Published : 22 Nov 2024 06:27 AM
Last Updated : 22 Nov 2024 06:27 AM
கடந்த காலத்திலிருந்து உயிர்த்தெழுந்து வந்து, நிகழ்காலத்தில் மோதிக்கொள்ளும் முதன்மைக் கதாபாத்திரங்களை ‘உறுமீன்’ படத்தின் மூலம் சுவாரசியம் குன்றாமல் அறிமுகப்படுத்தியவர் எஸ்.பி.சக்திவேல். மெய்நிகர் உலகின் பொய்மைகளால் அல்லல்படும் இரண்டு குடும்பங்களின் கதையாகக் கவனிக்க வைத்த ‘பயணிகள் கவனிக்கவும்’ அவருடைய இரண்டாவது படம். தற்போது, அரசியலர், மருத்துவர் ராமதாஸின் மகள் வழிப்பேரனான குணாநிதி நாயகனாக அறிமுகமாகும் ‘அலங்கு’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘அலங்கு’ என்கிற தலைப்பு எதைக் குறிக்கிறது? என்ன கதை, எங்கே நடக்கிறது? - அலங்கு என்பது தமிழ்நாட்டின் மிகப் பழமையான நாட்டு நாய் இனம். சாகும் தறுவாயில் கிடக்கும் ஒரு நாயை நாயகன் காப்பாற்றுவதிலிருந்துதான் கதை தொடங்குகிறது. தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டி மலைப் பகுதியில் குடியிருக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடக்கும் கதை. சிறு வயதில் எனக்கு நடந்த ஒரு அனுபவத்திலிருந்து இந்தக் கதைக்கான பொறி உருவானது.
மனிதனுக்கும் நாய்க்குமான தோழமையும் உறவும் அவன் காடுகளில் வாழ்ந்த காலத்தில் தொடங்கியது. நாகரிகச் சமூகத்திலோ நாயைப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று இரண்டு தரப்பு உண்டு. பொறுப்பற்ற ஒரு செயலால், இந்த இரண்டு தரப்புக்கு இடையில் முரணும் மோதலும் வெடிக்கின்றன. அதில் நாயகனும் அவனைச் சார்ந்தவர்களும் அவனுடைய நாயும் என்னவாகிறார்கள்? ஓர் எளிய பழங்குடிச் சமூகத்தால் அதிகபட்சமாக என்ன செய்ய முடிகிறது என்று திரைக்கதை செல்லும்.
அறிமுக நாயகனைப் பற்றிக் கூறுங்கள்? மற்ற முக்கியமான நடிகர்கள் யார்? - குணாநிதி மருத்துவர் ராமதாஸ் குடும்பத்திலிருந்து திரைக்கு வருகிறார். தேசிய நாடகப் பள்ளியில் முறையாக நடிப்பைப் பயின்றவர். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் மிகவும் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனன் நடிப்பில் வெளியான ‘செல்ஃபி’ படத்தைத் தயாரித்து, அதில் ஹீரோவின் நண்பனாக இடைவேளை வரை சிறப்பாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தை குணாநிதியின் சகோதரர் டி.சபரீஷும், அன்புமணி ராமதாஸ் சாரின் மகள் எஸ்.ஏ.சங்கமித்ராவும் தயாரித்திருக்கிறார்கள். காளி வெங்கட், மலையாள நடிகர்கள் செம்பொன் வினோத், ஸ்ரீலேகா, சரத் அப்பானி என முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பலரும் நடிப்பில் கரை கண்டவர்கள். இவர்களுடன் காளி என்கிற நாயின் கதாபாத்திரம் கதையின் மையமாக வருக்கிறது.
அந்த நாயை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்? விலங்கு நல அமைப்பின் கெடுபிடிகள் இருந்ததா? - செந்து மோகன் என்கிற நாய் பயிற்சியாளரிடம் இந்தக் கதையைக் கூறி, கறுப்பும் வெள்ளையும் கலந்த ‘அலங்கு’ வகைப் பெண் நாய் ஒன்று தேவை எனக் கேட்டேன். ஆனால், கிடைக்கவில்லை. பிறகு ஒருநாள் ‘நீங்கள் கேட்டபடி ஒரு தெரு நாய்க்குட்டி கிடைத்திருக்கிறது; வந்து பாருங்கள்’ என்றார். 6 மாதக் குட்டியாக இருந்த அதைத் தூக்கி வந்து, அதை அரசு விலங்கு நல மருத்துவமனையில் காட்டி, தடுப்பூசி போட்டு, அதற்குரிய ஆவணங்களை உருவாக்கி, தடையில்லாச் சான்றிதழ் பெற்று, அதற்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினோம்.
குணாநிதியும் அதனுடன் பழகி வந்தார். மெல்ல வளர்ந்து உரிய வளர்ச்சியை அடைந்ததும் படப்பிடிப்பைத் தொடங்கினோம். காட்சிகளின்போது அது ஒத்துழைக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்து படப்பிடிப்பு நடத்தினோம். விலங்குகள் நல அமைப்பு கொடுத்திருந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியது உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருந்தது.
அஜேஸ் இசையில், நாயகனுக்கும் அவனுடைய நாய்க்கும் இடையிலான பிணைப்பைக் கூறும் ‘என் கண்ணுக்குள்ள சுத்துறியே காளிம்மா’ என்கிற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அஜேஸ் ‘விலங்கு’ இணையத் தொடரின் வழியாகப் புகழ்பெற்றார். அதற்கு முன் ‘பாம்புச் சட்டை’ படத்தில் அறிமுகமானவர். அதில் ‘நீ உறவாக’ என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட். 80 சதவீதப் படத்தை இயற்கை ஒளியில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எஸ்.பாண்டிகுமார்.
அடிப்படையில் ஒரு படத்தொகுப்பாளராக நீங்கள் இருந்த நீண்ட அனுபவம் இயக்கத்துக்கு எந்த வகையில் உதவுகிறது? - நிறையவே. ஒரு காட்சி என்றால் இவ்வளவு ‘ஷாட்’கள் போதும் என்று முடிவு செய்துவிட உதவுகிறது. இதனால், படப்பிடிப்பு நாள்களையே 20 சதவீதம் குறைக்க முடிந்தது.
- jesudoss.c@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT