Published : 24 Aug 2018 09:25 AM
Last Updated : 24 Aug 2018 09:25 AM
சினிமா தொடர்பான நூல்கள் தமிழில் குறைவு என்ற குற்றச்சாட்டு காலாவதி ஆகிவிட்டது. திரைக்கதைப் புத்தகங்கள், திரைத்துறைத் தொழில்நுட்பம், திரைப் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள், திரையுலக அனுபவங்கள், சினிமா வரலாறு என எல்லா வகைமையிலும் நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தற்போது நடந்துவரும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் சட்டென்று கவனத்தை ஈர்த்த ஐந்து நூல்களைப் பற்றிய அறிமுகம் இங்கே…
காமிக்ஸ் திரைக்கதை!
வெற்றிபெற்ற, பிரபலமான படத்தின் திரைக்கதைப் புத்தகங்களுக்கு நிச்சயமான வரவேற்பு கிடைக்கும். ஆனால், புத்தக வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் கோட்டைவிடும் திரைக்கதைப் புத்தகங்கள் வாசகனைச் சோர்வடைச் செய்யும். அதைத் தவிர்க்க, குறைந்தது படத்தில் இடம்பெற்ற முக்கியமான தருணங்கள் புத்தகத்தில் இடம்பெறுவது ஈர்க்கக்கூடிய அம்சம். இதில் ஒருபடி அதிகமான பாய்ச்சலுடன் முழுத் திரைக்கதையும் காமிக்ஸ் வடிவில் தந்தால் எப்படியிருக்கும். அப்படியொரு கலக்கல் காமிக்ஸ் புத்தகத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது நவீனா பப்ளிகேஷன்ஸ்.
பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013-ல் வெளியான ‘வருத்தப் படாத வாலிபர் சங்கம்’ படத்தின் திரைக்கதையைத்தான் 152 பக்கப் புத்தகமாக்கியிருக்கிறார்கள். ஓவியர் எஸ். சந்திரனின் தூரிகையில் நடிகர்களின் உருவங்களும் காட்சிகளும் விவரண ஓவியங்களாக ஆகியிருக்கின்றன. அவற்றுக்கு வண்ணங்களால் கவர்ச்சியைக் கூட்டியிருக்கிறார்கள் சங்கர், சிரஞ்சிவி, பாலாஜி ஆகிய ஓவியர்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமிக்ஸ் திரைக்கதை, ஆசிரியர்: பொன்ராம், விலை: ரூ.250 வெளியீடு: நவீனா பப்ளிகேஷன்ஸ், எண்:242, 25-வது தெரு, அண்ணா நகர் மேற்கு, சென்னை தொடர்புக்கு: 9940410757 |
காலத்தைச் செதுக்கிய மேதைகள்!
‘திரைப்பட இயக்குநர் என்பவர், தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் அனைத்தையும் குறித்து எதிர்வினை ஆற்றுகிறவரே’ எனத் திரைவிமர்சகரும் பிரெஞ்சு புதிய அலை சினிமா இயக்கத்தின் முன்னோடியுமான த்ரூபோ குறிப்பிடுகிறார். உலகளாவிய திரைப்படத் துறையின் நெடிய வரலாற்றில் ஆளுமைமிக்க படைப்பாளிகளாக அறியப்படும் இயக்குநர்கள் அனைவரும், தமக்கே உரித்தான பிரத்தியேக நோக்கங்களையும் திரைமொழியையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதை உறுதி செய்கிறது திரைப்பட உதவி இயக்குநர் ராம் முரளியின் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் ‘ காலத்தைச் செதுக்குபவர்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் இத்தொகுப்பு நூல்.
தொடக்ககாலத் திரைப்பட மேதைகளில் ஒருவரான ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்கோவஸ்கி தொடங்கி, தென் கொரியாவின் கிம் ஜீ வூன் வரை 14 மிகச் சிறந்த முன்னோடிகள் பற்றிய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு அவர்களது படைப்புலகம் குறித்த அறிமுகத்தை வழங்குகிறது.
காலத்தைச் செதுக்குபவர்கள் கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் ஆசிரியர்:ராம்முரளி விலை: ரூ.200 வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை. தொடர்புக்கு:9842461472 |
ஓர் ஒளிப்பட ரீவைண்ட்
ஏவி.எம்.நிறுவனம் கண்டெடுத்த கலைஞர்களின் பட்டியல் பெரிது. நடிகர், நடிகையர், இயக்குநர்கள் என்றில்லாமல் அதில் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இடமுண்டு. அவர்களில் ஒருவர் ஒளிப்படக் கலைஞர் ‘நேஷனல்’ செல்லையா. தனது 15-வது வயதில் ஏவி.எம்மில் பணியாற்றத் தொடங்கி பின் வெளியே வந்து ‘நேஷனல் போட்டோ ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி எண்ணற்ற முன்னணிக் கலைஞர்களுக்கு ஒளிப்படக் கலைஞராகப் பணியாற்றியவர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி என இரண்டு தலைமுறைக் கலைஞர்களோடு சுமார் 60 ஆண்டுகள் 450 திரைப்படங்களுக்குப் பணியாற்றியவர். அவர் தனது நிழற்பட நினைவுகளைச் சுகமாக அசைபோட்டிருக்கிறார். அது அந்த 60 ஆண்டுகள் சினிமா வரலாற்றின் ஒருபகுதியாகவும் மிளிர்வது இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பு. செல்லையாவை நேரில் சந்தித்து அவரது அனுபவங்களைத் தொகுத்து எழுதியிருக்கும் பத்திரிகையாளர் பொன்ஸீயின் மொழிநடை இன்னும் எளிதாக, மூடப்பட்டுவிட்ட ஸ்டுடியோக்களுக்குள் நம் விரல்பிடித்து அழைத்துச் செல்கிறது.
நிழற்பட நினைவலைகள் - ஒரு ரீவைண்ட் நேஷனல் செல்லையா தொகுப்பாசிரியர்: பொன்ஸீ விலை: ரூ.130 வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் மேற்கு கே.கே.நகர், சென்னை. |
ஒரு சிறுகதை, ஒரு திரைக்கதை!
திரையுலகில் ஆழமாகக் காலூன்றாவிட்டாலும் ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்டியவர் இலக்கியச் சிற்பி ஜெயகாந்தன். அவரது படைப்புகள் சிலவற்றைத் தழுவி திரைப்படைப்புகள் உருவாகியிருந்தாலும் அவர் இயக்கிய ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’ ஆகிய படங்கள் யதார்த்த சினிமாவின் முழுமையுடன் வெளிப்பட்ட படைப்புகள். தொடர்ந்து திரையில் இயங்க விரும்பிய ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை ‘நான் இருக்கிறேன்’. அதைத் திரைப்படமாக்கும் முனைப்புடன் அதற்கு முழுமையான திரைக்கதையையும் அப்போதே எழுதிவிட்டார் ஜெயகாந்தன். முழுமையான விவரிப்புடன், காட்சிகளின் ஷாட்களைக் குறிப்பிட்டு ஜெயகாந்தன் எழுதியிருக்கும் திரைக்கதை அவர் திரையை எவ்வளவு நேசித்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது. சிறுகதை, அதற்கு அவர் எழுதிய திரைக்கதை இரண்டையும் ஒரேநூலில் தாங்கி வந்திருக்கும் இந்த நூல் ஒரு இலக்கிய வடிவம் எப்படித் திரைவடிவமாக எழுத்தில் மாறுகிறது என்ற மாயத்துக்கு உரைகல்லாக இருக்கிறது. அதுவும் ஜெயகாந்தன் எனும் ஆளுமையின் காட்சிக் கற்பனையில். புத்தகத்தை ஜெயகாந் தனின் மகன் ஜெயசிம்மன் தொகுத் திருக்கிறார்.
சிறுகதையும் திரைக்கதையும் ஆசிரியர்: ஜெயகாந்தன் விலை: ரூ. 160 வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் தொடர்புக்கு: 044-48557525 |
இந்திப் பாடல்களின் தமிழ் முகம்!
மொழி எனும் தடையைக் கடந்து மெட்டின் இசைக்காகவும் பாடலில் ஊடாடிய இசைக் கோவைக் காகவும் தமிழகத்தில் நூற்றுக் கணக்கான இந்திப் பாடல்கள் புகழடைந்திருக்கின்றன. ஆனால், ரசித்து முணுமுணுத்த இந்திப் பாடல்களின் பொருள் புரியும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது! வெவ்வேறு மொழிகள் என்ற எல்லையைப் புகழ்பெற்ற இந்திப் பாடல்களுக்கு கவித்துவம் குன்றாமல் மொழிபெயர்த்து அளித்தது, இந்து தமிழ் நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் வெளியான ‘மொழி கடந்த உணர்வு’ என்ற புகழ்பெற்ற தொடர். அது தற்போது அரிய ஒளிப்படங்களோடு புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
மொழி பிரிக்காத உணர்வு ஆசிரியர்: எஸ்.எஸ்.வாசன் விலை: ரூ. 150. வெளியீடு: தமிழ் திசை 124, வாலாஜா சாலை, சென்னை. தொடர்புக்கு:7401296562 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT