Last Updated : 01 Jun, 2018 11:00 AM

 

Published : 01 Jun 2018 11:00 AM
Last Updated : 01 Jun 2018 11:00 AM

திரைப் பார்வை: கனவுகள் திரையிடும் ஒருவன்! - பயாஸ்கோப்வாலா (இந்தி)

ருவரின் பால்ய கால டிரங்க் பெட்டியில் கிடைக்கும் ஒரு பழைய புகைப்படம் அல்லது ஒரு பிலிம் துண்டு கொண்டு வரும் நினைவுகள் எப்படி இருக்கும்? அதிக நெருக்கமில்லாத ஒரு தந்தையின் மரணம் மகளை என்ன செய்யும்? அதே தந்தை, பேசாத தன் மகளுக்கு எழுதும் கடிதத்தில் என்ன இருக்கும்? மத நெருக்கடிகள் நிறைந்த ஒரு நாட்டில் சினிமா எப்படி எதிர்கொள்ளப்பட்டிருக்கும்? புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், தன் மகளைப்போல இருக்கும், ஒரு பெண்ணிடம் பாசமாக நடந்துகொள்ளும் ஒரு அகதியின் பயணம் எப்படி இருக்கும் ? இப்படி சில அடுக்குகளில், ஒரு காலத்தில் குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளையடித்த பயாஸ்கோப்பின் பின்னணியில், நடக்கும் ஒரு தந்தை, மகள் உணர்வுகள்தான் கதை.

கதை

ரெஹ்மத் கான் 1990-களில் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வந்து கல்கத்தா வீதிகளில் குழந்தைகளுக்கு பயாஸ்கோப் காண்பித்து வாழ்கிறார். அவரின் மகள் வயதையொத்த மின்னி என்னும் சிறுமியிடம் பழகி சிறிது காலத்துக்குப் பின் அவள் வாழ்க்கையிலிருந்து நகர்ந்து விடுகிறார். பல வருடங்கள் நகர்ந்தோடிவிட, மின்னி வளர்ந்து பிரான்ஸ் நாட்டில் ஆவணப் பட இயக்குநராகிவிடுகிறார். தந்தையின் மரணத்துக்குப்பின் வீட்டுக்கு வரும் மின்னி, தன் பால்யத்தையும் தந்தையின் சொல்லி முடிக்காத கதையையும் பயாஸ்கோப்காரரான ரெஹ்மத் கானின் பின்புலத்தையும் தேடி கண்டடைவதுதான் கதை.

பார்வை

1892-ல் மேற்குவங்கத்தின் கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதையான ‘காபூலிவாலா’வின் பாத்திரங்களை, அடிப்படையாகக் கொண்டு நிறைய மாற்றங்களுடன்(சிறுகதையில் அவர் உலர் பழங்கள் விற்கிறார், மேலும் அதில் சினிமா பற்றி இல்லை) இயக்குநர் தேப் மேத்தெகர், சுனில் தோஷி மற்றும் ராதிகா ஆனந்துடன் சேர்ந்து கதை, திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார். 1957-ல் இதே சிறுகதை வங்காள மொழியில் திரைப்படமாக வந்து தேசிய விருது வென்றிருக்கிறது. 1961-ல் இது இந்தியிலும் படமாக வெளிவந்திருக்கிறது.

ஆதாரக் கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருந்தாலும், முன்னும் பின்னுமாக சம்பவங்களைக் கோத்து கதை சொல்வது, சிறு பிளாஷ்-பேக் காட்சிகள், சிறு வயதில் பார்த்த சினிமாவால் அதையே பயிலும் ஆர்வம் என நம்பகமான கதையமைப்பை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அதேபோல் அதிகம் சொல்லப்படாத பின்னணிகள் (தந்தையின் சிநேகிதி ஷோபிதா), ஆப்கானிஸ்தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் என திரைக்கதை நியாயமாக என்ன கோருகிறதோ அதற்கான கச்சிதங்களுடன் ஈர்த்துவிடுகிறார், விளம்பர படங்கள் எடுத்து முதல் படத்தை இயக்கி இருக்கும் தேப் மேத்தெகர். பழைய இந்தி நடிகை மீனா குமாரியின் சாயலில் இருக்கிறார் மின்னியாக வரும் கீதாஞ்சலி தபா. பால்ய ஞாபகங்கள், அதிக நெருக்கமில்லாத, எப்போதும் புகைப்படக் கருவியின் வெளியே இறுக்கமான பாதி முகத்தை மட்டும் காட்டிய தந்தையின் உறவு, அவரது மரணம், தவிப்பு, நினைவுகள் என கதாபாத்திரத்துக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கீதாஞ்சலி தபா (தாகூரின் கதைக்கு பொருத்தமான பெயர்!).

அதே போல், தமிழில் ‘எந்திரன்’ உட்பட பல படங்களில் எதிர்மறைக் கதாபாத்திரமாகவே நமக்கு பழகிப் போன டேனி டென்சொங்பா பாசம் நிறைந்த ஒரு பதானி அகதியாக, தந்தையாக என நிறைவாக நடித்திருக்கிறார். இது அமிதாப் பச்சன் நடித்திருக்க வேண்டிய கதாபாத்திரம் எனப் படிக்கும்போது, அவரே செய்திருந்தால் இதன் வீச்சு இன்னும் கூடுதலாக இருந்திருக்கும் எனத் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் டேனியின் நடிப்பைக் குறைத்து மதிப்பிட அவர் நமக்கு வாய்ப்புத் தரவில்லை.

ரஃபி மெஹ்மூத்தின் ஒளிப்பதிவும் (குறிப்பாக ஆப்கானிஸ்தான் காட்சிகள்) சந்தேஷ் சாண்டில்யாவின் பின்னணி இசையும், தீபிகா காலராவின் சுருக்கமான படத்தொகுப்பும் நிறைவான பங்களிப்பாக அமைந்திருக்கிறது. எரிந்துபோன சினிமா கூடம், சிறு வயதில் சினிமா காண்பித்தவரால் பின்னாளில் இயக்குநராக ஆவது என இத்தாலிய ‘சினிமா பாரடைஸோ’வையும் நமக்கு நினைவுபடுத்துகிறது.

சிறுகதையில் காபூலிவாலாவுக்கும் சிறுமிக்கும் இருக்கும் பிணைப்பு படத்தில் சற்று குறைவாக இருப்பது, சுமாரான ஒரு பாடல், வாஹிதாவின் தேடலில் சற்றே திசை மாறும் கதை போன்ற சிறு குறைகளைக் கொண்டிருந்தாலும் ஒரு அறிமுக இயக்குநர் பிரபலமான சிறுகதை ஒன்றின் ஒருவரிக்கதையை தழுவி 95 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாக எடுத்திருப்பது நல்ல முயற்சி. நிஜ வாழ்வும் அதற்கு ஈடான நினைவுகளும் ஊடாடும் முதன்மைக் கதாபாத்திரத்தின் வாழ்க்கை திரையில் உயிர்ப்புடன் விரிகிறது.

தொடர்புக்கு: tottokv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x