Published : 21 Mar 2025 06:20 AM
Last Updated : 21 Mar 2025 06:20 AM
எவ்வளவு பழைய கதையை நீங்கள் கொடுத்தாலும் அதைத் திரைக்கதை எனும் மந்திரத்தால் வெற்றிப் படமாக்கும் வித்தையில் தொடர்ந்து அசத்தி வருகிறார்கள் மலையாள இயக்குநர்கள். கடந்த பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியாகி கோடிகளை அள்ளிய ‘ஆபீசர் ஆன் டூட்டி’ படம், தற்போது நெட்ஃபிளிக்ஸில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.
‘மலையாள சினிமாவில் போலீஸ் விசாரணைப் படங்களுக்கா பஞ்சம்! அட போங்கப்பா.. பத்தோடு இதுவும் ஒன்று’ என்று மட்டும் நீங்கள் கடந்து போய்விட முடியாது. அந்த அளவுக்குத் தொடக்கக் காட்சியிலிருந்தே நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள் அறிமுக இயக்குநர் ஜித்து அஷ்ரப் மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கும் ஷாஹி கபீர் ஆகிய இருவரும்.
கதை இதுதான்: பெங்களூருவில் ஒரு காவல் ஆய்வாளர் தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு நிலையத்திலேயே தன்னை மாய்த்துக்கொள்கிறார். இந்தத் தற்கொலையை ஐந்து பேர் கொட்டக் கொட்ட வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதே காவல் நிலையத்துக்குத் தான் அடகு வைத்த தங்கச் செயின் கவரிங் என்கிற புகாருடன் வருகிறார் பேருந்து நடத்துநரான சந்திரபாபு (ஜெகதீஷ்). இச்சமயத்தில், டி.எஸ்.பியாக இருந்து, அந்த நிலையத்துக்கு டி-புரமோட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்க வரும் ஹரிஷங்கர் (குஞ்சாக்கோ போபன்), இந்த கவரிங் செயின் விவகார வழக்கைக் கையிலெடுக்கிறார். அதன்பிறகு புலன்விசாரணையில் விரிவதெல்லாம் அதிரிபுதிரியான முடிச்சுகளும் அவிழ்ப்புகளும்.
‘நான் - லீனியர்’ திரைக்கதை என்றாலும் காட்சிகளின் கோவையில் அட்டகாசம் செய்திருக்கிறார் எடிட்டர் சம்மன் சாக்கோ. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையும் படத்துக்கு வலிமையைத் தந்திருக்கிறது. ஒரு முரட்டுக் காவல் அதிகாரியாக குஞ்சாக்கோ போபனால் நடிக்க முடியுமா என்கிற கேள்விக்குச் சரியான பதிலைப் படம் முழுவதும் கொடுத்திருக்கிறார். தமிழ் மொழிமாற்றத்துடன் காணும்போது திரைக்கதையின் வேகத்தை நன்றாக உணர்ந்து ரசிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment