Last Updated : 10 Aug, 2018 10:07 AM

 

Published : 10 Aug 2018 10:07 AM
Last Updated : 10 Aug 2018 10:07 AM

கலைஞரின் காவியங்கள்

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், வரலாறு என எல்லா இலக்கிய வடிவங்களிலும் இயங்கியிருக்கிறார் கலைஞர் 15 வயதில்  எழுதிய ‘பழனியப்பன்’ என்ற நாடகமே அவர் முதன்முதலில் எழுதிய நாடகம். திருவாரூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தார். பின்னர் அது `நச்சுக்கோப்பை' என்ற தலைப்பில் தமிழகம் எங்கும் திராவிடர் கழக மேடைகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 17 நாடகங்கள் எழுதியிருக்கும் கலைஞர், ஒவ்வொரு நாடகத்தையும் திரைக்கதையின் வடிவத்தில் எழுதியிருந்தது திரை வடிவத்தின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பைக் காட்டுகிறது.

திரைப்பட ஊடகத்தின் வலிமையை இளம் வயதிலேயே நன்கு உணர்ந்திருந்த கலைஞர் அதைப் பயன்படுத்தி வெற்றி கண்டது தனது 20-வது வயதில். ‘அபிமன்யு’ படத்துக்கு வசனம் எழுதியிருந்த அவர், அதன்பிறகே ‘ராஜகுமாரி’க்கு எழுதினார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு எனத் திரைத்துறையின் அனைத்துத் தளங்களிலும் தன் பங்களிப்பைத் தந்திருக்கிறார். அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல் கற்களாக அமைந்த சில படங்களைப் பற்றிய சுருக்கமான குறிப்புகள் இவை:

ராஜகுமாரி

திரையுலக வாழ்வில் கலைஞரின் முதல் படம் ‘ராஜகுமாரி’. இந்தப் படத்தில் அதன் இயக்குநர் எஸ்.ஏ.சாமிக்கு உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும், அந்தப் படத்தின் கதை வசனத்தையும் அவரே எழுதியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் அதுவரை சிறு சிறு வேடங்களில் நடித்த வந்து எம்.ஜி.ஆருக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்ததும் அந்தப் படம்தான்.

மந்திரி குமாரி

கதாசிரியராகவும் வசனகர்த்தாகவும் கலைஞருக்கென்று முக்கியத்துவம் வாய்ந்த தனி இடத்தை உருவாக்கிய படம் ‘மந்திரி குமாரி’. முதலில் நாடகமாகத்தான் இதை அவர் எழுதினார். பின்னர் அது திரைப்படத்துக்காக அவரால் மாற்றி எழுதப்பட்டது. திரைப்படப் பாடல்களும் வசனமும் முதன்முறையாகப் புத்தக வடிவில் விற்கப்பட்ட பெருமையும் இந்தப் படத்துக்கே உண்டு.

மருதநாட்டு இளவரசி

கலைஞருடன் எம்ஜி.ஆர். இணைந்து பணியாற்றிய மற்றுமொரு வெற்றிப்படம் இது. இந்தப் படத்தின் நாயகி வி,என்.ஜானகி. பின்னாளில் எம்.ஜி.ஆருடன் மணவாழ்வில் இணைந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் குறுகிய காலத்துக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஜானகி இருந்துள்ளார்.

பராசக்தி

சமூகத்தில் நிலவும் அவலங்களையும் மூடநம்பிக்கைகளையும் தன் சாட்டையடி வசனத்தால் கலைஞர் சுட்டிக்காட்டிய படம் பராசக்தி. கலைஞரின் வசனத்துக்காக இன்றும் அது கொண்டாடப்படுகிறது. பாடல்களை வசனங்கள் பின்னுக்குத் தள்ளிய போக்கும் இந்தப் படத்துக்குப் பின்னர்தான் தொடங்கியது. உலகத்தர நடிகராகப் பார்க்கப்படும் சிவாஜி  எனும் அற்புத நடிகருக்கும் இதுவே முதல் படம். அதில் இடம்பெற்ற சிவாஜியின் நடிப்பும் வசன உச்சரிப்பும் இன்றும் நடிகர்களுக்கான பாடங்கள்.

பூம்புகார்

கலைஞரின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படைப்பு இது. சிலப்பதிகாரத்தைத் தழுவி அழுத்தம் திருத்தமாக அவர் எழுதிக் கொடுத்த கதையுடன் அமைந்த படமே ‘பூம்புகார்’. காப்பியக் கதையென்றாலும் முதன்முறையாக நாயகிக்கென்று அழுத்தமான வசனங்கள் இந்தப் படத்தில் கலைஞரால் எழுதப்பட்டது.

படங்கள்: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x