Published : 22 Jun 2018 10:54 AM
Last Updated : 22 Jun 2018 10:54 AM
‘தி
னம்தோறும்’ படத்தின் மூலம் யதார்த்த இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் நாகராஜ். அந்தப் படம் தந்த அடையாளத்தால் ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆனார். கௌதம் வாசுதேவ் மேனனின் அணியில் முக்கிய அங்கம் வகித்துவரும் நாகராஜின் மகன் க்ரிஷ், ‘ழகரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகர் நந்தா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, இறுதிகட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த க்ரிஷிடம் உரையாடியதிலிருந்து…
உங்களைப் பற்றிச் சிறு அறிமுகம்…
சொந்த ஊர் நாகர்கோவில். அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. இயக்குநர் ‘தினந்தோறும்’ நாகராஜ் என் தந்தை. அவரால் எனக்கும் சிறுவயது முதலே சினிமா மேலதான் கிரேஸ்.
எப்படி சாத்தியம் ஆனது இந்தப் படம் ?
முதல்ல நந்தா சாரிடம் கதை சொன்னேன். நான் கதை சொன்ன விதம் அவருக்கு ரொம்பவே பிடிச்சுருந்துச்சு. கூடவே அவருகிட்ட இளைஞர்களுக்குக் களம் அமைச்சு கொடுக்கணும்னு நல்ல எண்ணமும் இருந்துச்சு. என் திறமையை அங்கீகரிக்கணும்னு செய்றேன்னு கால்ஷீட் கொடுத்தார். அவருக்காகவே ‘ழகரம்’ திரைக்கதையை எழுதி முடிச்சேன். கவா கம்ஸ் எழுதின ‘ப்ராஜெக்ட்’ என்ற துறுதுறுப்பான நாவலோட தழுவல்தான் இந்தக் கதை. ‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரிப்புல புகுந்து களமாடி யிருக்கோம்.
புதையலைத் தேடி போறதுதான் கதைக்களம். ஆனா அதுக்குன்னு மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், நம்ப முடியாத விஷயங்கள்ன்னு எதுவும் இருக்காது. படத்துல ஒரே ஒரு பாட்டுதான். அதைக் கபிலன் எழுதியிருக்காரு. முன்னணி பாடகர்கள் ஹரிசரண், ஸ்வேதாமேனனும் பாடியிருக்காங்க. தரண் இசையமைச்சுருக்காரு.
நந்தாவுக்கு ஜோடியா ஈடன் கொரியகோஸ் நடிச்சுருக்காங்க. ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல’, ‘இருக்கு ஆனா இல்லை’ன்னு இரண்டு தமிழ்ப் படங்களும் மலையாளத்தில் ‘கேர்ள்ஸ்’ன்னு ஒரு படமும் பண்ணியிருக்காங்க. நந்தாவோடு புதையல் தேடிப் பயணிக்கும் விஷ்ணுபரத், சந்திரமோகன், ‘கலக்கப்போவது யாரு’ புகழ் கோதண்டன், வில்லனாக வரும் மீனேஷ் கிருஷ்ணான்னு படத்துல மொத்த பேரும் நிறைவான பங்களிப்பைச் செஞ்சுருக்காங்க.
‘ழகரம்’ என்ற தலைப்பு ஏன் ?
புதையலைத் தேடிப் போறப்போ, சின்னச் சின்ன க்ளூ கிடைக்கும். அதில் தமிழை ரொம்பவே பயன்படுத்தியிருக்கோம். பண்டைய காலத் தமிழர்களின் பெருமையைச் சொல்லும் படமா அது இருக்கும். அதனால்தான் படத்துக்கும் தூய்மையான தமிழில் ‘ழகரம்’ன்னு தலைப்பு வைச்சோம். இன்றைய தலைமுறையில் பலருக்கு ‘ழ’ உச்சரிப்பிலேயே சிக்கல் இருக்கு. படத்தில் புதையலைப் பாதுகாக்கும் அமைப்புக்கு ‘ழகரம்’ன்னு பேரு. படத்தில் தமிழ் மொழியே பெரும் புதையல் தான்னும் அழுத்திச் சொல்லிருக்கோம். எனக்குத் தமிழ் மொழி மீது சிறுவயது முதலே கொள்ளைக் காதல். அதனால் தான் இந்த நாவல் என்னைக் கவர்ந்தது. புதையல் தேடும் கதையில் தமிழையும் தேட வைத்துள்ளோம். தமிழைப் பற்றிப் பேசுவதால் இது ஏதோ பிரச்சாரப் படம்ன்னு நினைச்சுடாதீங்க. திகுதிகுன்னு பறக்குற இந்த தலைமுறையோட அடையாளத்தைத் தேடுற த்ரில்லர்.
அப்பா கதை, திரைக்கதை, வசனம் என அத்தனை ஏரியாவிலும் கில்லாடி. ‘தினம்தோறும்’ தொடங்கி, இன்றுவரை திரைத் துறையில் தன் பெயரைத் தக்கவைத்திருக்கிறார். அந்த வகையில் அப்பாதான் என் ரோல் மாடல். ‘நேசிக்குற வேலைக்கு உண்மையா இருந்தா போதும் க்ரிஷ் அது ஒருநாளும் கைவிடாது’ன்னு சொல்லுவார். திரைக்குள்ளே வர முயற்சி பண்ணப்போ, நிறைய படிக்கணும்... வாசிப்புதான் நல்ல படைப்பாளியை உருவாக்கும்னு அறிவுரை தந்தார். அப்படித்தான் வாசிப்புக்குள்ளும் வந்தேன்.
அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு அவருக்கே தெரியாமத்தான் ‘ழகரம்’ எடுத்துட்டு இருந்தேன். பாதி படம் முடிஞ்ச நிலையில் அப்பாவுக்குத் தெரிஞ்சு போச்சு. “ஆல் தி பெஸ்ட்ன்னு சொன்னார்”. அவர் படத்தைப் பார்த்துட்டு பாராட்டணும்கிற குறிக்கோளோட வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்.
படத்தை எங்கெல்லாம் படமாக்கினீர்கள்?
முக்கிய காட்சிகளை விசாகப்பட்டினத்தில் எடுத்தோம். தவிர, சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரியில் மற்ற காட்சிகள் எடுத்தோம். பழமையான சுரங்கம் வழியே புதையல் டீம் பயணிக்கும் காட்சி ஒன்று வரும். பல்லவ மன்னர் கட்டிய சுரங்கப்பாதை திருவிடந்தையில் தொல்லியல் துறையின் கீழ் இருக்கிறது. ஆனால் பலவீனமாக இருப்பதால் அங்கே படப்பிடிப்பு நடந்த அனுமதி கிடைக்கவில்லை. அதை காப்பி எடுத்து அப்படியே செட் போட்டு படமாக்கினோம். அந்தக் காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT