Last Updated : 22 Jun, 2018 10:52 AM

 

Published : 22 Jun 2018 10:52 AM
Last Updated : 22 Jun 2018 10:52 AM

பீலேயின் நடனம்

உலகக் கோப்பை கால்பந்து – 2018

1950-ல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியில், உருகுவேயிடம் பிரேசில் தோல்வியடைந்தது. அது வலி மிகுந்த தோல்வி (உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்பதைப் போன்றது). ஒட்டுமொத்த பிரேசிலும் சோகத்தில் மூழ்கியது. பீலேவுடைய தந்தை (சீ ஜார்ஜ்) ரேடியோவில் பிரேசில் தோற்றதைக் கேட்டுக் கண்ணீரோடு புலம்புவார்.

அப்போது சிறுவனாக இருந்த பீலே, தான் வளர்ந்து அந்தக் கோப்பையை நாட்டுக்காக வெல்வேன் என்று அவரிடம் சத்தியம் செய்வார். அந்தச் சத்தியத்தை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பதுதான் ‘பீலே, பெர்த் ஆஃப் எ லெஜெண்ட்’ எனும் திரைப்படம்.

2016-ல் வெளியான இந்தப் படம் கால்பந்தை நேசிக்கும் ரசிகர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படம் கால்பந்து விளையாட்டின் அழகைத் தனியே பிரித்தெடுத்து நமக்குக் காட்டுகிறது. கால்பந்தை நேசிக்காதவர்களுக்கு அந்தப் படத்தில் இருக்கும் நடனம் பிடிக்கும். ஆம், பிரேசில் வீரர்களின் கால்பந்தாட்டம், நடனத்தைப் போன்றது.

கறுப்பும் வெள்ளையும்

1958-ல் சுவீடனில் நடந்த உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி பிரேசிலைத் தலைகீழாக மாற்றியது எனச் சொல்லலாம். ஏனென்றால், 1950-லும் 1954-லும் பிரேசில் அடைந்த தோல்வி விளையாட்டைத் தாண்டி, ஒருவித அச்சத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது. இதனால், 1958 உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் சுவீடனை பிரேசில் எதிர்கொண்டது, மகிழ்ச்சிக்குப் பதில் நடுக்கத்தையே பிரேசில் நாட்டவருக்கு ஏற்படுத்தியது.

போட்டிக்கு முன்பாக சுவீடன் நாட்டில் பிரேசில் அணி அவமானப்படுத்தப்பட்டது, எள்ளி நகையாடப்பட்டது. அந்த இறுதிப் போட்டியை வெறும் விளையாட்டுப் போட்டியாக பிரேசிலும் கருதவில்லை. உலகமும் கருதவில்லை. ஆள்பவர்களுக்கும் அடிமை நாடுகளுக்கும் இடையேயான போட்டியாக, கறுப்பினத்தவருக்கும் வெள்ளையினத்தவருக்கும் இடையேயான போட்டியாக அது கருதப்பட்டது.

ஒரு வீரர் பிறந்தார்!

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் விளையாடிய பிரேசில் அணியில் 17 வயது நிரம்பிய எட்ஸன் அரான்டேஸ் டோ நஸ்கிமெண்டோ எனும் இளைஞர் இருந்தார். வாயில் நுழைய முடியாத பெயரைக் கொண்டிருக்கும் அந்த இளைஞரின் மறுபெயர் பீலே. இன்றளவும் மிகக் குறைந்த வயதில் உலகக் கோப்பை இறுதி போட்டியில் விளையாடிய வீரரும் கோல் அடித்த வீரரும் அவர்தான்.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக அந்தப் போட்டிக்குப் பின் அவர் எவ்வாறு உருவெடுத்தார் என்பதை இந்தத் திரைப்படம் உயிர்ப்புடன் காட்சிப்படுத்தியுள்ளது. ஜெஃப் ஜிம்பால்ஸ்ட்டும் மைக்கேல் ஜிம்பால்ஸ்ட்டும் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தைத் தயாரித்தவர்களில் பீலேயும் ஒருவர். அது மட்டுமல்லாமல், ஒரு சிறப்புத் தோற்றத்தில் அந்தப் படத்தில் தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார் பீலே.

விளையாட்டு முறை

கால்பந்துப் போட்டியில் வெறுமனே ஜெயிப்பது மட்டும் பிரேசிலுக்குப் போதாது. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அழகாக விளையாடி வெற்றிபெற வேண்டும். அந்த வெற்றியைத்தான் பிரேசில் வீரர்களும் ரசிகர்களும் எப்போதும் விரும்புவார்கள். அவர்களின் விளையாட்டு ஒரு வித மகிழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்குள் கடத்தும் மாயாஜாலத் தன்மையைக்கொண்டது. ‘ஜிஞ்கா’ என்றைழைக்கப்டும் அந்த விளையாட்டு முறை, தலைமுறை தலைமுறையாக அவர்களிடம் நிலைத்திருப்பது.

அவர்களைப் பொறுத்தவரை கால்பந்து என்பது கோல் அடிப்பது அல்ல. அது எதிரணி வீரர்களின் கால்களுக்கு இடையே லாவகமாகப் பந்தைக் கடத்தி ஆடும் நடனம். பிரேசிலின் அந்த லாவக நடனத்துக்கு உலகெங்கும் ரசிகர்கள் ஏராளம். உலகக் கோப்பையில் பிரேசில் ஜெயிக்காதா என்ற ஏக்கம் இன்றும் கால்பந்து ரசிகர்களுக்கு இருப்பதற்கும் அந்த அணியின் மீதான மக்களின் ஈர்ப்புக்கும் பீலே என்ற அந்த இளைஞன் 1958-ல் வெளிப்படுத்திய ஜிஞ்கா ஆட்டம் முக்கியமான காரணம்.

கலைஞர்களின் பங்களிப்பு

வறுமையிலும் வெறுமையிலும் உழன்றுகொண்டிருந்த பீலேயின் ஆரம்ப கால வாழ்வை இந்தப் படம் நமக்கு விவரிக்கிறது. எல்லாச் சாதனையாளர்களையும் போல் பீலேயும் அவமானங்களையும் வேதனைகளையும் கடந்துதான் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். எனவே அவர் கதையைப் படமாக எடுப்பது அரைத்த மாவையே அரைப்பதுதான் என்றாலும் பீலேயின் ஜிஞ்கா, அவருக்கு மட்டுமல்ல இந்தப் படத்துக்கும் தனித்துவத்தை அளிக்கிறது.

பீலேயின் ஆட்டத்தில் இருந்த நளினத்தையும் வேகத்தையும் இந்தப் படம் அழகாகவும் அற்புதமாகவும் காட்சிப்படுத்தியுள்ளது. சிறுவயது பீலேயாக ‘லியோனார்டோ லிமா கார்வால்ஹோ’ நடித்துள்ளார். 17 வயது பீலேயாக ‘கெவின் டி பவுலா’ நடித்துள்ளார். இருவருமே நன்றாக நடித்திருந்தாலும், லியோனார்டோவின் நடிப்பே நம் மனதுக்கு ஏற்புடையதாக உள்ளது. பீலேவுடைய தந்தையாக நடித்திருக்கும் சீ ஜார்ஜ், பிரேசிலின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அவர் படத்துக்கு இசையமைக்காமல், கால்பந்துப் போட்டிக்கே இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ‘மத்தேயு லிபடிக்’தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. முக்கியமாக, பீலேயின் ஜிஞ்காவை தத்ரூபமாக அவர் காட்சிப்படுத்திய விதம் பிரமிப்பூட்டுகிறது.

பொதுவாக, வாழ்க்கைச் சரித்திரங்களைத் திரைமொழியில் அடக்குவது மிகவும் சவாலானது. ஏனென்றால், வாழ்க்கைச் சரித்திரத்தின் ஆச்சரியங்கள் எல்லாம் பார்வையாளர்களுக்கு முன்பே தெரிந்தவையாக இருக்கும். பீலேயின் வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் கதையிலும் புதிதாக ஆச்சரியங்கள் ஏதுமில்லை. ஆனால், அதை ஈடுகட்ட, பீலே எனும் உலகின் தலை சிறந்த கால்பந்து வீரரின் ரத்தமும் சதையுமான வாழ்வும் அவரின் ஜிஞ்காவும் பிரேசிலின் சம்பா நடனமும் உள்ளன.

தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x