Published : 03 Aug 2018 10:47 AM
Last Updated : 03 Aug 2018 10:47 AM
சென்ற வாரம் கேட்ட கேள்விக்கான பதில் ‘சலங்கை ஒலி’(1983) திரைப்படத்தில் வரும் ‘ஓம் நமச்சிவாயா’ என்ற பாடல். பாடியவர் ஜானகி. இந்தோள ராகத்தில் இசைஞானி அமைத்த ஓர்அருமையான பாடல். உண்மையான, உன்னதமானக் கலைஞனாகத் திரைப்படத்தில் வருவார் கமல்ஹாசன்.
போலிப் பெருமைக்காக நடனமாடுவதைப் பொறுக்க முடியாமல் போகும் அவரால் காட்சிக்கு மெருகு சேர்க்கும் வண்ணம் அமைந்த பாடல். ‘சந்த்ரகலாதரா சஹ்ருதயா’என்பது போன்ற தெலுங்கு மூலப் பாடல் மெட்டு சிதையாவண்ணம், ‘தங்க நிலாவினை அணிந்தவா’ என்றெல்லாம் அமைந்துள்ள வரிகளைக் கொண்டு அமைந்த பாடல் அது. சரியாகப் பதில் அளித்தவர்களுள் முதல்வர்களான நங்கநல்லூர் பத்மா, நெசப்பாக்கம் கிரி ஆகியோருக்குப் பாராட்டுக்கள்.
அதே இந்தோளத்தில் இன்னொரு இனிமையான பாடல் ‘உன்னால் முடியும் தம்பி’ (1988) படத்தில் இடம்பெற்ற ‘உன்னால் முடியும் தம்பி.. தம்பி’ என்ற பாடல். எஸ்.பி.பியின் குரலில் ஸ்வரங்களோடு அருமையாக அமைந்திருக்கும்.
‘கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம்நாடு என்றே நாம் ஆக்குவோம்’ என்பது போன்ற புலமைப்பித்தனின் வரிகளைக் கொண்ட இனியபாடல். அது போன்றே இன்னும் சில மறக்க முடியாத இந்தோள ராகப் பாடல்கள் ‘ஓ ஜனனி என் ஸ்வரம் நீ’(புதிய ராகம் - 1991) மற்றும் ‘பாட வந்ததோர் ராகம்’ (இளமைக் காலங்கள் -1983).
சோகத்தைச் சொல்லும் சந்திரகௌன்ஸ்
இந்தோளத்தில் நி யை மட்டும் கொஞ்சம் மாற்றினால் கிடைப்பது சந்திரகௌன்ஸ் என்ற ராகம். அதாவது ஸக1ம1த1நி2ஸ் என மேலே சொன்ன சில பாடல்களில் கூடச் சில இடங்களில் சந்திரகௌன்ஸ் எட்டிப் பார்க்கும். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூத்தி இந்த ராகத்தில் உருவாக்கிய மறக்க முடியாத பாடலாக ‘பாக்கியலட்சுமி’ (1961) என்ற படத்தில் வரும் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடலைச் சொல்லலாம்.
சுசீலாவின் குரலுக்கும் சிதார் இசைக்கும் சோகத்தைச் சொல்லும் சந்திரகௌன்ஸ் ராகம், மேலும் மெருகு சேர்க்கும். பி.சுசீலாவின் சிறந்த பாடல் பட்டியலில் இதற்கும் இடமுண்டு.
அதே போன்ற ஒரு கைம்பெண்ணின் சோகத்தை விவரிக்க இதே ராகத்தை இளையராஜா பிரமாதமாகப் பயன்படுத்தி உள்ளார். இந்த முறை எஸ்.ஜானகியின் குரலில் ஒலித்த பல சிறந்த பாடல்களுள் இதுவும் ஒன்று. அதுதான் ‘வைதேகி காத்திருந்தாள்’ (1984) படத்தில் வரும் ‘அழகு மலராட’ என்னும் பாடல்.
இளமையில் தனிமையின் கொடுமையை விளக்கும் பாடலுக்கு ஜதியெல்லாம் போட்டு அசத்தியிருப்பார். உப தகவல் : இந்தப் பாடல் ‘தக தகிட தக தகிட’ எனப்படும் ஐந்து எண்ணிக்கைகள் கொண்ட ‘கண்ட நடை’என்ற தாளக்கட்டில் அமைந்தது.
இந்த இடத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பு. ஒரு பாடலில் சில இடங்களில் அந்த ராகத்தில் இல்லாத ஸ்வரங்களை இசையமைப்பாளர் வைத்திருப்பார். அது ஒரு வித அழகு. குறிப்பாக எம்.எஸ்.வி போன்ற மெல்லிசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களின் பாணி அது. அந்த ஒரு சில இடங்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தப் பாடல் வேறு ராகம் எனச் சொல்லாமல், ஒரு பாடலில் பெரும்பான்மையாக வரும் ராகத்தையே அதன் அடிப்படை ராகமாக இந்தத் தொடரில் குறிப்பிட்டு வருகிறேன்.
விவாதி ராகங்கள் ஒரு விளக்கம்
ராகங்கள் உருவாகும் விதத்தைப் பார்க்குபோது 72 மேளகர்த்தா ராகங்கள் உருவாகின்றன எனப் பார்த்தோம். அதாவது ரி,,க,ம, த, நி ஆகிய ஸ்வரங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு உள்ளன. ஒரு ராகத்தில் அந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் வரும். அவற்றின் விதவிதமான சேர்க்கைகளால் இவ்வாறு ராகங்கள் உருவாகின்றன எனவும் பார்த்தோம்.
ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. விவாதி ராகங்கள் எனப் பெயர். இவற்றில் இரண்டும் வரும். உதாரணம்: ரி1 ரி2 இரண்டும் வரும். ஆனால் க வராது அதற்குப் பதிலாக ரி2 வே இருக்கும். இதுபோன்ற ராகங்களைப் பாடுவது கொஞ்சம் கடினம். கேட்பதும்தான். அதனால்அவ்வளவு பிரபலமாக ஆகாதவை. கோடீஸ்வர ஐயர் என்பவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்கள் புனைந்துள்ளார்.
இந்த 72 ராகங்களில் முதலாவது ராகத்தின் பெயர் கனகாங்கி. இது மிகவும் கடினமான ராகம்.இது ஸ்,ரி1,ரி2ம1பத1த2ஸ் என இருக்கும். அதாவது க விற்கு பதிலாக ரி2. நி க்கு பதிலாக த2. மிக மிக அரிதாகவே இசைக்கப்படும் ராகம் இது. ‘ஸ்ரீ கண நாதம்’என தியாகய்யர் இயற்றிய கிருதி ஒன்றிருக்கிறது. இந்த ராகத்தில் ஒரு திரைப்படப் பாடல் இசைக்க முடியுமா? அதுவும் கேட்க நன்றாக இருக்குமா? முடியும் என நிரூபித்துள்ளார் இசைஞானி.
‘சிந்து பைரவி’ (1985) திரைப்படத்தில் வரும் ‘மோகம் என்னும் தீயில் என் மனம்’என்ற பாடல்தான் அது. தொம் தொம் எனக் கடல் அலைகடலின் ஓசையையே பின்னணியாகக் கொண்டு அலைகடலாய்க் கொந்தளிக்கும் அகக்கடலை யேசுதாஸின் குரலில் பிரமாதமாக அமைத்திருப்பார்.
தந்தையிடம் மகனை வாதிட வைத்த பாடல்?
அதே போல் 72-வது மேளகர்த்தா ராகத்தின் பெயர் ரசிகப்ரியா. அது கனகாங்கிக்கு நேர் எதிரானது. அதாவது இதில் ரி க்கு பதிலாக க1. த வுக்கு பதிலாக நி1. அதாவது ஸக1க2ம2ப நி1நி2 ஸ் என வரும். இதில் 'அருள் செய்ய வேண்டும் ஐயா' எனக் கோடீஸ்வர ஐயர் கீர்த்தனை உள்ளது. ‘காவியத்தலைவி’(1970) என்ற படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவு பகல்போல் நிலவு’என்ற பாடல் கிட்டத்தட்ட இதே ராக அளவுகோலில் வருகிறது.
இசை, ‘மெல்லிசை மன்னர்’எம்.எஸ்.வி. அதே ராகத்தில் இளையராஜா ஒரு அருமையான பாடலை ‘கோயில் புறா’(1981) என்னும் படத்தில் அமைத்துள்ளார். ‘சங்கீதமே என் ஜீவனே’என்ற பாடல்தான் அது. சங்கீதமே என்று தொடங்குவதே ‘பநி1நி2ஸா’என்ற ஸ்வரங்களில் போட்டிருப்பார். ஜானகியின் குரலில் ஒலிக்கும் அப்பாடல். நாதஸ்வரத்துடன் இணைந்து ‘சிங்கார வேலனே’போல் பாடிய பாடல் அது.
ஒன்றுக்கும் எழுபத்தியிரண்டுக்கும் மத்தியில் 36-வது மேளகர்த்தா ராகம் ‘சல நாட்டை’. இதன் குழந்தையான நாட்டை பிரபலமான அளவு, இந்த ராகம் பிரபலமில்லை. ரசிகப்ரியா போன்றதே இந்த ராகம். ஒரே வித்தியாசம் இதில் சின்ன மத்யமம். அவ்வளவே. அந்த ராகத்தில் ஒரு கிளாசிக் பாட்டு ஒன்று போட்டிருப்பார் இசைஞானி. ‘நினைவெல்லாம் நித்யா’ (1982) படத்தில்.
ஸ்ரீதர் என்றால்தான் ராஜாவின் ஆர்மோனியம் குஷியாகி விடுமே? அதிலும் எஸ்.பி.பி.யின் குரலில் 'காமன்கோவில் சிறைவாசம், காலை எழுந்தால் பரிகாசம்' போன்ற வைரமுத்துவின் வரிகளும் அமைந்துவிட்டால்? மெல்லிசையாக மேற்கத்திய பாணியில் சல நாட்டையின் ஸ்வரங்களை வைத்துக் கொண்டு அமர்க்களப் படுத்தியிருப்பார். அதிலும் சரணங்கள் எல்லாம் சரவெடிகள். ‘பனிவிழும் மலர்வனம்’தான் அந்தப் பாடல்.
இன்று சொன்ன படங்களுள் ஒன்றில் ‘ஏழு ஸ்வரங்களும் எல்லோருக்கும் சொந்தம். அதைக் கொண்டு புதுசு புதுசாச் செய்வது அவனவன் திறமை’ எனத் தந்தையிடம் மகனை வாதிட வைத்த பாடல்? ராகம்?
தொடர்புக்கு:ramsych2@gmail.com
படங்கள் உதவி:ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT