Last Updated : 31 Aug, 2018 10:14 AM

 

Published : 31 Aug 2018 10:14 AM
Last Updated : 31 Aug 2018 10:14 AM

சி(ரி)த்ராலயா 33: உயிரைக் குடித்த நகைச்சுவை!

சென்னையில் இருந்த சபாக்கள், வெளியூர் சபாக்கள் ‘காசேதான் கடவுளடா!’ நாடகத்துக்கு போட்டிபோட்டுக்கொண்டு தேதிகள் வாங்கின. நாடகம் சூப்பர் ஹிட் ஆனது. 900 மேடைகள் கண்டபின்பு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் ஒருநாள் ‘காசேதான் கடவுளடா!’ நாடகம் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்தத் துயர சம்பவம் நடந்தது.

நாடகத்தின் ஒரு கட்டத்தில், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி தனது இரண்டாவது மனைவியை மனோரமாவுக்கு அறிமுகம் செய்யும் காட்சி நடந்து கொண்டிருந்ததது. அதில் மூர்த்தி, லீலாவைக் காட்டி, ஆங்கிலத்தில் “She is my second wife” என்று அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக.. “I am her second husband” என்று கூறிவிட, அரங்கம் சிரிப்பொலியால் அதிர்ந்து நிற்க சில வினாடிகள் பிடித்தது.

அப்போது முன்வரிசையில் அமர்ந்து வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவருக்குத் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. ஆனால், அதை அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நாடகத்தைப் பார்த்திருக்கிறார்.

அடுத்த காட்சியில் மூர்த்தி தனது இன்ஜினீயர் நண்பரிடம், “ஏன்பா.. நேத்து உன்னைப் பார்க்க வந்தேன். உன் வீடு எனக்கு அடையாளம் தெரியலை..'' என்பார். அதற்கு அந்த இன்ஜினீயர் நண்பர், “என்ன சார்! வீட்டு வாசல்ல பொறியாளர்னு கொட்டை எழுத்துல பெயர்ப் பலகை இருக்கே, அதைப் பார்த்துமா கண்டுபிடிக்க முடியல?” என்று கேட்பார்.

உடனே மூர்த்தி. “அடடே! அந்த வீடுதானா... பொறியாளர்னு படிச்சதும் நான் ஏதோ அரிசிப்பொரி விக்கிறவர் வீடோன்னு  நினைச்சுட்டேன்..'' என்று கௌண்டர் கொடுத்ததும் சபா அதிர்ந்தது. அப்போது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் இன்னும் வாய்விட்டுச் சிரித்த அந்த வழக்கறிஞர் அப்படியே சுருண்டு விழுந்தார்.

அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஓடிப்போய் அவரைத் தூக்க, நாடகம் நிறுத்தப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லப்பட்டார். ஆனால், சிசிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இந்த நிகழ்வு கோபுவின் மனதை மிகவும் பாதித்துவிட்டது. அந்த வழக்கறிஞரின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு கோபு வருத்தம் தெரிவித்தபோது, “வருத்தத்துக்கு மத்தியிலும் எங்க அப்பா சிரித்துக் கொண்டே இறந்து போனார் என்ற திருப்தி இருக்கிறது. நீங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்'' என்றார்கள் குடும்பத்தினர். இருப்பினும் வாய்விட்டுச் சிரித்த ஒரு கலா ரசிகரை இப்படி காலன் கொண்டுசென்றது கோபுவுக்கு மனவருத்தத்தை அளித்தது.

ஓட்டை வழியே நோட்டம்

‘காசேதான் கடவுளடா’ நாடகத்துக்குக் கிடைத்த வெற்றியால் அது நிச்சயம் ஒருநாள் திரைப்படமாகும் என்று அதில் நடித்த நடிகர்களுக்குத் தெரிந்துவிட்டது. “கோபண்ணே.. சினிமால இந்தக் கேரக்டர் எனக்கு, அந்த கேரக்டர் எனக்கு என்று முன்கூட்டியே துண்டுபோட்டு இடம்பிடித்து வைத்துக்கொண்டார்கள். நாடகத்தில் சாமியார் வேடத்துக்கு அமோக வரவேற்பு.

ஏ.ஜி.எஸ் ஆபீசில் பணிபுரிந்த ரமணிதான் சாமியாராக நடித்தார். நாடகத்தின் வெற்றியை அறிந்து , திரைப்படத்துறையிலிருந்து நிறையப் பேர் நாடகத்தைக் காண வந்தனர். மனோரமாவுக்கு ஒரு த்ரில்லான பழக்கம். திரையில் இருக்கும் சிறு ஓட்டை வழியாக நாடகம் பார்க்க வி.ஐ.பிக்கள்  என்று யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று நோட்டம் விடுவார்.

ஒருநாள் அப்படித் திரையின் ஓட்டை வாழியாக பார்த்துக் கொண்டிருந்தவர், பரபரப்புடன் கோபுவிடம் ஓடி வந்தார். “அண்ணே! ஏவி.எம் செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மாவும் நாடகம் பார்க்க வந்திருக்காங்க! நாடகத்தை நிச்சயம் ஏவி.எம் வாங்கப் போறாங்க'' என்றார்.  மனோரமாவுக்கு ‘ஆச்சி’ என்று பட்டம் கொடுத்ததே ஏவி.எம்தான். அவரே சொல்லும்போது நிச்சயம் அது நடக்கும்'' என்று முத்துராமனும் சேர்ந்து சொன்னார்.

மனோரமா வாய் முகூர்த்தம் பலித்தது! மறுநாளே கோபுவின் வீட்டுக்கு ஏவி.எம் மேனேஜர் கப்பல் போன்ற காரை எடுத்துவந்து அதில் கோபுவை அழைத்துச் சென்றார்.

அந்தநாள், கோபுவின் வாழ்வில் அவருக்கு இயக்குநர் அந்தஸ்து கிடைக்கும் சுபநாளாக அமைந்தது. நீங்கள்தான் படத்தை இயக்க வேண்டும் என்று ஏவி.எம் முருகன் கூற, எனது கதைகளை சி.வி.ராஜேந்திரனைக் கொண்டுதான் இயக்கச்சொல்வேன் என்று கோபு தெரிவித்தார். ஆனால், கோபுதான் இயக்க வேண்டும் என்று ஏவி.எம் நிறுவனம் வற்புறுத்தியதால் கோபு ஒப்புக்கொண்டார்.

யார் அந்தச் சாமியார்?

பட அறிவிப்பு வந்ததும் நாடகத்தை மேலும் 200 நாட்களுக்குச் சபாக்கள் ஒப்பந்தம் செய்துகொண்டன. நாடகம் சூப்பர் டூப்பராகப் போய்க்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படவேலைகள் தொடங்கின. சாமியார் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற பேச்சு எழுந்தது. கோபுவுக்கு மிகவும் நெருக்கமான நாகேஷைத்தான் சாமியார் வேடத்தில் போடுவார்கள் என்று பலரும் நினைத்திருந்தனர்.

நாகேஷ் கூட அப்படி ஒரு நினைப்பை வைத்திருந்தார். ஒரு முறை நாடகம் பார்க்க வந்த நாகேஷ், “கோபு சாமியார் ரோல் என்னோடது! சொல்லிப்புட்டேன்'' என்று அன்பாக மிரட்டிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால், மெட்ராஸ் பாஷை பேசுவதற்கு வேறு யார் சரியாக இருப்பார்கள் என்று ஏவி.எம் கேட்டபோது கோபுவின் நினைவுக்கு வந்தவர் தேங்காய் சீனிவாசன். முதலில் யோசித்த ஏவி.எம் பிறகு அவரையே ஒப்பந்தம் செய்தது.

மனோரமா நாடகத்தில் நடித்த கதாநாயகி கதாபாத்திரத்தில் லட்சுமியும், லீலா கதாபாத்திரத்தில் மனோரமாவும் நடித்தனர். முத்துராமன் சினிமாவிலும் கதாநாயகனாகத் தொடர்ந்தார். ஏவி.எம் தேங்காய் சீனிவாசனை அழைத்து நாடகத்தைப் பார்த்து வரும்படி சொல்ல, ஒரு நாள் நாடகத்தைப் பார்க்க அண்ணாமலை மன்றம் வந்திருந்தார் தேங்காய்.

நாடகம் தொடங்கி விட, கூட்டம் பொங்கி வழிய, தேங்காய்க்கு மட்டும் ஒரு இருக்கை தரும்படி கிளப் செயலாளர் ராமனிடம் கோபு சொல்ல, அவர் அண்ணாமலை மன்ற சிப்பந்திகளிடம் கூற, அவர்கள் தேங்காய்க்கு நாற்காலி கொடுக்க மறுத்துவிட்டார்கள்!

அந்த தர்மசங்கடமான நிலையை உணர்ந்த தேங்காய், கோபுவிடம் ''நீ கவலைப்படாதே வாத்தியாரே.. நான் மியூசிக் ‘பிட்’ல உட்கார்ந்து நாடகம் பார்க்கிறேன் என்று தாவிக் குதித்து மேடைக்குக் கீழே இசைக் கலைஞர்கள் அமர்ந்திருக்கும் பள்ளத்துக்குள் உட்கார்ந்துவிட்டார். இந்தமாதிரி பெருந்தன்மையைத் தற்போது காண்பது அரிது. நாடகம் முடிந்ததும் மேக்-அப் ரூம் வந்த தேங்காய் சீனிவாசன், கோபுவை அப்படியே கட்டிக்கொண்டு விட்டார். “வாத்யாரே.. படத்தைத் தூக்கி நிறுத்திடலாம்!'' என்றார்.

நாடகம் என்பது சினிமாவைக் காட்டிலும் பெரிய கலை. கண்ணை மூடித் திறப்பதற்குள், முந்தைய காட்சியின் செட் அமைப்புகளை நீக்கி அடுத்த காட்சியின் செட் அமைப்பினை கொண்டு வருவார்கள். அந்த ‘பேக் ஸ்டேஜ்’ கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்படிக் காட்சிமாறினாலும் பரவாயில்லை, ஆனால் ‘காசேதான் கடவுளாடா’ நாடகத்தில் நடித்துவந்த ஒரு நடிகர் திடீரென்று வரமுடியாமல் போனால்…?

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x