Published : 08 Jun 2018 09:01 AM
Last Updated : 08 Jun 2018 09:01 AM
தமிழர்கள் அதிகம் வாழும் மும்பை தாராவி பகுதியில் எந்த சிறு அசைவாக இருந்தாலும் அது ரஜினி (காலா சேட் என்கிற கரிகாலன்) சொல்படிதான் நடக்கிறது. பெரிதாக அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும், மகிழ்ச்சியோடு வாழும் அப்பகுதி ஏழை மக்களின் குடிசைகளை அப்புறப்படுத்திவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை எழுப்பி பணம் பார்க்க முயற்சிக்கிறார் நானா படேகர் (ஹரி தாதா). அதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து, அந்தத் திட்டத்தை எதிர்க்கிறார் ரஜினி. அவரை எப்படியாவது மடக்கி தன் வேலையை சாதித்துக்கொள்ள முற்படுகிறார் நானா படேகர். இந்தச் சூழலில், வெளிநாட்டில் வசித்துவந்த ரஜினியின் முன்னாள் காதலி ஹியூமா குரேஷி, தாராவி பகுதியை நவீனமயமாக்கும் திட்டத்தோடு சொந்த ஊருக்கு வருகிறார். அவர் முன்னெடுக்கும் முயற்சிகள் என்ன? அதற்கு ரஜினியின் ஒத்துழைப்பு இருந்ததா? நானா படேகர் தன் எண்ணப்படி ரஜினியை மடக்கி ‘ப்யூர் மும்பை’ திட்டத்தை தாராவியில் அமல்படுத்தினாரா என்பது மீதிக் கதை.
‘நிலம் எங்கள் உரிமை’ என்பதை அடிநாதமாக வைத்து தனக்கான பார்வையோடு ரஜினி ரசிகர்களுக்காக அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ரஜினி படமாக இருந்தாலும், தனது அரசியல் கருத்துகளை படம் முழுக்க நேர்த்தியாக தூவியிருக்கிறார்.
படம் முழுவதும் காலா சேட்டாக கம்பீரம் காட்டுகிறார் ரஜினி. மனைவி ஈஸ்வரி ராவிடம் அசடு வழியும்போதும், முன்னாள் காதலியான ஹியூமா குரேஷியை சந்திக்கும்போதும் பார்வையால் மென்மையான உணர்வுகளை கவிதையாக வெளிப்படுத்துகிறார். ஆக்சன், ஸ்டைல், ரொமான்ஸ் அனைத்திலும் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கிறார். கருப்பு வேட்டி, நரைத்த தாடி, சுருங்கிய தோல், அதற்கு மத்தியில் தீட்சண்யமான கண்கள் என்று வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் ரஜினி செம மாஸ்!
ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ் சிறிது நேரமே வந்தாலும், நெல்லைத் தமிழ் மணக்கப் பேசுவதும், கணவனின் காதலில் கசிந்துருகுவதும், கணவனின் பழைய காதலியை நினைத்து வெம்புவதுமாய் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்.
முன்னாள் காதலியாக வரும் ஹியூமா குரேஷி, நடிப்பிலும், மக்களுக்காக முன்னெடுக்கும் விஷயங்களிலும் ஈர்க்கிறார். ஆனாலும் ரஜினியுடனான பிளாஷ்பேக் நினைவைப் பகிர்தல் உள்ளிட்ட இடங்கள் ஒட்டவில்லை. சில இடங்கள் ‘கபாலி’யை ஞாபகப்படுத்துகின்றன.
சமுத்திரக்கனிக்கு படம் முழுவதும் ரஜினியுடன் வரும் கேரக்டர். தன் அனுபவத்தால் குறைவின்றி செய்திருக்கிறார். ஆனால், எல்லா காட்சியிலுமே பாட்டிலும் கையுமாக காட்டியதை தவிர்த்திருக்கலாம்.
படத்தின் பெரிய பலம், வில்லனாக வரும் நானா படேகர். ஊரே நடுங்கும் அரசியல்வாதியாக இருந்தாலும் அமைதியாக வில்லத்தனம் செய்யும் மிரட்டல் கேரக்டர். அதிகாரத்தின் அதீத ருசி கண்ட ஒருவர், அதைத் தக்கவைக்க, என்ன செய்வார் என்பதை தன் உடல்மொழியால் உணர்த்துகிறார். ரஜினிக்கு இணையாக பல இடங்களில் மாஸ் காட்டுகிறார். ரஜினியும், நானாவும் வரும் சீன்கள் படத்தை உச்சபட்ச பரபரப்புக்கு எடுத்துச் செல்கின்றன.
லெனினாக வரும் மணிகண்டன், அஞ்சலி பாட்டீல், சம்பத், அருள்தாஸ் என யாரும் சோடை போகவில்லை. இத்தனை பாத்திரங்கள் இருந்தும் எங்கும் சறுக்கவில்லை; நேர்த்தியான திரைக்கதையால் சலிப்பில்லாமல் நகர்கிறது படம்.
பாடல்கள் படத்தின் ஓட்டத்தோடு கலந்திருப்பதால் ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். குறிப்பாக, ரஜினி நடந்து வரும்போது ஒலிக்கும் தீம் மியூசிக்கில் அரங்கம் அதிர்கிறது.
படம் முழுக்க வரும் தாராவி பகுதி, ‘செட்’ என்பதை நம்ப முடியவில்லை. கலை இயக்குநர் ராமலிங்கத்தின் கலை இயக்கம், முரளியின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு ஆகிய மூன்றும் சேர்ந்து தாராவியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, ரஞ்சித் மூவரும் இணைந்து எழுதி இருக்கும் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம். இடைவேளைக்குப் பிறகு படம் சில இடங்களில் லேசான தொய்வு ஏற்பட்டாலும் வலுவான திரைக்கதை, அதை சரிசெய்துவிடுகிறது. ரஜினி அரசியலில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் வந்திருக்கிற படம் இது. அவர் ஒரு கட்சியின் அபிமானி என்ற பரவலான விமர்சனத்துக்கு நேர் எதிராக அமைந்திருக்கிறது படத்தின் காட்சியமைப்பும், கதாபாத்திரங்களும்.
ரஜினி - தாராவி மக்கள் இடையிலான அன்பு, பாசம், நெருக்கத்தை பெரிதாக காட்டாதது, ‘உனக்கு கரிகாலனைத் தெரியும்; ஆனா முழு ரவுடியா இந்த காலாவைத் தெரியாதுல்ல!’ என்று பஞ்ச் பேசிய பிறகும், ரஜினி பெரிதாய் எதுவும் செய்யாதது, ரியாலிட்டியாக கதையை பயணிக்கவைத்து, கிளைமாக்ஸை சினிமாத் தனமாக முடித்திருப்பது என்று சிற்சில குறைகள் இருந்தாலும் அதைஎல்லாம் தாண்டி நம்மைக் கவர்கிறார் 'காலா'. அதேநேரம், பதிலுக்கு பதில் வன்முறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துதான் உரிமையை அடைய முடியும் என காட்சிப்படுத்திய விதத் தில் சற்று கலக்கமூட்டுகிறார். படத் தின் முன்பகுதியை சற்று குறைத்து ரஜினிக்கான வேகம், கோபம், மாஸ் காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தியிருந்தால் ‘காலா’வுக்கு இன்னும் கலகலப்பு கூடியிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT