Published : 17 Aug 2014 09:37 AM
Last Updated : 17 Aug 2014 09:37 AM

திரை விமர்சனம்: அஞ்சான்

அண்ணன் ராஜுவை (சூர்யா) சந்திக்க கன்னியா குமரியிலிருந்து மும்பை வருகிறான், கிருஷ்ணா (சூர்யா). அண்ணன் வெறும் ராஜு அல்ல. ராஜு பாய் என்று அறியப் படும் தாதா என்பதில் தொடங்கி அவனது கடத்தல் தொழில், செல்வாக்கு பற்றிய சம்பவங்கள் கிருஷ்ணாவின் தேடலில் ப்ளாஷ் பேக்கில் விரிகின்றன.

மும்பையின் நிழல் உலக சாம்ராஜ்யத்தின் புதிய சக்திகளாக வளர்ந்துவரும் ராஜு சந்துரு கூட்டணி பலருக்கும் உறுத்தலாக இருக்கிறது. மும்பையின் பெரிய தாதாவான இம்ரான் பாய் நண்பர்கள் இருவரையும் விருந்துக்கு அழைத்து எச்சரித்து அவமானப்படுத்துகிறார். அவருடைய சக்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவரை எதிர் கொள்ள ராஜு துணிகிறான். அதன் விளைவுகளை ரத்தம் சொட் டச் சொட்டச் சொல்கிறது படத்தின் மீதிக் கதை.

மும்பையின் மாபெரும் நிழல் உலகத்தை ஒண்டி ஆளாகக் கதாநாயகன் எதிர்கொள்ளும் அபத்தம்தான் அஞ்சான். உயி ருக்குயிராக நேசித்த நண்பனைக் கொன்றவனை யும் அவனுக்கு உதவிய துரோகி களையும் ஒவ்வொருவராகக் கொல்வதுதான் படத்தின் கதை, திரைக்கதை எல்லாமே. துரோகி களைக் கண்டுபிடிப்பதிலோ அவர்களைக் கொல்வதிலோ புத்தி சாலித்தனத்துக்கு எந்த இடமும் இல்லை. துரத்தல், மிரட்டல், தாக்குதல். அவ்வளவுதான். எக்கச் சக்கமான சண்டைகள். ஏகப்பட்ட தோட்டாக்கள். அசந்தால் பார்வையாளர்களுக்கும் இரண்டு அடி விழும்போல.

மும்பை நிழல் உலகம் பற்றிய ஆய்வு எதுவுமின்றி எடுக்கப் பட்ட படங்களில் முதலிடத்தை அஞ்சானுக்குக் கொடுக்க வேண்டும். மும்பையின் யதார்த் தமோ அங்கு நிழல் உலகம் இயங்கும் விதத்தையோ சிறிதள வும் படத்தில் பார்க்க முடிய வில்லை. காட்சிகள் சவடாலான வசனங்களாலும் அடிதடிகளாலும் நிரப்பப்படுகின்றன. மகிமைப் படுத்தப்படும் நட்பும் அதற்கான நெகிழ்ச்சியுடன் அல்லாமல் வசனங்களால் சொல்லப்படுகிறது. காதல் காட்சிகளிலும் லிங்கு சாமியின் வழக்கமான ரசனை அம்சம் இல்லை. பொதுவாக லிங்கு சாமியின் படங்களில் நாயகியின் பாத்திரம் ஓரளவு வலுவாக இருக்கும். இதில் அதுவும் இல்லை. நகைச்சுவை என நம்பி எடுக்கப் பட்டிருக்கும் காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன.

தன்னைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடப்பதைக் காணும் ராஜு, தன் நண்பனின் பாது காப்பு குறித்து அஞ்சி போன் செய்கிறான். அதே நேரத்தில் நண்பனைக் கொல்லும் வில்ல னுக்கு நாயகன் இருக்கும் இடம் தெரியவில்லையாம். அப்படி யானால் நாயகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே போகலாம்.

இதையெல்லாம் தாண்டிப் படம் விறுவிறுப்பாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. கிருஷ்ணா யார் என்னும் சஸ் பென்ஸை முதல் பாதியிலே உடைத்துவிடுகிறார் இயக்குநர். கிருஷ்ணா ராஜுவைத் தேடி அலைவதில் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. கமிஷனர் பெண் ணைத் திருமண ஊர்வலத்தி லிருந்து கடத்தும் காட்சி விளை யாட்டுத்தனமாய்க் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தின் நீளம் ரொம்ப அதிகம், சமந்தா, சூர்யா ஆட்டம் போடும் இந்திப் பாடல், கர்நாடக இசைக் ‘கச்சேரி’ எனப் பல காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. பாடல்களும் அதிகம்.

‘கொலை செய்தால்தான் பதுங்கி இருக்கணும்னு இல்லை. பயத்தில்கூட பதுங்கி இருக்க லாம்ல’ என்பது போன்ற வசனங் கள் (பிருந்தா சாரதி) கவனம் ஈர்க்கின்றன. சூர்யாவின் நடிப்பைப் பற்றிச் சொல்லப் புதிதாக எதுவுமில்லை. காரணம் அவர் புதிதாக எதையும் செய்ய இந்தப் படம் இடம் தரவில்லை.

சமந்தாவின் நடிப்புத் திறனை வெளிப்படுத்த எந்த வாய்ப் பையும் தராத இயக்குநர், அவரைக் கவர்ச்சி அவதாரம் எடுக்கவைத்திருக்கிறார். சமந்தா வுக்கு அது பொருந்துகிறதா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பு. கதாநாயகனிடம் அடிவாங்காத வேடம் வித்யுத் ஜம்வாலுக்கு. தனக்குத் தரப்பட்டிருக்கும் ஒரே ஒரு சண்டையில் மனிதர் அசத்தி விடுகிறார்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்ப திவும், யுவன் சங்கர் ராஜாவின் இசை தள்ளாட்டத்துக்கு லேசாக முட்டுக்கொடுக்கும் ஊன்றுகோல்.

அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பினையும், யூகிக்க முடியாத அளவுக்கு பார்வை யாளனுக்கு நேரம் கொடுக்காமல் இருப்பதுதான் ஆக்‌ஷன் சினிமா. ஆனால் அடுத்தடுத்த காட்சி களைத் திரையரங்கில் ரசிகர்கள் சொல்லிக்கொண்டே இருக்கி றார்கள்.

லிங்குசாமி, நாலு கதைகளைப் பின்னுக்கு தள்ளி அஞ்சான் எடுத்தாராம். அந்தக் கதைகள் எப்படி இருக்கும்?

நோஞ்சான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x