Published : 15 Jun 2018 06:31 PM
Last Updated : 15 Jun 2018 06:31 PM
“காதல் காட்சிகள் என எதுவுமே கிடையாது. டூயட் பாடல் கிடையாது, ஆனால், பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும். இந்தக் கதையில் மசாலா விஷயங்களை வைத்தால், படத்தின் கதை தப்பாகிவிடும்” என்று ஆச்சரியமூட்டிய படி பேசத் தொடங்கினார் சக்தி செளந்தராஜன். ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’ படங்களின் இயக்குநர். தற்போது ‘டிக்:டிக்:டிக்’ என்ற அறிவியல் புனைவு விண்வெளிக் கதையைப் படமாக்ககி இருப்பவரிடம் பேசியதிலிருந்து...
விண்வெளிக் கதை என்றவுடன் நாயகன் ஜெயம் ரவி என்ன சொன்னார்?
‘மிருதன்’ வெளியான இரண்டு வாரங்கள் கழித்து அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். விண்வெளி சம்பந்தப்பட்ட கதை ஒன்று இருக்கிறது பண்ணலாமா என்று ஒன்லைன் கதையைச் சொன்னேன். அவரோ “இங்குள்ள தொழில்நுட்பத்தை வைத்துச் சாத்தியமா?” என்று கேட்டார். “ குறைந்தபட்சம் ஹாலிவுட் தரத்துக்குக் கீழே கிராஃபிக்ஸ் போகாது என்றால் பண்ணலாம்” என்றார். நான் இயக்கிய இரண்டு படங்கள் மூலமாக கிராஃபிக்ஸ் பற்றிக் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன். உண்மையில் தற்போது பல ஹாலிவுட் படங்களுக்கான கிராஃபிக்ஸ் பணிகள் சென்னையிலும் நடக்கக் தொடங்கிவிட்டது. முழுக்கத் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராஃபிக்ஸ் கலைஞர்கள் ‘டிக்:டிக்:டிக்’ படத்துக்காகத் தரமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
விண்வெளிக் கதைக்குத் திரைக்கதை எழுதுவது மிகவும் கடினம். தற்செயலாக ஒரு கதாபாத்திரத்தைக் கதைக்குள் கொண்டுவர முடியாது. விண்வெளியில் இருக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு வலுவாகத் திரைக்கதை எழுதினால் மட்டுமே பார்ப்பவர்களைக் கவர முடியும். அதற்காக மட்டும் 6 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். ஜெயம்ரவி கதையை முழுமையாகப் படித்துவிட்டு, “அருமையாக இருக்கிறது. விண்வெளி என்பது இக்கதையில் போதுமான அளவுக்குச் சேர்க்கப்பட்டுள்ளது” என்று உற்சாகம் கொடுத்தார். படத்தின் ட்ரெய்லரில் கொஞ்சம் கதையைச் சொல்லியிருக்கிறோம். அதுமட்டுமல்ல அப்பா - மகன் உறவை வலுவாகச் சொல்லியிருக்கிறேன். குழந்தைகளுக்கும் இக்கதை ரொம்பவே பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
படப்பிடிப்பில் என்ன நடந்தது?
ஜெயம்ரவியிடம் எந்தக் கதையைக் கொண்டுசென்றாலும், பிடித்திருந்தால் அப்படியே அவரை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிடுவார். படப்பிடிப்பில் 70 சதவீதம் கயிறு கட்டித் தூக்கும் இழுக்கும் வேலைகள்தான் அதிகமாக இருந்தது. ஒரு நாள் ஜெயம்ரவியின் அப்பா எடிட்டர் மோகன் படப்பிடிப்புக்கு வந்து பார்த்தார். மகன் அருகில் சென்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார் அவர் சென்றவுடன், ‘அப்பா என்ன சொன்னார்’ என்று கேட்டேன். “அவர் வந்த காரணம் வேறு. எனக்குப் போன வாரம் முதுகில் அடிபட்டுவிட்டது. அதற்காகத் தினமும் மாலை பிஸியோதெரபி சிகிச்சைக்குப் போய் வருகிறேன். அப்படியிருந்தும் நான் இப்படிக் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறேன் என்று யாரோ அப்பாவிடம் சொல்லிவிட்டார்கள்” என்றார். இந்தச் சம்பவம் அவரது அர்ப்பணிப்பைச் சொல்லும்.
இந்தப் படத்துக்காக நான்கு அரங்குகளில் படப்பிடிப்பு நடத்தினோம். வில்லன் நடிகரை சீனாவிலிருந்து வரவழைத்திருந்தோம். அதனால் யாரையுமே காக்க வைக்க முடியாது என்ற நிலை. ஜெயம்ரவியைத் தவிர இக்கதையில் இவ்வளவு வேகமாக யாரும் பண்ணியிருக்க முடியாது. இப்படத்துக்காக முன்னணிக் கதாநாயகிகள் பலரை முதலில் அணுகினோம். சில காட்சிகளைக் கேட்டுவிட்டு, அவர்களுடைய மேனேஜர்களே, இதெல்லாம் பண்ண மாட்டார்கள் என்று மறுத்துவிட்டார்கள். தற்காப்புக் கலை தெரிந்தவர் நாயகி நிவேதா பெத்துராஜ். எத்தனை கடினமான காட்சி என்றாலும் உடனே செய்துவிடுவார்.
360 டிகிரி கேமராவைப் பல காட்சிகளுக்கு பயன்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியானதே?
விண்வெளியில் ஒரு பொருளைப் போட்டோம் என்றால், அதைத் தடுக்கவே முடியாது போய்க் கொண்டே இருக்கும். இன்னொரு பொருள் அதைத் தடுப்பது வரைக்கும் ஒன்றுமே செய்ய முடியாது, வேகமும் குறையாது. ஒரு சண்டைக்காட்சியில் ரவி விண்வெளியில் மிதப்பார். அதைப் படமாக்குவதற்காக 360 கேமரா பயன்படுத்தியிருக்கிறோம். அந்தச் சண்டைக்காட்சி உலகத் தரத்தில் இருக்கும். அதில் நாயகன், சண்டைப் பயிற்சியாளர், ஒளிப்பதிவாளர் என அனைவருடைய உழைப்பும் பேசப்படும்.
கடினமான கதைக்களமாகவே உங்கள் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
பெரிய திரையில் பார்க்கக்கூடிய கதைக் களங்களை படமாக்க வேண்டும் என்பதே என் ஆசை. குடும்பமாகப் பணம் செலவழித்துப் படம் பார்க்கிறார்கள். இதைச் சின்ன திரையிலேயே பார்த்திருக்கலாமே என்று யாருமே எண்ணிவிடக் கூடாது. ‘பெரிய திரையில் போய்ப் பார்... செமயா இருக்கு’ என்று பார்த்தவர்கள் மற்றவர்களிடம் போய்ச் சொல்ல வேண்டும். மக்களைத் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கச் செய்யவே இவ்வளவு சிரமப்படுகிறேன்.
கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரும் தயாராகத்தான் இருக்காங்க. ஆனால் சரியான கதை அமையணுமே. 2-ம் பாகம் என்று சும்மா ஒரு கதையைப் படமாக்க விரும்பவில்லை. தொடர்ச்சியாக இல்லாமல் திரைக்கதை புதிதாக அமைந்தால் உடனடியாகத் தொடங்கிவிடுவேன்.
அடுத்த படம்?
இந்தப் படத்தைவிடக் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு கதையைத் தயார் செய்திருக்கிறேன். பட வெளியீட்டுக்குப் பின்பு இதைத் தொடங்குவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT