Published : 17 Aug 2018 11:07 AM
Last Updated : 17 Aug 2018 11:07 AM
தேசிய, மாநில திரை விருதுகளைத் தாண்டி கவனத்தைக் கவரும் தரமான விருதுகளில் ஒன்று, சிறந்த அறிமுக இயக்குநருக்கான கொல்லப்புடி சீனிவாஸ் நினைவு தேசிய விருது. ‘பிரேம புஸ்தகம்’ என்ற தனது முதல் படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விபத்தில் மறைந்தார் அதன் இயக்குநர் கொல்லப்புடி சீனிவாஸ். அவரை அர்த்தபூர்வமாக நினைவுகூரும் வகையில், மறைந்த சீனிவாஸின் தந்தையும் பத்திரிகையாளரும் பன்முகக் கலைஞருமான கொல்லப்புடி மாருதி ராவால் கொல்லப்புடி சீனிவாசஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
அதன் முக்கிய இலக்கே இந்த நினைவு விருது. ஒவ்வோர் ஆண்டும் இந்திய மொழிகளில் உள்ளடக்க ரீதியாகத் தரமான முதல் படைப்பை தரும் அறிமுக இயக்குநர்கள் தங்களது கன்னிப் படைப்பை இந்த விருதுப் போட்டிக்கு அனுப்பி வைக்கிறார்கள். எத்தனை படங்கள் கலந்துகொண்டாலும் தேசிய அளவில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுத்து, கடந்த 21 ஆண்டுகளாகச் சமரசங்களுக்கு இடமின்றி இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. இதற்குமுன் ‘குட்டி’ என்ற தமிழ்த் திரைப்படத்துக்காக ஜானகி விஸ்வநாதன் சிறந்த அறிமுக இயக்குநர் விருது பெற்றிருக்கிறார்.
கடந்த ஞாயிறு அன்று சென்னையில் 21-வது விருது வழங்கும் விழா நடந்தது. அதில் ‘எ டெத் இன் த குன்ஜி’ என்ற ஆங்கில மொழியில் தயாரான இந்தியப் படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை, கொங்கனா சென் சர்மா பெற்றுக்கொண்டார். இந்த விருது விழாவில் இயக்குநர் பாக்யராஜ், சில மதிப்பெண்களில் விருதைத் தவறவிட்ட ‘அருவி’ தமிழ்ப் படத்தின் இயக்குநர் அருண் பிரபு, அதன் நாயகி அதிதி பாலன், ’நீர்ஜா’ இந்திப் படத்தின் இயக்குநர் ராம் மாத்வானி ஆகியோருடன் ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கலந்துகொண்டு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும்போது “அறிமுக இயக்குநர்கள் வெற்றியை எட்டிப்பிடிக்க மூன்று மூன்று விதங்களில் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். முதலில் உங்கள் கதையைத் திரைப்படமாகத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளரிடம் உங்கள் மீதான நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அடுத்து, நீங்கள் உருவாக்கும் படத்தை, தங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவழித்துக் காணவரும் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரையரங்கிலிருந்து திரும்பிச் செல்லாதவாறு உங்கள் படம் அவர்களை மகிழ்விக்க வேண்டும். மூன்றாவது, இந்த இரண்டையும் வென்றெடுக்க முதலில் உங்களுக்கு உங்கள் மீது முதலில் நம்பிக்கை வேண்டும்” என்று ரத்தின சுருக்கமாகப் பேச்சை முடித்துக்கொண்டார்.
- ரசிகா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT