Published : 08 Nov 2024 06:28 AM
Last Updated : 08 Nov 2024 06:28 AM
அம்மாவின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக காசிக்குச் செல்கிறார், கலாச்சாரத்தை மதிக்கும் மாடர்ன் பெண்ணான சாய் தன்ஷிகா. அங்கே அவரிடம் ஒரு பழமையான மரப்பெட்டியைக் கொடுத்து, இதைத் தமிழ்நாட்டில் இருக்கும் அய்யங்கார்புரம் என்கிற ஊரில் கோயில் கொண்டிருக்கும் சிவாலயத்தின் குருக்களிடம் ஒப்படைக்கும்படிச் சொல்லிவிட்டு இறந்து போகிறார் ஒரு சாமியார்.
வேண்டா வெறுப்பாக அந்தப் பெட்டியுடன் அந்த ஊருக்கு வரும் தன்ஷிகா, பெட்டியைக் கொடுத்த பின்னரும் அங்கிருந்து வெளியேற முடியாதபடி சம்பவங்கள் நடைபெறுகின்றன. உண்மையில் அந்தப் பெட்டியில் இருப்பது என்ன, அதை அடைய முயல்பவர்கள் யார் என்பதை, புராணம், நவீன அறிவியலுடன் கற்பனை கலந்து கொடுத்திருக்கிறார் நாகா.
ஓடிடி யுகம் தொடங்கும் முன்னர், திரையரங்கப் பார்வையாளர்களைக் கணிசமாக வீட்டுக்குள்ளேயே உட்கார வைத்தது மெகா தொடர்களின் ஆதிக்கம். அப்போது, பார்வையாளர்கள் பலரையும் ‘மர்ம தேசம்’ தொடருக் காகத் தவமிருக்கவைத்தவர் நாகா. அவர், நான்கு வேதங்களுக்கு அப்பால், ஐந்தாவதாக ஒரு வேதம் இருக்க வாய்ப்பிருக்கிறதா? அப்படி இருந்தால் அதை அடைய இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகம் ஏன் விரும்பும் என்கிற சுவாரசியக் கற்பனையை நீட்டி முழக்கி இணையத் தொடராக மாற்றியிருக்கிறார்.
முதல் மூன்று எபிசோடுகளை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றவர், நான்காவது எபிசோடிலிருந்து இழுவையாக்கி விடுகிறார். எல்லாவற்றையும் ஒரே இழைக்குக் கொண்டுவந்து இணைப்பதில், திரைக்கதை மூச்சுத் திணறுகிறது.
செயற்கை நுண்ணறிவை, சரியான அளவில் கட்டுப்படுத்தாவிட்டால், அது, கடவுளின் படைப்பு, அழிப்பு வேலைகளையும் கையிலெடுத்துக் கொ(ல்)ள்ளும் என்கிற எச்சரிக்கை மணியை இத்தொடர் மூலம் அடித்திருக் கிறார். சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜி மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன் வண்ணன் ஆகிய நடிகர்களின் பங்களிப்பு, தொடரின் முக்கியமான பலம்.
காசியில் நிகழும் காட்சிகள், தன்ஷிகாவின் பயணம், அய்யங் கார்புரம் எனக் கதை நிகழும் இடங்களுக்கு நம்மையும் அழைத்துப் போய்விடும் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் ஸ்ரீநிவாசன் தேவராஜன். ரேவாவின் இசையிலும் குறையில்லை. இந்த இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களையும் தனது அற்புதமான பங்களிப்பால் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார் கலை இயக்குநர் ஜி.ராஜசேகர். நாகாவின் மாறுபட்ட கற்பனைக்காக இத்தொடரைக் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...