Published : 03 Aug 2018 10:45 AM
Last Updated : 03 Aug 2018 10:45 AM
சாமானியர்களின் தோழனாகவும் ஆதிக்க சக்திகளின் எதிரியாகவும் திகழ்ந்த ஹியூகோ சாவேசின் சோசலிசப் புரட்சியில் கிளர்ந்தெழுந்த தேசம் வெனிசுலா. லத்தின் அமெரிக்காவின் சின்னஞ்சிறு நாடான வெனிசுலாவை மேற்கு அமெரிக்காவுக்குச் சிம்மசொப்பனமாக்கியவர் அவர். ‘நாளை என்பது மிகத்தாமதம்’ என்று முழங்கிய அந்தப் பெருந்தலைவர் மடிந்தபிறகு வெனிசுலாவின் திரைத் துறை உட்பட அத்தனை துறைகளும் இன்று தலைகீழான அரசியல் சூழலில் சிக்கியுள்ளன.
மற்ற லத்தின் அமெரிக்க நாடுகளைப் போல வலுவான அரசியல் திரைப் படைப்புகள் இன்று வெனிசுலாவில் படைக்கப்படுவதில்லை. காரணம், அந்நாட்டின் இன்றைய அதிபர் நிகோலஸ் மதுரோவின் மகன்தான் அங்குத் திரைப் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்திவருகிறார். சினிமா தயாரிப்பில் அந்நாட்டு அரசாங்கமே பெருமுனைப்புக் காட்டுவதால் ஆட்சி அதிகாரத்தை விமர்சிக்கக்கூடிய அரசியல் சினிமாக்களின் வரத்து அங்கு முடக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், 120 ஆண்டுக்கால வரலாறு கொண்டது வெனிசுலா சினிமா. அரசியலையும் அழகியலையும் நுட்பமான திரை மொழியில் வடித்த அனேக வெனிசுலா சினிமாக்கள் இருக்கின்றன. இந்நிலையில் 2012- ம் ஆண்டுக்கு முன்னதாக வெனிசுலாவில் தயாரிக்கப்பட்ட ஆகச் சிறந்த சினிமாக்களைத் திரையில் நாம் தரிசிக்க அடுத்த வாரம் சென்னையில் நடைபெறவிருக்கிறது ‘வெனிசுலா பட விழா’.
சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம் புது டெல்லியில் உள்ள வெனிசுலா தூதரகத்துடன் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் – மேக்ஸ் முல்லர் பவனில் ஆகஸ்டு 6 முதல் 8 வரை மாலைப் பொழுதுகளில் மூன்றுநாள் ‘வெனிசுலா பட விழா’வை நடத்துகிறது.
அச்சம் எனும் இருளில்
போலீஸ் ஏஜெண்டாகப் பணிபுரிந்துவரும் கேப்ரியலின் பெற்றோர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள். தானே காவல்துறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அந்தப் பாதையில் தனக்கான நீதி கிடைக்காது என்று முடிவுக்குவருகிறார் கேப்ரியல். பத்திரிகையாளர் ஒருவரின் துணையோடு குற்றவாளிகளைக் கண்டுபிடித்துப் பழிவாங்கப் புறப்படுகிறார். ‘Death in High Contrast’ என்ற இந்தத் திரைப்படத்தோடு விழா தொடங்குகிறது.
தலைநகர் கராகஸ் நகரத்தின் ஓர் இரவு புரட்சிப் படையினரால் ஆட்கொள்ளப்படுகிறது. குறிப்பாக அந்த நகரத்தின் மேட்டுக்குடிப் பகுதி ஒன்றில் ராணுவத்தினருக்கும் புரட்சிப் படையினருக்கும் இடையில் போர் மூள்கிறது. இதனால் சிறை பிடிக்கப்பட்டதுபோல பயந்து நடுங்குகிறார்கள் அங்கு வசிக்கும் பணக்காரர்கள். இந்தச் சிக்கலைத் தொலைக்காட்சி செய்தி ஊடகமும் வானொலியும் முற்றிலுமாக வேறு கோணத்தில் உலகத்துக்குக் கொண்டு செல்லும் போலித்தனத்தைத் திரையில் விரிக்கிறது, ‘It Dawned Suddenly’ திரைப்படம்.
பொய்க்குள் ஒளிந்திருக்கும் உண்மை
தன்னுடைய பொய்களால் ஆறுதல் அடையும் பதின்பருவச் சிறுவனின் கதை, ‘The Kid Who Lies’.
நிலச்சரிவில் சிக்கி சிதைந்துபோன தன்னுடைய குடும்பத்தின் கதையை சந்திப்பவர்களிடம் எல்லாம் விவரித்தபடியே பயணிக்கிறான் ஒரு சிறுவன். எதற்கெடுத்தாலும் பொய் புளுகுபவன் என்று உலகம் நினைக்கும்போது அந்தப் பொய்களுக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகளும் அவனுடைய வலிகளும் பார்வையாளர்களைக் கலங்கடிக்கின்றன.
சர்வாதிகாரி மார்கோஸ் பெரிஸிமெனிஸின் வீழ்ச்சிக்குப் பிறகு கராகஸ் சமூகம் 60- களில் என்னவாக மாறியது என்பதின் திரை வடிவம் ‘Days of Power’. போரும் மரணமும் குழப்பமும் பிடித்தாட்டும் வெனிசுலாவில் வாழும் ஒரு வீர இளமங்கைக்கும் ராணுவ வீரன் ஒருவனுக்கும் இடையில் காதல் மலர்வதே, ‘Memories of a Soldier’ திரைப்படம். வெனிசுலா திரைப்படவிழா குறித்து அறிந்துகொள்ள விரும்பும் உலகச் சினிமா ஆர்வலர்கள் 044 2821 2652 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT