Published : 20 Jul 2018 12:43 PM
Last Updated : 20 Jul 2018 12:43 PM

மறக்கமுடியாத சந்திப்பு!

எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் படைப்பாக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டூலெட்’. இதுவரை 56 சர்வதேசப் படவிழாக்களில் கலந்துகொண்டு 22 விருதுகளை அள்ளி வந்திருக்கும் இப்படம், கடந்த வாரம் அர்மீனியாவில் நடந்த கோல்டன் ஆப்ரிகாட் எர்வான் படவிழாவில் சர்வதேசப் படங்களுக்கான போட்டிப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. இப்பிரிவில் உலகம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்ட 1,500 படங்களிலிருந்து இறுதிச்சுற்றில் தேர்வுசெய்யப்பட்ட 10 படங்களின் பட்டியலில் 'டூலெட்' இடம்பெற்றது.

 இப்படவிழாவுக்குச் சென்று திரும்பிய இயக்குநர் செழியனிடம் அதுபற்றிக் கேட்டபோது “விருதைவிடச் சிறந்தாக நான் நினைக்கும் வீடியோ ஒன்றை அங்கே பதிவு செய்தேன்” என்றார். “டூலெட்டுக்கு விருது கிடைக்காவிட்டாலும் அதைவிடக் கௌரவமான சந்திப்பு ஒன்று அர்மீனியாவில் நடந்தது. விருதுக் குழுவின் நடுவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார் ‘த சேல்ஸ்மேன்’ படத்துக்காகக் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுபெற்ற ஈரானிய இயக்குநரான அஸ்கர் ஃபர்ஹாதி.

போர் காரணமாகப் புலம்பெயர்ந்து அமெரிக்காவுக்குள் அடைக்கலமாக வருபவர்களை நுழையவிடாமல், அதிபர் ட்ரம்ப் அரசு தடை விதித்தது. அதனால் பாதிக்கப்படும் மக்களின் வலியை அமெரிக்க அரசுக்கு உணர்த்துவதற்காக ஆஸ்கர் விழாவைப் புறக்கணித்தார் அஸ்கர் ஃபர்ஹாதி. இதை உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதம் மட்டுமே ஆஸ்கர் விழாவில் வாசிக்கப்பட்டது.

அப்படிப்பட்ட உயரிய கலைஞனை எர்வான் படவிழாவின் நிறைவு நாளில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்போது ‘டூலெட், படத்தை மனம் திறந்து பாராட்டினார். ‘போட்டி கடுமையாக இருந்தது. விருதுக்கான படத்தைத் தேர்வு செய்வது எங்களுக்குக் கடும் சவாலாக இருந்தது. சவாலை உருவாக்கிய படங்களில் ‘டூலெட்’ இருக்கிறது.’ என்று பாராட்டினார். அவர் கூறியதையே ஒரு வீடியோ பதிவாகத் தர முடியுமா என்று கேட்டபோது உடனே சம்மதித்தார். அந்தக் கணமே நான் ஒளிப்பதிவு செய்துகொண்டேன். மேலும் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு ஜூரியான ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் ஒளிப்பதிவாளர் லாரி ஸ்மித்திடம் என்னை அறிமுகப்படுத்தி ‘இவர்தான் நாம் பார்த்த ‘டூலெட்’ படத்தின் இயக்குநர்’ என்றார். மறக்க முடியாத சந்திப்பு அது” என்கிறார் செழியன்.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x