Published : 20 Jul 2018 12:39 PM
Last Updated : 20 Jul 2018 12:39 PM
திரைப்படங்களை, பகடி செய்யும் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் மிகக் குறைவு. இப்படி 2010-ல் வெளிவந்து, ரசிகர்கள் வயிறு வலிக்கச் சிரித்துக் கொண்டாடிய படம்தான் சி.எஸ்.அமுதனின் ‘தமிழ்ப்படம்’. தற்போது வெளியாகியுள்ள ‘தமிழ்ப்படம் - 2' ஓரளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கிறது. இருப்பினும், முழுமையான ஸ்ஃபூப் திரைப்படத்தை இதே அணி எதிர்காலத்தில் எடுக்க முடியாதபடி தமிழ் சினிமாவுக்கு சொரணை வந்துவிடலாம் என்ற நப்பாசையும் நம்மிடம் இருக்கவே செய்கிறது.
அதற்குக் காரணம், ‘ஆண்டவன் கட்டளை’, ‘விசாரணை’, ‘அருவி’, ‘அறம்’, ‘விக்ரம் வேதா’ என திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதுதான். இந்த எண்ணிக்கையைப் போதாதோ என எண்ண வைக்கின்றன இன்னொருபுறம் வந்துகொண்டேயிருக்கும். சராசரியான படங்கள். இன்னமும் கிண்டல் செய்யும்படியான, சலிப்பான கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகளை அவை கொண்டிருப்பதை மறுக்கமுடியாது.
சற்றே பழைய படங்களில்.. ஹவுஸ்கவுனும், வாயில் பைப்புமாகப் பணக்கார அப்பா, டைனிங் டேபிளில் விருந்து, வீட்டினுள்ளே இரண்டு பக்க மாடிப்படிகள், சுழலும் மெத்தை, பணக்கட்டு வைத்த சூட்கேஸ், துப்பாக்கியைப் பறிகொடுக்கும் இன்ஸ்பெக்டர், சாவியோடு ஆளில்லாமல் தப்பிக்க கார் அல்லது பைக், பஞ்சாயத்துக் கட்டுப்பாடு, முதலிரவு பால் டம்ளர், தப்பிய கைதி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதிப்பது, பேசிக்கொண்டேயிருந்து மயங்கி கர்ப்பமானதைத் தெரிவிக்கும் கதாநாயகி, புல்லாங்குழலோடு பொழுது விடிவது, பழைய மகாபலிபுரம் சாலையில் ஜீப் துரத்தல், “காதல் அப்படிங்கறது” எனத் தொடங்கி விரிவுரை ஆற்றும் நண்பனின் வசனம், இறுதியில் அடிவாங்கி, தலைகலைந்து திருந்திவிடும் வில்லன், கோடவுன் சண்டைக் காட்சி, சுபம், வணக்கம் எண்ட் கார்டு போடுவது உள்ளிட்ட பல விஷயங்கள் வழக்கொழிந்துபோனாலும், இன்னும் தீராமல் தொடரும், சராசரியான தமிழ் சினிமா வழக்கங்களை இங்கே வேடிக்கையாகப் பட்டியலிடலாம்.
# கதாநாயகனின் அப்பா கண்டிப்பானவராகவும் அம்மா செல்லம் கொடுப்பவராகவும் இருப்பார்கள். கதாநாயகிக்குத் தலைகீழ்.
# கதாநாயகனும் நண்பனும் படித்திருக்கவோ, வேலைக்குச் செல்லவோ வேண்டியதேயில்லை. “பொண்ணுங்களே இப்படித் தான்” என்பது அல்லது தண்ணியடித்து கதாநாயகியைத் திட்டியோ புகழ்ந்தோ பாடுவது.
# வழக்கறிஞர்களும் சாட்சிகளும் நீளமான ஆவேச, குணசித்திர வசனம் பேசுவது.
# சுலபமாகக் கண்டுபிடிக்கும்படியான மாறுவேடம் போடுவது.
# சீருடையில் குடித்து, பொய் வழக்குப் போடும் கொடூரமான போலீசைக் காட்டுவது, “எல்லாம் ஸ்டேஷன்ல பேசிக்கலாம்” என கூட்டிச் செல்வது மற்றும் ஒருவர் அந்த ஜீப்பைத் துரத்திக்கொண்டு கொஞ்சதூரம் ஓடி வருவது. அந்தக் கெட்ட காவல் ஆய்வாளர் பான் பராக் போடுவது.
# தூங்குபவர்கள் முழுவதுமாக போர்த்திக்கொள்வதில்லை, இன்னொருவர் வந்து கழுத்து வரை போர்த்தி, தலையைத் தடவி, விளக்கணைத்துச் செல்வது.
# அடிபட்டவர் தன்னை தர்மாஸ்பத்திரியில் சேர்த்துவிடு எனக் கேட்காமல், என்னைப் பத்திக் கவலைப்படாதே என ரத்தம் கக்கி சாவது.
# எந்த மாநிலத்துச் சிறையிலும், கதாநாயகன் சுலபமாகத் தப்பித்து விடுவது (அவருக்கு மட்டும் ஃபுல்பேன்ட் கைதி உடை)
# யார் பெண் வேடமிட்டாலும் நம்புவது, அவரைக் காதலிப்பது.
# கூட்டுக் குடும்பம் என்ற பேரில் 30 பேர் கூட்டமாக, எந்த நேரமும் சந்தோஷமாகச் சிரித்தபடியே இருப்பது.
# பாதிச் சாப்பாட்டில் தட்டிலேயே கை கழுவுதல் அல்லது சாப்பாட்டுடன் தட்டைக் கோபத்துடன் தள்ளி விடுதல்.
# பின்னால் வருகிறார்கள் எனத் தெரிந்தும் தப்பிக்காமல், பாடலில் கதாநாயகி தொடர்ந்து சலிப்பாக நடந்துகொண்டேயிருப்பது, அவருக்குப் படு மொக்கையாக ஒரு தோழி இருப்பது.
# தற்செயலாக நடனமாடும் ஒருவருடன், அதே வகையில் மொத்தக் கூட்டமும் ஆடுவது, அதில் நடன இயக்குநர் தலைகாட்டுவது.
# கதை இந்தியாவில் எங்கு நடந்தாலும், சம்பந்தப்பட்ட உயரதிகாரி தமிழில் பேசுவது, அவரே வில்லனுக்குத் துணையாகவும் இருப்பது.
# “இதுக்காகத்தான் இப்படிச் செஞ்சியா.. கில்லாடிப்பா நீ” எனக் கதாநாயகன் கூட வருபவர் கதாநாயகனின் புத்திசாலித்தனத்தைப் பார்வையாளருக்குப் புரியவைப்பது.
# பீரோவில் கதாநாயகன் காது வைத்துக் கேட்டு, கம்பியை வைத்துத் திறந்துவிடுவது.
# முக்கியக் காட்சிகளில், கிளைமாக்சில் மழையைச் சேர்ப்பது
# எந்த ரேங்கில் இருந்தாலும் கதாநாயகன் சாதாரண ஜீப்பில் வராமல் ஒரு புது வண்டியில் வலம் வருவது, டிஜிபிக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும் அண்டர்கவர் ஆபரேஷன் செய்வது.
# வில்லனே கதாநாயகனைப் புகழ்ந்து தள்ளுவது
# மலையில் குண்டடிபட்டு, மூலிகை சிகிச்சையில் மீள்வது மற்றும் மலைவாசிப் பெண்ணின் காதலை மறுப்பது (பாட்டு இல்லாமல் எப்படி!)
# “புகைபிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்” சட்டப்பூர்வ எச்சரிக்கைக்கான குரலை கொடுத்திருப்பது நடிகரா இயக்குநரா என்பதைக் கூட கண்டுபிடித்துவிடும் ரசிகர்களுக்கு இந்தப் பட்டியல் தெரிந்திருந்தாலும், இவையும் காலப்போக்கில் தொலைந்து வேறொரு பட்டியல் வரக்கூடும். அப்போது சுட்டிக்காட்டுவதே நம் தார்மீகக் கடமை.
தொடர்புக்கு:tottokv@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT