Last Updated : 12 Dec, 2024 04:10 PM

 

Published : 12 Dec 2024 04:10 PM
Last Updated : 12 Dec 2024 04:10 PM

‘மகாராஜா’ திரைப்படத்தை கொண்டாடும் சீனர்கள்!

சீனத் தேசியத் திரைப்பட விழாவில் நவம்பர் 15, அன்று தமிழ்த் திரைப்படமான மகாராஜா திரையிடப்பட்டதைச் சீனத் தேசிய செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி நிறுவனம் அறிவித்தது. நவம்பர் 29ஆம் நாள் முதல் இப்படம் சீனாவில் நாடளவில் திரையிடப்பட்டது. இது போன்றே 2023 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ்த் திரைப்படமான வேலைக்காரன் படம் சீனாவில் செய்யப்பட்டு நாடளவில் திரையிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.

கொண்டாடப்படும் மகாராஜா: சீனாவில் மகாராஜா திரையிடப்பட்ட 11 நாள்களில் 58.2 கோடி ரூபாயை இதுவரை வசூலித்துள்ளது. சனிக்கிழமையன்று எனது பல்கலைக்கழகத்துக்குப் அருகேவுள்ள 3 தியேட்டர்களிலும் இப்படத்திற்கான எல்லா நுழைவுச்சீட்டுகளும் விற்பனையாகி இருந்தன. இப்படம் இணையதளங்களில் சீன மக்களால் கொண்டாடப்படுகிறது. “இந்த ஆண்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்” என்று சீன ஊடகங்கள் மகாராஜா படத்தை பாராட்டியுள்ளனர்.

டூபன் என்கிற சீனாவின் மிகப்பெரிய திரைப்பட மதிப்பீட்டு இணையத்தளத்தில், இப்படத்தினை 1.6 லட்சம்வரை பேர் மதிப்பிட்டு 8.7 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.இப்படத்தில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உறவுகளையும், படத்தில் மறைந்திருக்கும் தனித்துவமான கதை நுட்பங்களையும் பல நெட்டிசன்கள் கண்டுபிடித்து இணையத்தில் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.

பாலிவுட்டுக்குப் பதிலாக தென்னிந்திய திரைப்படங்கள்: இந்தியத் திரைப்படங்கள் 1955 இல் சீனாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய நடிகர் அமீர்கான் தன்னுடைய ஆக்கபூர்வமான படங்கள் மூலம் சீனாவில் மிகவும் புகழ்பெற்ற நட்சத்திரமாக உருவெடுத்தார். 21ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை சீன மக்களின் மனத்தில் இந்திய சினிமா என்பது "பாலிவுட்டை" மையப்படுத்தியதாக மட்டுமே இருந்தது.

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், இந்த நிலைமை மாறி வருகிறது. சீனத் திரையரங்குகளில் பல தென்னிந்தியப் திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, திரையிடப்பட்ட படங்கள் அதிக அங்கீகாரத்தைப் பெற்று வருவதோடு, தென்னிந்தியத் திரை நட்சத்திரங்களும் பிரபலமடையத் தொடங்கியுள்ளனர்.
பாகுபலி, ஆர்ஆர்ஆர், எந்திரன், கனா முதலான தென்னிந்தியத் திரைப்படங்களும், ராஜினிகாந்த், பிரபாஸ் போன்ற நட்சத்திரங்களும் சீனாவில் நன்கு அறியப்பட்டனர். இதன் மூலம் இந்தியாவில் வெவ்வேறு மொழிகளில் திரைப்படத்துறைகள் இயங்கி வருவதைச் சீனப் பார்வையாளர்கள் பலர் அறிந்து கொண்டுள்ளனர்.

சீனாவின் மிகவும் பிரபலமான காணொலி இணையதளமான பிலிபிலியில், யாராவது தென்னிந்தியத் திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பு என்று தவறாகக் குறிப்பிட்டால், அதனை உடனடியாகச் சரி செய்யும் ஆர்வமுள்ள பார்வையாளர்கள் எப்போதும் காணலாம். தென்னிந்தியத் திரைப்படப் பாணியின் இந்த அங்கீகாரமும் பாராட்டும் சீனப் பார்வையாளர்களின் ஆழமான புரிதலையும் இந்தத் திரைப்பட மீதான சீனர்களின் அன்பையும் பிரதிபலிக்கிறது.

சீனாவில் தென்னிந்திய சினிமா: 1981 இல் டி ஹரிஹரன் இயக்கிய "வளர்த்து மிருகங்கள்" என்ற மலையாளத் திரைப்படம், சீனாவிற்கு வெளியிட்டப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படமாகும். இது ஷாங்காய் ஃபிலிம் ஸ்டுடியோவால் சீனமொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1985 இல் சீனாவில் வெளியிடப்பட்டது. கூடுதலாக, 1980 களில், தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் நடித்த "உத்தர் தக்ஷின்" (1987) திரைப்படம், சீனாவில் "அப்பா மற்றும் மகன் மனக்கசப்பு" என்னும் பெயரால் அறியப்பட்டது. இப்படமானது 1992 இல் சீனாவில் சாங்சுன் ஃபிலிம் ஸ்டுடியோவால் மொழிபெயர்க்கப்பட்டது.

தற்போது, விஷுவலுக்கு வலுச் சேர்க்கும் திரைப்படங்கள், சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் ஆகிய 3 வகை தென்னிந்திய திரைப்படங்கள் சீனாவில் மிகவும் பிரபலமாக உள்ளன.

அதிகாரப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் சீன பார்வையாளர்களின் அதிக பாராட்டைப் பெற்றுள்ளன. இந்தப் படங்களுக்குக் கிடைக்கும் சர்வதேச அங்கீகாரம் அல்லது அவை பேசும் சமூக பிரச்சினைகள் காரணமாகவோ சீனாவில் திரையிடப்படுகின்றன. முந்தையதற்கு எடுத்துக்காட்டாக பாகுபலியையும் பிந்தையதற்கு உதாரணமாக வேலைக்காரன் படத்தையும் இங்கு குறிப்பிடலாம்.

கனா & வேலைக்காரன்: சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தியதற்காக சீனப் பார்வையாளர்களால் தென்னிந்தியாவின் சமூகப் பிரச்சினை படங்களை கொண்டாடப்படுகின்றன. 2022 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்த் திரைப்படமான "கனா" கௌசி என்ற ஏழைப் பெண்ணின் கிரிக்கெட் மீதான காதல், பாலினப் பாகுபாடு, வர்க்க வரம்புகள் மற்றும் சமூகத் தடைகளைத் தாண்ட போராடும் அவளது இடைவிடாத முயற்சியின் கதையைச் சொல்கிறது. இறுதியில் அவர் தேசிய அணியில் இடம்பிடிப்பார். இந்தக் கதையானது எண்ணற்ற சீனப் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

அது போல அதே ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட "வேலைக்காரன்" படமும் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொதுப் பிரச்சினையாகவுள்ள "உணவுப் பாதுகாப்பில்" கவனம் செலுத்துகிறது. இது சீன பார்வையாளர்களுடன் வெற்றிகரமாக எதிரொலித்தது. இந்தத் திரைப்படங்கள் இந்தியச் சினிமாவின் சமூகப் பொறுப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியச் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய சீனப் பார்வையாளர்களின் புரிதலையும் ஆழப்படுத்துகின்றன.

சஸ்பென்ஸ் படங்கள்: ஈர்க்கக்கூடிய ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் பிரமாண்ட தயாரிப்பு தவிர, சஸ்பென்ஸ் திரைப்படங்கள் சீனப் பார்வையாளர்களால் விரும்பப்படுகின்றன. இப்போது திரையிடப்பட்ட மகாராஜா இத்தகையதிரைப்படம் தான்.

மலையாள மொழி சஸ்பென்ஸ் படமான "அந்தாதுன்" பிரபல சீன இயக்குனர் சென் சிச்செங்கால் சீன மொழியிலேயே மீளுருவாக்கம் செய்யப்பட்டது.திரைப்பட தியேட்டர் தவிர, சீனத் திரையரங்குகளில் வெளியிடப்படாத சில தென்னிந்திய படங்கள் இணையவழி மூலமாக சீனாவிற்குள் பரவி புகழ் பெற்றுள்ளன. அந்தவகையில் "ஆர்ஆர்ஆர்", படத்தில் வரும் "நாட்டு நாட்டு" பாடல் சீனர்களின் பெரும் கவனத்தை ஈர்த்தது.

சீன திரைப்பட விழாக்களில் தென்னிந்திய படங்கள்: தென்னிந்தியத் திரைப்படங்கள் சீனப் பார்வையாளர்களின் பார்வைக்கு வருவதற்குரிய மூன்றாவது காரணமாக சர்வதேச திரைப்பட விழாக்கள் திகழ்கின்றன. ஷாங்காய் திரைப்பட விழாவிற்கு தமிழ் இயக்குனர் லெனின் சிவத்தின் படைப்பான "ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்" கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. "ஜெய் பீம்" 2022 ஆம் ஆண்டில் 12 ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பார்வையாளர்களைப் பொருத்தமட்டில் இந்த படம் இருளில் இருந்து பிரகாசத்திற்குச் செல்லும் நம்பிக்கையான பாதையையும் குறிக்கிறது.

தென்னிந்தியத் திரைப்படங்களின் தனித்துவமான பாணியும் சீனாவில் அவற்றின் பிரபலத்திற்கான முக்கியக் காரணமாகும். திரைப்படத் தயாரிப்பு, நடனம் என எதுவாயினும் தென்னிந்தியத் திரைப்படங்கள் பாலிவுட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்படுகின்றது. சமீபகால தென்னிந்தியத் திரைப்படங்கள் பொதுவாக வலுவான ஹீரோயிசம், மிகவும் யதார்த்தமான சமூகப் பிரச்சனைகள் இவையெல்லாம் தென்னிந்தியத் திரைப்படங்கள் சீன ரசிகர்களை ஈர்ப்பதற்குரிய முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

- ஸுவா ஜின், கட்டுரையாளர், பெய்ஜிங் அயல் மொழி ஆராய்ச்சி பல்கலைக்கழகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x