Last Updated : 03 Aug, 2018 10:47 AM

 

Published : 03 Aug 2018 10:47 AM
Last Updated : 03 Aug 2018 10:47 AM

ஹாலிவுட் ஜன்னல்: தப்பிக்கும் தலைவன்!

'வழிகாட்டுவதற்கு என ஒரு தலைவன் இல்லாதபோது, நீயே அவனாக உருமாறு’. இது அரசியல் தத்துவம் மட்டுமல்ல; ஆகஸ்ட் 17 அன்று வெளியாகவிருக்கும் ‘ஆல்ஃபா’ திரைப்படத்தின் ஒருவரிக்கதையும் அதுதான்.

சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் பெரும்பரப்பு பனிக்கட்டியாக உறைந்திருந்த காலத்தில் இந்தப் படத்தின் கதை நடைபெறுகிறது. பதின்ம வயதின் இறுதியில் இருக்கும் இளைஞன் ஒருவன் காட்டெருது வேட்டைக்குப் போகிறான். போன இடத்தில் தனது குழுவிலிருந்து தொலைந்து போகிறான்.

எதிர்பாராதவிதமாக விபத்தொன்றில் சிக்கி காயமடைந்து சாவை எதிர்நோக்கிக் கிடப்பவன், அதே போன்ற நிலையில் சிக்கித்தவிக்கும் ஓர் ஓநாயைச் சந்திக்கிறான். இயல்பில் தனது எதிரியான அதனை, சூழல் காரணமாக நண்பனாக மாற்றுகிறான். தனது தந்தை சொல்லித்தந்த ‘தலைவன் இல்லாதபோது அவனாக நீயே மாறு’ என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றுகிறான்.

அதனைத் தொடர்ந்து கொடூர விலங்குகள், கடுங்குளிர் காலத்தின் தொடக்கம், அபாயகரமான பாழ்பனிநிலங்கள் என அடுத்தடுத்த சவால்களை எதிர்கொண்டு புது நண்பன் உதவியுடன் தனது இருப்பிடத்துக்குத் திரும்பும் நாயகனின் சாகசமே இத்திரைப்படம்.

‘சர்வைவல்’ படங்களின் திரைக்கதையில் சுவாரசியத்துக்காக வரலாற்றிற்கு முந்தைய ’பேலியோலித்திக்’ காலப் பின்னணிதான் இந்தப் படத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. மனிதன் தனது முதல் நண்பனாக நாயினத்தை கண்டுகொள்வது, சாமானியன் ஒருவன் சூழல் காரணமாகத் தலைவனாக தன்னை அடையாளம் காண்பது உள்ளிட்ட இழைகளை சுவாரசியத்துக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

ஆல்பர்ட் ஹ்யூஸ்(Albert Hughes) இயக்கியுள்ள இப்படத்தில் கோடி ஸ்மித், லியோனர் வரெலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். துணைக் கதாபாத்திரங்களாக இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவரும் கனடா நடிகையுமான ப்ரியா ராஜரத்தினம் வருகிறார். கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட ஆல்ஃபா திரைப்படத்தின் வெளியீடு, பலமுறை ஒத்திவைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக திரைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x