Published : 15 Aug 2014 10:00 AM
Last Updated : 15 Aug 2014 10:00 AM
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்கள் இன்று மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. 1960-களில் வெளிவந்த பல படங்கள் காலத்தால் வெல்ல முடியாத காவியங்களாக இன்றும் மிளிர்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘காதலிக்க நேரமில்லை’. இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் 1964-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வெளிவந்த இப்படம் முழு நீள நகைச்சுவை கலந்த காதல் படம். இந்தப் படத்துக்கு இன்று வயது 50.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படம். முக்கோணக் காதல் கதைக்குப் பெயர் போன இயக்குநர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் காமெடியைக் கையில் எடுத்து விலா எலும்பு நோக சிரிக்க வைத்தார். முத்துராமனும் ரவிச்சந்திரனும் செய்யும் காமெடி கலாட்டாக்கள், அவர்களுக்கு இணையாக காமெடி செய்யும் காஞ்சனா, ராஜஸ்ரீ, ‘சினிமா எடுக்கிறேன்’ என்று பாலையாவுக்குப் பேய் கதை சொல்லும் நாகேஷ், இன்னும் சச்சு, ராகவன் என்று இந்தப் படத்துக்கு உயிர் கொடுத்தவர்கள் பலர்.
இந்தக் காவியத்தை இசை மூலம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மெருகேற்றினார்கள். ‘மாடி மேலே’ , ‘என்ன பார்வை’, ‘ உங்கள் பொன்னான கைகள்’, ‘அனுபவம் புதுமை’, ‘ நாளாம் நாளாம்’, ‘மலரென்ற முகமொன்று’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘ நெஞ்சத்தை அள்ளிஅள்ளித் தா’ ஆகிய எட்டுப் பாடல்களும் இன்றும் என்றும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் பாடல்கள்.
இப்படிப் பல பெருமை பெற்ற காதலிக்க நேரமில்லை பொன்விழாக் கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நாளை (16-8-14) மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் முயற்சியில் நடைபெறும் இந்த விழாவில் காதலிக்க நேரமில்லை படத்தில் பங்கெடுத்த நட்சத்திரங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
இதுபற்றி ஒய்.ஜி. மகேந்திரன் கூறும்போது, “அந்தக் காலத்தில் எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம் இது. இதுவரைக்கும் இந்தப் படத்தை 180 முறை பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை இடம் பெற்ற படமும் இதுதான். இப்படி ஒரு காவியத்தைத் தந்த இயக்குநர் ஸ்ரீதரைப் பாராட்டி 2005-ம் ஆண்டு பாராட்டு விழா நடத்தினேன். இப்போது இந்தப் படத்துக்கு விழா எடுக்கிறோம். இந்தப் படத்தில் பங்கெடுத்த கலைஞர்கள் விழாவில் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். விழாவில் காதலிக்க நேரமில்லை படப் பாடல்கள் ஆர்கெஸ்ட்ரா மூலம் இசைக்கப்படும். இடையிடையே படத்தின் காட்சிகள் திரையிடப்படும்” என்றார்.
ஆல்பா மைண்ட் பவர் நிறுவனம் முதன்மைப் புரவலராக இருந்து, இந்நிகழ்ச்சியை வழங்க, காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ், அசோக் குரூப், ஹுண்டாய் மோட்டார் பிளாசா கிண்டி, வெற்றி ரியல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT