Last Updated : 08 Aug, 2014 12:00 AM

 

Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM

சர்வதேச சினிமா: இஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியப் பெண்

பாலஸ்தீனிய பத்திரிகையாளர் ரூலா ஜேப்ரியல் (Rula Jebreal) தனது அனுபவங்களின் பதிவாக எழுதிய முதல் நாவல் மிரால். இது 2003-ல் வெளியானது. 15 வெவ்வேறு மொழிகளில் மொழிமாற்றமாகியுள்ள இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, பிரபல இயக்குநர் ஜுலியன் ஷ்னபெல் இயக்கிய படம் மிரால். மிரால் என்னும் பாலஸ்தீனியப் பெண்ணின் பார்வையில் விரியும் கதையில் பாலஸ்தீனியர்களின் பார்வையில் அவர்களது பிரச்சினை அலசப்படுகிறது.

ஆனால் இப்படத்தில் அரசியலைவிடச் சமூகம் சார்ந்த அன்பு, பாசம் போன்ற பல விஷயங்களுடன் கல்வியின் முக்கியத்துவமும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீனம் என்னும் தனிநாட்டின் மீது வாஞ்சை கொண்ட இஸ்லாமியருக்கும் அதை அனுமதிக்க மறுக்கும் யூதர்கள் தலைமையிலான இஸ்ரேலிய அரசுக்கும் இடையில் நிகழும் முரண்பாடுகளின் முகங்களை நேர்மையுடன் சொல்ல முயன்றிருக்கிறார் யூதரான இயக்குநர் ஜுலியன் ஷ்னபெல். பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, இந்தியா ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து இதைத் தயாரித்திருக்கின்றன.

ஹிண்ட் ஹுஸைனி, நாட்யா, மிரால் ஷகீன் ஆகிய மூன்று பெண்களின் கதைகளின் வழியே சொந்த நிலத்திற்கு ஏங்கும் சாதாரண மக்களின் ஆசை, ஏக்கம், துன்பம் ஆகிய உணர்வுகள் மேலிடும் காட்சிகளை உள்ளடக்கியுள்ளது இப்படம். படம் 1947-ன் கிறிஸ்துமஸ் நாளன்று தொடங்குகிறது. இஸ்லாமியப் பெண்ணான ஹிண்ட் ஹுஸைனி வீட்டில் இரு மதத்தினரும் இணைந்து அந்நாளைக் கொண்டாடுகிறார்கள். சில மாதங்களுக்குள் ஜெருசலத்தின் அருகே உள்ள டெய்ர் யாசின் என்னும் கிராமத்தில் யூதப் படைகள் நிகழ்த்திய இனப் படுகொலைகளால் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வீடிழந்து, பெற்றோரை இழந்து, நடுரோட்டில் கைகொடுக்க ஆளின்றி அவலத்துடன் நிற்கின்றனர். சிதிலடமடைந்த அவர்களது வாழ்வைச் செப்பனிடும் பணியை ஹுஸைனி ஏற்றுக்கொள்கிறார்.

இந்தச் சிறுவர்களுக்காகப் பள்ளி ஒன்றைத் தொடங்குகிறார் அவர். அரசியலில் இருந்து கல்வியும் பள்ளியும் விலகியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் எந்த அரசு நிறுவனத்தின் உதவியும் இன்றிப் பள்ளியை நடத்த விரும்பி அதைச் செயல்படுத்துகிறார். திருமணம்கூட செய்து கொள்ளாமல் அந்தப் பள்ளிக்காக வாழ்ந்து 1994-ல் ஹிண்ட் ஹுஸைனி மறைகிறார்.

அடுத்து மிராலின் அம்மா, நாட்யாவின் கதை. பருவ வயதில் பாலியல் சுரண்டலை எதிர்கொள்ள நேரிடுவதால் ஆதரவு கிடைத்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பேருந்து ஒன்றில் தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞனுக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் அவரது மனைவியின் மூக்கை உடைக்கிறார். இந்தக் குற்றத்திற்காகச் சிறையில் தள்ளப்படுகிறார்.

அங்கு நாட்யாவுக்குச் ஃபாத்திமா என்னும் நர்ஸின் நட்பு கிடைக்கிறது. ஃபாத்திமா பாலஸ்தீனுக்காகப் புரட்சி நடத்துபவர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். எதிரிகளைக் கொல்வதற்காக வெடிகுண்டு வைக்கிறார். அது வெடிக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் சட்டம் அவருக்குத் தீவிரவாத முத்திரை குத்தி, ஆயுள் தண்டனையளித்துச் சிறைக்கு அனுப்பிவிட்டது. சிறையிலிருந்து வெளிவந்த நாட்யாவை மணந்து அவருக்கு ஆதரவு தருகிறார் ஃபாத்திமாவின் சகோதரர் ஜமால். குடிக்கு அடிமையான நாட்யா ஆழ்ந்த கழிவிரக்கம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்கிறார். எனவே ஜமால், மிராலின் தந்தையாக மாறி, அவளை அன்புடனும் அரவணைப்புடனும் கவனித்துக்கொள்கிறார். மிராலை ஹுஸைனியின் பள்ளிக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறார் ஜமால்.

மிரால் பாலஸ்தீன் பற்றியும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்கிறார். 1967-ல் நடைபெற்ற ஆறு நாள் போரின் காரணமாக உருவான அகதிகள் முகாமுக்குக் கல்வி கற்பிக்க மிராலை ஹுஸைனி அனுப்பிவைக்கிறார். அப்போது நேரிடையாக இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியத்தைப் பார்க்கிறார் மிரால். அவளுக்கு ஹனி என்னும் புரட்சியாளன் அறிமுகமாகிறான். பாலஸ்தீன விடுதலைக்குப் போராட முடிவெடுக்கிறாள். ஆனால் ராணுவத்திடம் அகப்பட்டுக்கொள்கிறாள். அவளிடம் இருக்கும் இஸ்ரேலியக் குடியுரிமையால் நீதிமன்றம் அவளை விடுவிக்கிறது. பின்னர் தனது அத்தை வீட்டில் தங்க நேர்கிறது. அவரது அத்தை மகன் சமீம் லிசா என்னும் யூதப் பெண்ணைக் காதலிக்கிறான். யூதர்கள் அனைவரும் கெட்டவர்கள் எனும் மிராலின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இரு வாரங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்புகிறாள். சூழல் மாறுகிறது ஹனி துரோகி எனச் சித்திரிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறான். மிரால் மேற்படிப்புக்கு இத்தாலி செல்கிறாள்.

தந்தையுடன் சண்டை போடும் போதும், ஹுஸைனியுடன் பாலஸ்தீன் குறித்து உரையாடும் போதும் தேவைப்படும் உணர்ச்சிகளைத் திறமையாக வெளிப்படுத்தியுள்ளார் மிரால் வேடமேற்றிருக்கும் இந்திய நடிகை பிரீடா பின்டோ. அவருடைய தந்தையாக நடித்துள்ள அலெஸாண்டர் சித்திக் தனது தங்கை போல மனைவி நாட்யா போல மிராலும் சிதைந்துவிடக் கூடாதே என்னும் பதற்றத்தை நுட்பமாக நடிப்பில் கொண்டுவந்துள்ளார். தனக்குப் பிறந்த மகள் அல்ல மிரால் என்றபோதும் பொறுப்பான தந்தைக்குரிய கடமைகளில் இருந்து அவர் தவறவேயில்லை. பாலஸ்தீனர்களின் துயரங்களை உணரச் செய்வதில் இசை பிரதான பங்கு வகிக்கிறது. ஒளிப்பதிவு, வசனங்கள் ஆகியவற்றின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படி உள்ளது.

1993-ல் இஸ்ரேலியர் பாலஸ்தீனர் இடையில் ஏற்பட்ட ஓஸ்லா அமைதி ஒப்பந்தத்துடன் படம் முடிவடைகிறது. தனிநாடு என்னும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் மிராலும் ஹுஸைனியும். ஆனால் அந்த ஒப்பந்தத்திற்கு இன்றுவரை இஸ்ரேல் மதிப்பளிக்கவில்லை என்று கார்டு போடப்படுகிறது. படத்தில் முடிவு இல்லை. பாலஸ்தீனப் பிரச்சினைக்கும் இன்றுவரை முடிவு இல்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x