Published : 27 Jul 2018 10:54 AM
Last Updated : 27 Jul 2018 10:54 AM
“படத்தைப் பார்த்துட்டு காட்சிக்குக் காட்சி வெடிச்சு சிரிச்சிருப்பீங்க. இப்படி ஒரு காமெடி படத்தோட திரைக்கதையை இயக்குநர் என்கிட்ட சொன்னப்போ எனக்கு மட்டும் சிரிப்பு வராம இருக்குமா? அப்போ என்னைப் பார்த்த அவர், ‘ படம்தான் காமெடியா இருக்கும். உங்க மியூசிக் எல்லா இடத்துலயும் பயங்கர சீரியஸா இருக்கணும்’ என்றார். அங்கே இருந்தே எனக்கான சவால் தொடங்கிடுச்சு’’ என்கிறார், தற்போது வெளியாகி வெற்றிபெற்றிருக்கும் ‘தமிழ்ப் படம் 2.0’ படத்தின் இசையமைப்பாளர் என்.கண்ணன்.
‘தமிழ்ப் படம்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஓ மஹசியா.. ஓ மஹசியா.. நாக்க முக்க நாக்கா’ பாடலின் வழியே ஏற்கெனவே கவனத்தை ஈர்த்த அவருடன் ஒரு சந்திப்பு.
முதல் பாகத்தில் இருந்து எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போ ‘தமிழ்ப் படம்’ இரண்டாம் பாகம். இசை அனுபவம் எப்படி இருந்துச்சு?
பேட்டிக்காகச் சொல்லவில்லை. நிச்சயமா இதுல நிறைய டாஸ்க் இருந்துச்சு. முதல் பாகத்துல வரவேற்பு கிடைச்ச எந்த விஷயத்தையும் இரண்டாம் பாகத்துல மறைமுகமாக்கூடக் கொண்டு வந்துடக் கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தோம். அதுல ஓபனிங் பாட்டு ‘பச்ச, மஞ்ச, கறுப்புத் தமிழன் நான்’ன்னு தொடங்கும். அந்தப் பாட்டு மூலமா ‘எல்லாமே இங்கே நான் தான்’னு ஹீரோ சொல்ற மாதிரி அமைத்தோம். இந்த முறை அப்படியே அதுல இருந்து மாறி, ‘என்னை விட்டுடுங்க… ப்ளீஸ் என்னை விட்டுடுங்க. நான் யாரும் இல்ல.. நான் வொர்த்தே இல்ல’னு திட்டமிட்டு உருவாக்குனோம்.
அதேபோல அப்போ, ‘ஓ மஹசியா’ மாதிரி அமைந்த பாட்டுக்கு மாற்றுதான் இந்தப் படத்துல வர்ற, ‘கலவரமே.. காதல்’ பாட்டு. ராகா பேஸ்ல அமைந்த பாட்டு. இதுல வேகம், ஜம்ப், நிதானம்னு எல்லாமும் இருக்கும். சின்மயி, பிரதீப் ரெண்டு பேரும்தான் பாடினாங்க. இப்படியான விஷயங்கள்தான் இசை வழியா இந்தப் படத்துக்கு நான் கொடுத்த பங்களிப்பு.
நம்ம கதாநாயகர்களையும், அவங்கப் படங்களோட தாக்கத்தையும் பின்னணியாகக் கொண்ட படம். பின்னணி இசை உருவாக்கம் எப்படி இருந்துச்சு?
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ’பாகுபலி’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘தேவர் மகன்’ படம்னு நிறைய படங்களோட காட்சிகள் நினைவுகள் வரும். இந்த மாதிரியான இடங்கள்ல பின்னணி இசைக் கொடுக்கும்போது அதோட ஒரிஜினாலிடியைத் தொடக் கூடாது. பார்க்கும்போது அதே டொனாலிடியில இருக்கணும்.
இல்லைன்னா அவ்ளோதான்! காப்பி ரைட்ஸ் பிரச்சினை இருக்கே. அதெல்லாம் ரொம்பவே சாதூர்யமா கையாண்டதால இப்போ நல்ல பெயர் கிடைச்சிருக்கு. அதுவும் ‘பாகுபலி’ காட்சிக்குச் சில பாதிப்புகள் இருக்கிறதா சில கேள்விகள் எழுந்துச்சு. அதுக்கான விளக்கத்தை எடுத்துச் சொன்னதும் சரியாகிடுச்சு. இந்த மாதிரி பின்னணி இசையமைக்கும்போது சளைக்காம சவால் இருந்தது.
உங்க கூட்டணியில உருவான ‘ரெண்டாவது படம்’ என்ன ஆச்சு?
‘தமிழ்ப் படம்’ மாதிரி எனக்கு ‘ரெண்டாவது படம்’ இசையமைத்த அனுபவமும் பெரிய மகிழ்ச்சியத் தந்தது. அதுவும் ஒரு முக்கியமான படம்தான். களமே வித்தியாசமா இருக்கும். ‘தமிழ்ப் படம்’ மாதிரி இல்ல. புதுத் திரைக்கதை. படத்தோட ரிலீஸுக்கான வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. அதுல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அர்ப்பணம் செய்யுற விதமா ‘ரோஜா பூ ஒன்று’னு ஒரு பாட்டு உண்டு.
அவர் பரபரப்பா இருந்த ஒரு காலகட்டத்துல அதிகம் கையாண்ட இசையை வைத்து உருவாக்கப்பட்ட பாட்டு அது. எஸ்.பி.பி, சித்ரா குரலில் உருவான அந்தப் பாட்டு யூடியூப்ல இருக்கு. செம ரெஸ்பான்ஸ். விமல், ரம்யா நம்பீசன் கூட்டணியில உருவான படம். அந்தப் படமும் கண்டிப்பா நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும்.
ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி?
2010-ல ரிலீஸ் ஆன ‘தமிழ்ப் படம்’ முடிச்ச பிறகு அடுத்தடுத்த வருடங்கள்ல சில படங்களுக்கு இசையமைச்சேன். ‘கல்கண்டு’, ’திலகர்’ உள்ளிட்ட சில படங்கள் வந்துச்சு. இதுவரை 12 படங்கள்ல வேலை பார்த்திருக்கேன். அதுல இரண்டு, மூன்று படங்கள் சரியாப் போகல. இங்கே ஹிட் படங்கள்ல வேலை பார்த்தால்தான் கவனிக்கப்படுறோம். ரசிகர்களும் ஹிட் படங்களோட பாடல்களைத்தான் அதிகம் கேட்குற மனநிலையில் இருக்காங்க.
இது மாறணும். முன்ன எல்லாம் இளையராஜா இசையமைத்த பல படங்கள் ஓடலைன்னாலும் அந்தப் படங்களுக்கு அவர்போட்ட பாடல்கள் அவ்வளவு ரீச் ஆகியிருக்கு. அந்தக் காலகட்டம் இப்போ இல்ல. அதெல்லாம் புரிஞ்சிக்கிட்டுத்தான் நான் அதிக படங்கள் ஒப்புக்கொள்ளல. நல்ல புராஜெக்ட் என்றால் மட்டும் பார்க்கலாம்னு இருக்கேன். அடுத்தடுத்து ‘பரிமளா திரையரங்கம்’ ‘குத்தூசி’ன்னு படங்கள் ரிலீஸுக்கு ரெடி. இந்தப் படங்கள் நிச்சயமா பேசப்படுங்கிற நம்பிக்கை இருக்கு.
‘தமிழ்ப் படம் 3’ சாத்தியமா?
முதல் பாகத்துல இருந்து ரெண்டாவது பாகத்தைத் தொடவே 8 வருஷங்கள் ஆகியிருக்கு. இந்த இடைப்பட்ட காலகட்டத்துல அரசியல், சினிமா ரீதியா பல சுவாரசிய சம்பவங்கள் இருந்ததால இப்போ ரெண்டாம் பாகம் சரியா அமைந்தது. அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைச்சுது. இதே மாதிரி ஒரு சூழல் அமைஞ்சா வாய்ப்பிருக்கு. எனக்குத் தெரிஞ்சு அமுதன் இப்போதைக்கு அதைச் செய்ய மாட்டார்னு நெனக்கிறேன்.
ஏன்னா அந்த மாதிரி ஒரு ட்ரெண்ட் அதுவா அமையணும். ஹாலிவுட்ல எல்லாம் கிண்டல் பண்ற படங்கள் நிறைய வந்திருக்கு. ஆஸ்கார் விருது மாதிரி அங்கே எல்லாம் சொதப்பின படங்களுக்கும் விருதுகள் உண்டு. அதெல்லாம் இப்போதான் இங்கே பரவத் தொடங்கியிருக்கு. ரசிகர்கள்கிட்ட ரெஸ்பான்ஸும் இருக்கு. அந்த வகையில சினிமா ரசனையில இது நல்ல முன்னேற்றமான காலகட்டம்ன்னு நான் நம்புறேன்.
“ஓவியா மாதிரி இப்போ யாருமே இல்ல...” - என்.எஸ்.கே.ரம்யா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT