Published : 10 Aug 2018 05:39 PM
Last Updated : 10 Aug 2018 05:39 PM
‘வெண்ணிற ஆடை’ படம் வெளியாகி வெற்றிபெற்றிருந்த நேரம் அது. இந்திப் பட வேலைகளுக்காக அடிக்கடி பம்பாய்க்குச் சென்று வந்து கொண்டிருந்தார் கோபு. இதன் நடுவே, யாருக்கும் தெரியாமல் திருவல்லிக்கேணியில் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தார் கோபு. அதற்குப் புண்ணியம் கட்டி கொண்டவர் மேஜர் சுந்தரராஜன்.
அவர் பங்கேற்று வந்த யூனிட்டி கிளப் என்ற அமெச்சூர் நாடகக் குழு ஒன்று செயல்பட்டுக்கொண்டிருந்தது. அவர்கள், ‘அன்லக்கி நம்பர் 13’ என்ற நாடகத்தை மேடையேற்றினார்கள். மேஜர் திரைப்படங்களில் பிஸியாகி விட்ட நிலையில் யூனிட்டி கிளப்பிலிருந்து விலகிவிட்டார். யூனிட்டி கிளப் உறுப்பினர்கள் சித்ராலயா கோபுவைத் தேடி வந்தார்கள். “எங்களுக்கு நீங்கள் நாடகம் எழுத வேண்டும். எங்கள் யூனிட்டி கிளப்பில் சினிமா தொடர்புடையவர்கள் இருந்தால், சபாக்களில் எளிதாக சான்ஸ் கிடைக்கும்” என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தார்கள்.
“நானும் சினிமாவில் பிஸி” என்று சொல்லத்தான் நினைத்தார் கோபு. ஆனால் எழுத்தாளர், நடிகர் சோவின் தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், தனக்கு அளித்த ஆதரவையும் “எப்போதும் நாடகத்தை விட்டுவிடாதே” என்று அவர் கொடுத்த அறிவுரையையும் அந்த நேரத்தில் கோபு நினைத்துப் பார்த்தார். வந்தவர்கள் அனைவரும் கோபுவின் முகத்தையே கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்க “அதற்கென்ன, எழுதிட்டா போகிறது” என்றார். கோபுவின் பதிலைக் கேட்டு யூனிட்டி கிளப் உறுப்பினர்கள் தலைகொள்ளாத சந்தோஷத்துடன் கிளம்பிச் சென்றார்கள்.
மனோரமாவின் நிபந்தனை
அடுத்தசில தினங்களில் யூனிட்டி கிளப்பில் இருந்த அனந்துவை கோபுவிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்கள். “இவரிடம் கதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் நாடகமாக எழுதி, அதில் மனோரமா நடித்தால் அட்டகாசமாக இருக்கும்” என்று அவர்கள் கூற, “மனோரமா ரொம்ப பிஸி. என்றாலும் நான் பேசிப் பார்க்கிறேன்'' என்ற கோபு, அப்போதே மனோரமாவுக்கு போன் செய்தார். '' நீங்க எழுதினா எனக்கு ஒகே கோபண்ணா'' என்று மனோரமா உடனே ஓகே சொன்னார்!
தொடர்ந்து முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன், மணிமாலா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி ஆகியோரிடம் போன் மூலம் பேசியே நாடகத்தில் நடிப்பதற்குச் சம்மதம் வாங்கினார் கோபு. மனோரமா நடித்தாலே போதும் என்று நினைத்து வந்தவர்களுக்கு, பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே வளைத்துப்பிடித்து கோபு ஒப்பந்தம் செய்து கொடுத்ததும், யூனிட்டி கிளப் உறுப்பினர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனார்கள்.
மனோரமா நாடகத்தில் நடிப்பதற்குப் போட்ட கண்டிஷன் இதுதான். நாடகம் நடக்கும்போது கோபுவும் உடன் இருக்க வேண்டும். அதற்காகவே, தனது முத்திரையான நகைச்சுவையைச் சேர்த்து, அதில் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வேடத்திலும் நடித்தார் கோபு. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் ஹாலில் அரங்கேறியது நாடகம். நாடகத்தின் பெயர், ‘காரணம் கேட்டு வாடி!’
அப்போதைய நாடக ஜாம்பவான்களான ஏ.பி.நாகராஜன், சோ, நீலு, சகஸ்ரநாமம் ஆகியோர் அவரது நாடகத்தைக் காண வந்ததுதான் கோபுவுக்குப் பெரிய ஆச்சரியம். ‘காரணம் கேட்டு வாடி’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, அதைப் படமாக்கப் போவதாக கூறினார் ஏ.பி.என். ஆனால், அந்த நாடகத்தைத்தான் பாலசந்தர் பிற்காலத்தில் ‘புதுப் புது அர்த்தங்கள்’ என்ற பெயரில் படமாகப் எடுத்தார்.
அந்த நாடகத்தின் வெற்றிக்குப் பின் அனந்துவை கோபுவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘சாந்தி நிலையம்’, ‘கலாட்டா கல்யாணம்’ போன்ற படங்களில் தனக்கு உதவியாளராக இருத்திக் கொண்டார். பின்னர் பாலசந்தர் “ எனக்கு அனந்துவை உதவியாளராகத் தர முடியுமா?” என்று கோபுவிடம் கேட்டு அவரை விரும்பி அழைத்துக்கொண்டார். அனந்துவைத் தனக்கு உதவியாளராக தந்ததை நினைவில் வைத்திருந்து கோபுவின் 80-தாவது பிறந்த நாளுக்கு வந்த பாலசந்தர் அதற்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.
இதுவா உன் இடம்?
இதற்கிடையில் அந்த நாடகத்தைப் பார்க்க வந்த ஸ்ரீதர். நேரே க்ரீன் ரூமுக்குள் கோபுவைக் கடிந்து கொண்டார். ''ஏண்டா காதலிக்க நேரமில்லை’ படத்தோட காமெடியை ஊரு, உலகமெல்லாம் பாராட்டிக்கிட்டு இருக்கு. சினிமாவுல போகஸ் பண்ணாம நாடகத்தைக் கட்டிக்கிட்டு அழறியே? நல்லா சம்பாதிக்கிற நேரத்துல எதுக்குடா ட்ராமா, இதுவா நீ சாதிக்க நினைச்ச இடம்?'' என்று கேட்டுவிட்டார். ''லைவ்வா கிடைக்கிற இந்தக் கைதட்டல்களுக்கு சினிமா புகழ் ஈடாகுமா ஸ்ரீ?'' கோபு கேட்க, சில நொடிகள் யோசித்த ஸ்ரீதர் தலையசைத்து ஒப்புக்கொண்டார்.
சிவாஜிக்குப் புரை ஏறியது
‘காரணம் கேட்டு வாடி’க்கு பிறகு, யூனிட்டி கிளப் சார்பில் ‘மாயா பஜார்’ என்ற நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றினார் கோபு. அந்த நாடகத்தில் கர்நாடகப் பாட்டு வாத்தியாராக கோபுவும் நடித்தார். நாடகத்தைக் காண வந்த சிவாஜி, கோபுவின் நடிப்பை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். தனது மானேஜரை ‘எஸ்கார்ட்’ போல அனுப்பி, நாடகம் முடிந்ததும் கோபுவை நேரே தனது வீட்டுக்கு அழைத்துவரச் செய்தார்.
“ஆச்சாரி.. ஆயிரம் சினிமாவுல நடிக்கலாம். ஆனால் ஒரு நாடகத்துல நடிச்சு நேரடியா மக்கள் கைதட்டலை வாங்கறது ரொம்ப கஷ்டம். நாடகக்காரனான எனக்குதான் அந்தக் கஷ்டம் தெரியும். நீ பாட்டு பாடி டான்ஸ் ஆடி வேற நடிக்கிறே.. உன்னை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியல. நீ பன்முகக் கலைஞன். இன்னிக்கு இரவு உணவை என்னோட உட்கார்ந்து சாப்பிடறே'' என்றார். திருமதி கமலா சிவாஜி பரிமாற, இருவரும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தனர்.
“எப்படி ஆச்சாரி... உன்னால எழுதவும் முடியுது, நடிக்கவும் முடியுது?'' சிவாஜி கேட்க, அதற்கு கோபு சொன்ன பதிலைக் கேட்டு சிவாஜி சிரிக்க தொடங்கி, அவருக்குப் புரை ஏறிவிட்டது. கமலா சிவாஜி அவர் தலையில் வெகு நேரம் தட்டிக்கொண்டிருந்தார்.
கோபு சிவாஜியிடம் சொன்ன பதில் இதுதான். “அண்ணே.. நீங்களும் நடிப்புல பொளந்து கட்டுறீங்க. நானும் நல்லா எழுதறேன்னா.. அது நம்ம மனைவிமார்களோட பெயர் ராசி. என் மனைவியின் பெயரும் கமலா.'' என்றார் கிளம்பும்போது “நாடக மும்முரத்துல நம்ம ‘கலாட்டா கல்யாணம்’ ஸ்கிரிப்ட் வேலையை மறந்துடப் போறே..'' என்று வாசல் வரை வந்து கோபுவை வழியனுப்பி வைத்தார் சிவாஜி.
“ஆயிரம் விருதுகள் வாங்கலாம். ஆனால் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பாராட்டி தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தது என்னைப் பொறுத்தவரை பெரிய விருது. சிவாஜி தந்த இந்த விருந்து எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம்'' என்று சித்ராலயா கோபு நெகிழ்ந்து போய்க் கூறுகிறார்.
மாயா பஜார் நாடகத்துக்குப் பிறகு, ‘ஸ்ரீமதி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார் கோபு. தனது நகைச்சுவையை அடக்கி வாசித்து, உணர்ச்சி பூர்வமாக கோபு எழுதிய நாடகம். அதன் பின் அரங்கேற்றிய ‘திக்கு தெரியாத வீட்டில்’ நாடகம் தமிழகத்தையே கலக்கியது. மனோரமா, கல்பனா முத்துராமன், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, கோபி ஆகியோர் நடித்தனர். இந்த நகைச்சுவை நாடகம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்த அன்றாடம் பிரபலங்கள் பலரும் நாடகத்தைப் பார்க்க வந்தனர். இடைவேளையில் அவர்களை மேடை ஏற்றி நான்கைந்து வார்த்தைகளைப் பேச வைத்தனர் யூனிட்டி கிளப் உறுப்பினர்கள்.
ஒரு முறை ஜெயலலிதா அந்த நாடகத்தைப் பார்க்க வந்து விட்டு மேடை ஏறி பேசினார்.
“சித்ராலயா கோபுவுக்கு நான் இந்த இடத்தில ஒரு கோரிக்கையை வைக்கிறேன். நிச்சயம் இந்த நாடகம் திரைப்படமாக எடுக்கப்படும். அப்படி எடுக்கும்போது, இதில் வரும் துணிச்சல்காரப் பெண்ணாக வரும் கதாநாயகியின் பாத்திரத்தை நான் ஏற்று நடிக்க விரும்புகிறேன் என்று அரங்கம் அதிர அறிவித்தார். அவரது அறிவிப்பால் கோபுவைச் சில தயாரிப்பாளர்கள் பணப் பையுடன் தேடத் தொடங்கினார்கள்.
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT