Published : 09 Aug 2014 11:21 AM
Last Updated : 09 Aug 2014 11:21 AM
‘மச்சீ.. ஒர்ரு டீஈஈஈஈஈ… சொல்லு’ என்ற மாடுலேசனில் கைகளை கன்னாபின்னாவென்று வளைத்தால் அது தான் ‘லொள்ளு சபா’ மனோகரின் பாணி. இன்றைய இளசுகளில் பெரும்பாலானவர்கள் இந்த மாடுலேஷனில்தான் கலாய்த்தலும் கலாய்த்தல் சார்ந்த வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த ‘லொள்ளு’ மனோகர், பிறகு வெள்ளித்திரைக்கு சென்றார். இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆளை காணோம்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேருந்துப் பயணத்தில் எதிர்பாராத விதமாக அவரைச் சந்தித்தோம். பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு பேருந்தில் நம் கேள்விகளுக்கு பதில் சொன்னவாறே பயணம் செய்தார் ‘லொள்ளு’ மனோகர்.
என்ன சார் திடீர்னு பாண்டிச்சேரி பக்கம்? இதுதான் சொந்த ஊரா?
“எங்க குடும்பமெல்லாம் ராயபுரத்துலதான் பரம்பரை பரம்பரையா வாழ்ந்துகிட்டு இருக்கு. எங்க அம்மாவுக்கு பாண்டிச்சேரிதான் பிறந்த ஊரு. அடிக்கடி இங்க வருவேன். என் பொண்ணு இங்க இன்ஜினீயரிங் பைனல் இயர் படிக்குறா, லீவுங்கிறதால அவளைக் கூட்டிக் கிட்டு போலாம்னு வந்தேன்.”
நடிகர்கள் அரசாங்க பஸ்ல போறது புதுசா இருக்கே?
“ஏன்கிட்ட கார், பைக், சைக்கிள் எல்லாமே இருக்குங்க. இருந்தாலும் சில நேரம் அரசாங்க பஸ்லயும் போவேன். இங்கன்னு இல்ல சிட்டிக்குள்ள கூட எம்.டி.சி பஸ்ல போவேன். அங்கயும் நெறைய பேரு கண்டு பிடிச்சிருவாங்க.”
ரொம்ப நாளா உங்கள சின்னத்திரையிலயும் பெரியத்திரையிலயும் காணுமே?
“நான் வெறும் காமெடியன் இல்லங்க. நான் ஒரு மத்திய அரசு ஊழியன். கார்ப்ப ரேஷன் பேங்குல வேலை பார்க்கி றேன். அதுனால அடிக்கடி லீவ், பெர்மிஷன்னு போட முடியல.
அப்படின்னா இனி சினிமா பக்கம் வரமாட்டீங்களா?
இன்னா தலைவா இப்புடி சொல்லீட்டீங்க. இப்போக்கூட உதயநிதி, சந்தானம் காம்பினேஷன்ல ‘நண்பேன்டா’ பண்ணிகிட்டிருக்கேன். ‘ஜில்லா’ படத்துல கூட நடிச்சிருந்தேன். படம் ரொம்ப நீளமா இருக்குன்னு என்னோட போர்ஷன கட் பண்ணிட்டாங்க. இன்னும் நான் நடிச்ச 20 படம் ரிலீசாகாம இருக்கு. வர்ற அக்டோபர் மாசத்தோடு பேங்க் வேலைய ராஜினாமா பண்ணிட்டு முழுநேரமா சினிமாவுல நடிக்கப்போறேன். இனிமே என்னைய நெறைய படங்கள்ல பாக்கலாம்.
சினிமாவுக்காக அரசாங்க வேலைய விடப்போறீங்களா?
டி.வி.ங்கிறது சின்ன முதலீடு. ஆனா சினிமா அப்படி கிடையாது. நான் பேங்குல வேலை பாக்குறதால ஒவ்வொரு தயாரிப்பாளரும் என்ன புக் பண்ண தயங்குறாங்கன்னு கேள்விப் பட்டேன். அதான் இந்த முடிவு.
சந்தானம் என்ன சொல்றாரு?
அவன் என்னோட கிளோஸ் பிரண்ட். இன்னைக்கு தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பெரிய நடிகனா வளந்துருக்கான். ஆனால் லொள்ளு சபாவுல இருந் தப்ப இருந்த அதே சந்தானமாதான் இன்னைக்கும் எங்கக்கூட பழகுறான். அதுனால வந்ததுதான் ‘நண்பேன்டா’ பட வாய்ப்பு.
இப்படி பேசிக்கொண்டிருக்கை யில் திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் வந்துவிட ‘வரேன்பா ஸ்டாப்பிங் வந்துருச்சு’ என்று சொல்லிவிட்டு பஸ்சை விட்டு இறங்கினார்.
சந்தானம் என்னோட கிளோஸ் பிரண்ட். ஆனால் லொள்ளு சபாவுல இருந்தப்ப இருந்த அதே சந்தானமாதான் இன்னைக்கும் எங்கக்கூட பழகுறான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT