Published : 20 Jul 2018 12:45 PM
Last Updated : 20 Jul 2018 12:45 PM
சென்ற வாரக் கேள்வியோடு தொடங்குவோம். ‘அடுத்த வீட்டுப் பெண்’ (1960) படத்தில் அமைந்த ‘கண்களும் கவிபாடுதே’ என்ற பாடல்தான் அது. இந்தோள ராகத்தில் அமைந்த போட்டிப் பாடல். படத்தின் நாயகி அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ்தான் இசையமைப்பாளர். சீர்காழி கோவிந்தராஜனும் திருச்சி லோகநாதனும் பாடியுள்ள பாடல். சின்னப் பாடல்தான்.
ஆனால், ஸ்வரங்கள், ஆலாபனை என இந்தோள ராகத்தின் சாரத்தைப் பிழிந்து தந்திருப்பார்கள் இருவரும். அதிலும் உச்சஸ்தாயி ஆலாபனைகளில் இருவரும் மோதிக் கொள்ளும் இடங்கள் பிரமாதமாக இருக்கும். இந்தோள ராகத்தில் மறக்க முடியாத பாடல் அது. சரியாகப் பதிலளித்த நெய்வேலி ரவிக்குமார், உடன்குடி சரவணன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள்.
ஐந்து ஸ்வரங்களின் அழகு
இந்தோள ராகம் 20-வது தாய் ராகமாகிய நடபைரவியின் சேய் ராகமாகும். அதுவும் மத்யமாவதி, அம்சத்வனி போல் ஐந்து ஸ்வரங்கள் உடையதுதான். ஸக1ம1த1நி1ஸ், ஸ்நி1த1ம1க1ஸ என்பதே அதன் ஆரோகண அவரோகணங்கள். தியாகய்யர் இயற்றிய ‘சாமஜ வர கமனா’ என்ற இந்தோளப் பாடல் அழியாப் புகழ்பெற்றது. அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ‘சங்கராபரண’த்தில் (1980) ஒரு பாடலை அமைத்திருப்பார் கே.வி.மகாதேவன்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் அப்பாடல். இந்தோளத்தில் அமைந்த ஸ்வரங்களை ராஜலட்சுமி ஸகமத கமதநி எனத் திரைப்படத்தில் பாடும் போது சுருதி மாறி வேறு ராகத்துக்குப் போய்விட சோமையாஜுலு ‘சாரதா’ என அதட்டுவது ஒரு புகழ்பெற்ற காட்சி.
ராமாயணத்தைப் பாடல்களால் இயற்றிய அருணாச்சலக் கவிராயர் இயற்றிய ‘ராமனுக்கு மன்னன்முடி தரித்தாலே’ என்ற பாடலும் மிக இனிமையானது. கைகேயி கூனியிடம் கூறுவதாக அமைந்த பாடல் இது. ‘பத்து மாத பந்தம்’ (1974) என்ற திரைப்படத்தில் பானுமதி இந்தப் பாடலை அருமையாகப் பாடியிருப்பார். பானுமதி ஒரு அஷ்டாவதானி அல்லவா? இந்தப் பாடலில் இந்தோளத்தின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டியிருப்பார். ‘பட்டம் கட்ட ஏற்ற வன்டி ராமன்’ என்பதைப் பல்வேறு சங்கதிகளால் பாடியிருப்பார். இறுதியில் ஸ்வரங்களால் சிறப்பித்திருப்பார். இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ்.
கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல் ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’. முருகன் மீது அமைந்த அப்பாடலை டி.எம்.எஸ்ஸிடம் வாலி கொடுக்க, அதைப் படித்து அசந்துபோன டி.எம்.எஸ், அதற்கு இந்தோள ராகத்தில் அருமையான ஒரு மெட்டுப் போட்டார். மறக்க முடியாத அந்தப் பாடல், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ (1966) படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ‘மனமே முருகனின் மயில் வாகனம்’ என்ற உணர்வெழுச்சி தரும் பாடல். நான்கே வரிகள்தாம். கண்களும் கவிபாடுதே போல் சிறிய பாடல்தான். ஆனால், ஸ்வரங்களுடன் நிறைவான ஒரு அனுபவத்தைத் தருகிறது. பாடியவர் ராதா ஜெயலட்சுமி.
என்னைவிட்டு ஓடிப் போக முடியுமா?
இன்னொரு பாடல் இந்தோளத்தில். மிகவும் வித்தியாசமான அமைப்பில் துள்ளலான காதல் பாடல். ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா இல்லை ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா’ என்று கேட்கும் தற்காலப் பாடல்களுக்கு நடுவே ‘எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே’ என்று பாடிய பாடல் இது. ‘குமுதம்’ (1960) படத்தில் வரும் ‘என்னை விட்டு ஓடிப் போக முடியுமா’ என்ற பாடல்தான் அது. பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன் குரல்களில் அமைந்த பாடல். இந்தோளத்தை வித்தியாசமாகக் காண்பித்திருப்பார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.
இந்தோளம் பல பாடல்களில் ராகமாலிகைளுள் ஒன்றாக விளங்கும் ராகம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உருவான ‘கர்ணன்’ (1964) படத்தில் ஏராளமான ராகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதைப் பற்றி தனிக் கட்டுரை எழுதலாம். அந்தப் படத்தில் பல பாடகர்கள் கூட்டாகப் பாட, ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு’
எனத் தொடங்கும் அப்பாடல் அமைந்தது இந்தோள ராகத்தில். சீர்காழி பாடும் பகுதி அருமையான இந்தோளமாகும். ஆலாபனையில் ஆரம்பித்து இந்தோளத்தில் பின்னியிருப்பார்.
சலீம்-அனார்கலி என்ற கதை இலக்கியத்தில் மிகப் புகழ்பெற்றது. அந்தக் கதையை மையமாக வைத்து வந்த ‘அனார்கலி’ (1955) என்ற திரைப்படத்தில் ஒரு அற்புதமான இந்தோளம். கண்டசாலா, ஜிக்கி குரல்களில் ‘ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா’ என்ற பாடல்தான் அது. அனார்கலியாக ஆடுவது அஞ்சலிதேவி. இந்துஸ்தானி இசையில் மல்கௌன்ஸ் ராகம் இந்தோளத்துக்கு இணையானது. அந்த ஜாடையில் இசையமைத்திருப்பார் ஆதி நாராயண ராவ்.
இந்த வாரம் அஞ்சலிதேவி வாரம் எனக் கூறும் அளவுக்கு அஞ்சலிதேவிக்கு இந்தோள ராகப் பாடல்கள் அமைந்துள்ளன. இன்னொரு முக்கியமான பாடல் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ (1957) என்ற படத்தில் அமைந்த ‘அழைக்காதே’ என்ற பாடலும் இந்தோளத்தில் அமைந்ததே. பி.சுசீலாவின் குரலில் இனிமையாக ஒலிக்கும் பாடலின் இசை, அதே ஆதி நாராயணராவ் தான். அவருக்கு இந்தோளம் மிகவும் பிடித்த ராகமாக இருக்க வேண்டும்.
இளையராஜா ஏராளமான பாடல்களை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார். அடுத்த வாரங்களில் பார்ப்போம். அதற்குமுன் ஒரு கேள்வி. சிதம்பரம் ஜெயராமன் போல் மலேசியா வாசுதேவன் பாடிய ஒரு பிரபல பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார் இசைஞானி. அந்தப் பாடல்? படம்?
தொடர்புக்கு:ramsych2@gmail.com
'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT