Last Updated : 13 Jul, 2018 10:34 AM

 

Published : 13 Jul 2018 10:34 AM
Last Updated : 13 Jul 2018 10:34 AM

திரைவெளிச்சம்: உலக அரங்கில் உறைந்த நெருப்பு!

சிறந்த அயல் மொழித் திரைப்படப் பிரிவில், கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு இலங்கைத் திரைப்படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. ‘தி ரோட் ஃப்ரம் எலிஃபண்ட் பாஸ்’ (The Road from Elephant Pass, 2008), ‘மேன்ஷன் பை தி லேக்’ (Mansion By the Lake, 2002) ஆகிய படங்கள்தாம் அவை. தற்போது மூன்றாவதாக ‘தி ஃப்ரோஸன் ஃபயர்’ (The Frozen Fire) என்ற திரைப்படம் நேரடியாக ஆஸ்கர் - 2019 பரிந்துரையில் இடம்பிடித்துள்ளது. அதுவும் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ‘சிறந்த திரைப்பட’த்துக்கான ஆஸ்கர் விருதுப் பிரிவில் இடம்பிடித்துள்ளது.

ஈழத் தமிழர்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் உருவாக்கிய அசாதாரணச் சமூகச் சூழலைப் பல படங்கள் சித்தரித்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘பாம்ஸ் அண்டு ரோசஸ்’ (2009) உள்ளிட்ட பல படங்களை இயங்கியிருக்கும் கவனத்துக்குரிய படைப்பாளி அனுருத்தா ஜயசிங்கே. அவருடைய முந்தைய திரைப்படங்களான ‘சங்கரந்தி’, ‘தவால் தூவிலி’ ஆகியவை சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றவை.

அந்த வரிசையில், சிங்களப் போராளியாகப் பார்க்கப்படுபவரும் ஜனதா விமுக்தி பெரமுனா எனும் அமைப்பின் தலைவருமான ரோஹண விஜயவீராவின் வாழ்க்கையை மையமாகவைத்து அனுருத்தா இயக்கியிருக்கும் படம்தான் ‘தி ஃப்ரோஸன் ஃபயர்’திரைப்படம். மாஸ்கோவில் டாக்டர் பட்டம் பெற்ற விஜயவீரா, ‘சேகுவேரா போன்றதொரு கம்யூனிஸவாதி நான்’ என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டவர்.

1970-களில் சிரிமாவோ பண்டாரநாயகாவுக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்தவர். விடுதலைப் புலிகளுக்கும் அவருக்கும் இடையில் மர்மங்கள் நிறைந்த தொடர்பு இருப்பதாகப் பல சர்ச்சைகள் உண்டு. அவருடைய வாழ்க்கை வரலாறே தற்போது ‘தி ஃப்ரோஸன் ஃபயர்’ ஆகியிருக்கிறது. இலங்கை மக்களை மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் இப்படம், ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இடம்பெறச் செயலாற்றியது ஆல் லைட்ஸ் ஃபில்ம் சர்வீசஸ் என்ற இந்திய நிறுவனமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x