திரப் போராட்ட வீரரான பாலகங்காதர திலகர் அவருக்கு உதவ முன்வந்தார். அந்நாளில் செல்வாக்குடன் இருந்த தொழிலதிபர்கள் பலரையும் பால்கேவுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் ஒத்துழைப்புடன் பால்கே இந்துஸ்தான் ஃபிலிம் கம்பெனியை உருவாக்கினார். இந்தியர் ஒருவர் சொந்தமாகப் பட நிறுவனத்தைத் தொடங்குவதே அன்றைய நாளில் ஒரு பெரும் புரட்சிதான்.

இதேபோல் தென்னிந்தியாவில் சென்னை மாகாணத்தில் நடராஜ முதலியாரும் இந்தியன் ஃபிலிம் கம்பெனி என்ற பெயரில் ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை 1917-ல் தொடங்கினார். இப்படியாக இந்திய சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மக்கள் மத்தியில் தேசிய விடுதலை உணர்வைத் தூண்டி வந்தது.

காந்தியக் கொள்கைகளை, விடுதலை உணர்வை, ஜாதி, மதப் பாகுபாடுகளுக்கு எதிரான குரல்களை அன்றைய சினிமாக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தன. பிரிட்டிஷ் ஆட்சியின் அராஜகத்தையும் அன்றைய கலைஞர்கள் தங்கள் படங்களின் மூலம் பலவிதத்தில் வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஊட்டினர்.

சுதந்திரத்துக்கு முன்பே காந்தி திரைப்படம்

காந்தியைப் போல உருவ ஒற்றுமை கொண்ட டி.என். சம்பத் 1921-ல் வெளிவந்த ‘பக்த விதுரர்’ படத்தில் தன் தேசபக்தியை வெளிப்படுத்தினார். இவர்தான் கோஹினூர் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்தைத் தொடங்கியவர். மேற்சொன்ன இந்தப் படத்திற்கு முதலில் பிரிட்டிஷ் அரசு தடைவிதித்தது. தடைநீங்கி படம் வெளிவந்த பிறகு ‘ஹவுஸ்ஃபுல்’ காட்சிகளாக ஓடி இப்படம் இமாலய வெற்றியைப் பெற்றது.

1935-ல் வி.சந்தானம் ‘மகாத்மா’ என்னும் படத்தைத் தயாரித்தார். இந்தப் படம் மறைமுகமாகக் காந்தியைப் போற்றி எடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தப் படத்தின் தலைப்பை ‘தர்மாத்மா’ என மாற்ற உத்தரவிட்டது. ஆனால் அவர்களால் படத்தைத் தடைசெய்ய முடியவில்லை. இந்தப் படமும் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

போராட்டக் களத்தில் சூப்பர் ஸ்டார்கள்

சுதந்திர விடுதலைப் போராட்டத்திற்கும் கலைக்கும் ஒரு பாலத்தை அமைத்தவர் தீரர் சத்தியமூர்த்தி. அவர் ஒரு நாடகக்காரரும்கூட. சத்தியமூர்த்திதான் கே.பி.சுந்தராம்பாள், எம்.கே. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட அன்றைய சூப்பர் ஸ்டார்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியவர்; அவர்களைக் காதி அணியச் செய்து சுதேசி ஆடைகளையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார்.

தொடக்கக் காலத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தையும் காந்தியக் கொள்கைகளையும் ஆதரித்த படங்களுள் பழம் பெரும் இயக்குநர் கே. சுப்ரமண்யத்தின் படங்கள் முக்கியமானவை. 1939-ல் வெளிவந்த அவரது ‘பாலயோகி’ படம் சாதிக் கொடுமையை எதிர்த்தது. இதனால் அவர் தன் சாதியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார்.

அவரது மூன்றாவது படமான ‘தியாகபூமி’ (1939) விடுதலைக்கான காந்தியின் அழைப்பாக வெளிவந்தது. இந்தப் படத்தில் கோயில் பூசாரி சாம்புவாக பாபநாசம் சிவன் நடித்திருப்பார். இந்தப் பாத்திரத்தின் செயல்பாடுகள் காந்தியை நினைவுபடுத்தக்கூடியவை. அவரது மகள் சாவித்திரியாக எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்திருப்பார்.

இந்தப் படத்தின் தொடக்கக் காட்சியில் ஊருக்குள் வெள்ளம் வந்துவிடுவதால் அங்குள்ள தலித்துகளின் வீடுகள் நீரில் மூழ்கிவிடும். வீடற்ற தலித்துகளுக்குக் கோயிலுக்குள் அடைக்கலம் கொடுப்பார் கோயில் பூசாரி சாம்பு. பூசாரியின் இச்செயலால் அவர் சாதி விலக்கம் செய்யப்படுவார்.

படத்தின் பிற்பாதியில் அந்தப் பூசாரியின் மகளான சாவித்திரி கொடுங்கோன்மை மிக்க தன் கணவனுக்கு எதிராகக் குரல் எழுப்புவாள். இந்தப் படத்தின் கதை ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது.

இந்தப் படத்தை எஸ்.எஸ்.வாசன் விநியோகித்தார். சென்னை கெயிட்டி திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அரசு இப்படத்திற்குத் தடை விதித்தது. ஆனால் வாசன் திரையரங்கின் வாசலைப் பார்வையாளர்களுக்காகத் திறந்துவைத்தார். மக்கள் எல்லோரும் குவிந்தனர். போலீசாரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

விளைவு, தடியடி நடத்தப்பட்டது. இதனால் இந்தப் பிரச்சினை தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது. அன்றைய விடுதலைப் போராட்டத் தலைவர்கள் பலரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தடைசெய்யப்பட்டபோதும் இதில் இடம்பெற்ற ‘தேச சேவைசெய்ய வாரீர்’ என்ற பாடல் மக்கள் பலரிடமும் பாதிப்பை விளைவித்தது. கல்கி எழுதிய இந்தப் பாடலை டி.கே. பட்டம்மாள் பாடியிருப்பார்.

தமிழின் சுதேசி வளையல்கள்

முதல் பேசும் படமான ‘காளிதாஸில்ல் இடம்பெற்ற ‘ராட்டினமாம் காந்தி கை பானமாம்’ என்னும் பாடலும் மக்களிடம் விடுதலை வேட்கையை ஊட்டியது. 1935 வெளிவந்த ‘வள்ளி திருமணம்’ படத்தில் வள்ளியாக நடித்த டி.பி.ராஜலட்சுமி, பயிர்களைத் தின்ன வரும் பறவைகளை விரட்டுவதற்குப் பதிலாக அந்தக் காட்சியில் ‘வெள்ளை கொக்குகளை’ விரட்டுவார்.

அதே படத்தில் வளையல் வியாபாரியாக வரும் முருகக் கடவுள், வள்ளியிடம் ‘சுதேசி வளையல்’களை விற்பார். மேலும் பாரதியின் தேசபக்திப் பாடல்களை டி.கே.சண்முகம் அவரது சகோதரர்களும் தங்கள் நாடகங்களின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று தேசிய உணர்வை ஊட்டினர்.

இப்படியாக விடுதலைப் போராட்டத்தில் சினிமாவின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது.

சுதந்திரம் அடைவதற்குச் சில மாதம் முன்பு ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் தயாரித்து வெளியிட்ட ‘நாம் இருவர்’ (1947, ஜனவரி) படத்தில் டி.கே. பட்டம்மாள் பாடிய ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடல் பட்டி தொட்டிகள் எல்லாம் சுதந்திர வேட்கையைத் தூண்டின. இன்றைக்கு அந்தப் பாடலைக் கேட்டாலும் மனதில் தேசபக்தி சுடர்விடும்.

தமிழில்: ஜெய்​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x