Published : 15 Aug 2014 12:00 AM
Last Updated : 15 Aug 2014 12:00 AM
மனித மனதின் ஆழமான உணர்வுகளைப் புதைகுழிகளிலிருந்து மீட்டெடுக்கும் மந்திரத் திறவுகோல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஊடகம்தான் சினிமா. ஆனால் சினிமா பற்றிய புரிதல்களைக் கூர்மைப்படுத்தவோ தீவிரப்படுத்தவோ தமிழ்ச் சூழலில் மிக அரிதாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாற்று சினிமாவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்கூட வெகுஜன (mainstream) சினிமாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.
வெகுஜன சினிமாவில் ரசனையின் தளத்தை விரிவுபடுத்தவும் சினிமா பற்றிய உரையாடல்களைக் கூர்மைப்படுத்தும் நோக்குடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘சினிமா ராண்டேவூ’ (Cinema Rendezvous) என்கிற அமைப்பை உருவாக்கி நடத்திவருகிறார் திரைப்பட மற்றும் நாடகக் கலைஞரான ஷைலஜா செட்லூர். சினிமா ராண்டேவூ மூலம் மாதம் ஒரு திரையிடல், திரையிடப்படும் சினிமா தொடர்பாக விவாதங்கள் என்று சினிமா பற்றிய தீவிரமான உரையாடல்களைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறது சினிமா ராண்டேவூ.
“மெயின் ஸ்ட்ரீம் சினிமா பற்றிய உரையாடல்கள், மாற்று சினிமாவைப் பரவலாக்குதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு நொடி அழவும் அடுத்த நொடி சிரிக்கவும் வைக்கும் மாய உலகம் சினிமா. சினிமா என்கிற ஊடகம் பற்றித் தீவிரமான உரையாடல்கள் நிச்சயம் தேவை” என்கிறார் ஷைலஜா.
பெரும்பாலும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுபவர்கள் பரிந்துரைக்கும் படங்களே திரையிடப்படுகின்றன. “சினிமா ராண்டேவூவில் திரையிடப்படும் பெரும்பாலான படங்கள் மொழி பேதங்களைக் கடந்தவை. உலக சினிமாவிலிருந்து உள்ளூர் சினிமா வரை எங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பல படங்களை நாங்கள் திரையிடுகிறோம். அதுகுறித்து உரையாடுகிறோம். அந்தப் படங்களைத் தமிழ்ச் சூழலோடு பொருத்திப் பார்த்து எங்களுக்குள் பேசிக்கொள்கிறோம்” என்றும் ஷைலஜா குறிப்பிடுகிறார். சுஹாசினி மணிரத்னம், ரோஹினி, இயக்குநர்கள் அட்லி, வெற்றிமாறன், சமுத்திரகனி, ராம், கே.எஸ்.ரவிகுமார், தியாகராஜன் குமாரராஜா, நாகா, சசி, ஒளிப்பதிவாளர் ராண்டி போன்ற பலர் இந்தத் திரையிடல்களில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விவாதங்களை நெறிப்படுத்தியிருக்கிறார்கள்.
“இந்தத் திரையிடல்களுக்கென்று குறிப்பிட்ட எந்த வரையறையும் இல்லை. சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுபவர்கள் பரிந்துரைக்கும்போது எங்களுக்கும் பல விஷயங்கள் தெரியவருகின்றன. சமுத்திரகனி வந்தபோது நீங்களே ஒரு படத்தை தேர்ந்தெடுங்கள். நானும் பார்க்கிறேன் என்றார். ரிதுபர்னோ கோஷின் சித்ராங்கதா திரைப்படம் ஒரு நடனக் கலைஞரின் பாலின அடையாளம் சார்ந்த போராட்டம் பற்றியது. அது பற்றி பேச அப்சரா ரெட்டியை அழைத்திருந்தோம். பாலின அடையாளத்துடனான போராட்டத்தை கடந்து வந்தவர் அவர்.
சினிமாவை ஆழமாக நேசிப்பவர்களுக்கான, சினிமாவின் மகத்துவத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுக்கான ஒரு களமாக மட்டுமே இது இருக்கிறது. ஒருவரின் சினிமா ரசனையின் அடிப்படையில் அவரைப் பற்றிய புரிதல் ஆழமாகிறது. நட்பிற்கு நல்ல அடித்தளமாய் இருக்கிறது அது அந்த அளவு சக்தி வாய்ந்த ஊடகம்” என்கிறார் ஷைலஜா.
சினிமாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி சினிமா பற்றிப் பெரிய அளவில் புரிதல் இல்லாதவர்கள்கூட ஆர்வத்தோடு சினிமா ராண்டேவூ திரையிடல்களில் கலந்துகொண்டு தங்களது சினிமா பார்வையை விரிவுபடுத்திக்கொள்கிறார்கள் என்று பெருமிதப்படுகிறார் ஷைலஜா. சினிமா ராண்டெவூ அறக்கட்டளையில் ஷைலஜா தவிர இயக்குநர் நாகாவும் ஒளிப்பதிவாளர் அருண்மணி பழனியும் இருக்கிறார்கள். இயக்குநர் ஹரிஹரன் தொடர்ந்து வழிகாட்டுவதாகச் சொல்கிறார் ஷைலஜா. திரையிடல்களோடு நிறுத்திக்கொள்ளாமல் திரை விமர்சனங்களுக்கான பட்டறைகள் நடத்துவது பற்றிய சிந்தனையும் இந்த அறக்கட்டளைக்கு இருக்கிறது.
சினிமா ராண்டேவூவில் இப்போது 40 வருடாந்திர உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு 1500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு திரையிடலுக்கு மட்டும் வர வேண்டும் என்று விருப்பப்படுகிறவர்களிடமிருந்து 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. “இது லாப நோக்கமற்ற அறக்கட்டளை. ஆனால் திரையிடல்களுக்கு ஆகும் செலவுகளுக்காக இந்தக் கட்டணத்தை வசூல் செய்கிறோம்” என்கிறார் ஷைலஜா.
சினிமா ராண்டேவூவின் திரையிடல் மாதம் தோறும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
ஷட்டரும் சசியும்
சினிமா ராண்டேவூவின் ஆகஸ்ட் மாதத்திற்கான திரையிடலில் டிஷ்யூம், பூ முதலான படங்களை இயக்கிய சசி பரிந்துரைத்த ஷட்டர் மலையாளத் திரைப்படம் திரையிடப்பட்டது.
துபாயில் வேலை பார்க்கும் நடுத்தர வயதுக் குடும்பத் தலைவன், துபாய் செல்லும் ஆசையில் அவருக்கு எடுபடி வேலை செய்யும் ஆட்டோ ஓட்டுநர், மார்க்கெட் இழந்த பிறகு மீண்டும் இயக்குநராக முயலும் இயக்குநர் இவர்களுக்கிடையில் ஒரு பாலியல் தொழிலாளி, அவள் மூலம் அவர்களது வாழ்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த உணர்வுபூர்வமான கலைப் படைப்புதான் ஷட்டர்.
துபாயிலிருந்து வந்திருக்கும் குடும்பத் தலைவன் பல சூழ்நிலைகளால் பாலியல் தொழிலாளியோடு பூட்டிய ஷெட் ஒன்றில் மாட்டிக்கொள்கிறான். அவன் அங்கு தங்கியிருக்கும் ஒரு இரவும் ஒரு பகலும் அவன் பார்வையை எப்படி மாற்றுகின்றன என்பதை ஒரு விதமான துல்லியத்தன்மையோடும் மிகையின்றியும் சொல்கிறார் இயக்குநர் ஜாய் மாத்யூ. நடிகராகப் பல படங்களில் தோன்றியிருக்கும் மாத்யூவுக்கு இயக்குநராக இது முதல் படம்.
“எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படம் நெகிழ்த்திவிடுவதாக” சொன்னார் இயக்குநர் சசி.
ஷட்டர் திரைப்படம் விரைவில் தமிழில் மறு ஆக்கம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT