Published : 29 Jun 2018 10:29 AM
Last Updated : 29 Jun 2018 10:29 AM

திரைப்பள்ளி 10: ஒரு போராட்டத்துக்கான தொடக்கம்!

 

து நல்ல சினிமா என்ற கேள்வி பாலுமகேந்திராவிடம் கேட்கப்பட்டது. “சினிமா என்பது ரசனையின் மிக உயரிய வடிவம், இரண்டரை மணி நேரத்தில் மனமாற்றத்தை உருவாக்கும் கலையும் அதுதான். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான உணவை உண்கிறோம். உணவின் ருசியைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் சிறந்த உணவு எது எனக் கேட்டால், அம்மா கொடுக்கும் உணவுதான் என்று சொல்கிறோம்.

காரணம், அவள் அன்போடும் ஆசையோடும் நமது வயிற்றுக்கு ஊறு நேராத விதத்தில் மிகுந்த கவனத்துடன் சமைத்த உணவை நமக்குக் கொடுக்கிறார். அதைப் போன்றதே நல்ல சினிமா. அப்படிப்பட்ட சினிமா, பார்க்கிறவர்களின் மிருக உணர்வைத் தூண்டி விடாத வண்ணம், நம் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்”என்றார்.

அம்மா ஆசையோடு சமைத்த உணவாக இருந்தாலும் அதில் அளவாக உப்பு சேர்க்கப்படாவிட்டால் அது சப்பென்றுதான் இருக்கும். ஒரு நல்ல சினிமாவுக்குச் சுவையைக் கூட்டுவதில் திரைக்கதைக்கதையின் பங்கு கணிசமானது. நல்ல சினிமா என்ற வரையறைக்குள் அடக்க, நம்மிடமும் தற்போது சினிமாக்கள் இருக்கின்றன. என்றாலும் ‘லைஃப் ஆஃப் பை’ படத்தின் திரைக்கதை வழியே ஒரு நல்ல திரைக்கதை, மூன்று அங்க முறை எனும் அடிப்படையான வடிவ நேர்த்தியை எப்படி தன்னுள் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அதற்கு முன் அந்தப் படத்தின் கதைச் சுருக்கம். அடுத்துவரும் சில அத்தியாயங்களிலும் ‘லைஃப் ஆஃப் பை’ திரைக்கதையின் நுட்பங்கள் தொட்டுக் காட்டப்படும் என்பதால் யூடியூபில் கிடைக்கும் அந்தப் படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

யார் இந்த பை?

சுதந்திரத்துக்கு முந்தைய பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு பிரெஞ்சு பகுதியாக இருந்த பாண்டிச்சேரியில் பிறந்து, வளர்ந்தவன் பை. சிறுவயது முதலே நீச்சல் அறிந்தவன். அவனுடைய தந்தை அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் விலங்குக் காட்சிச் சாலை ஒன்றை நடத்துகிறார். அதில் பலவிதமான விலங்குகளோடு ரிச்சர்ட் பார்க்கர் என்று பெயர் சூட்டப்பட்ட வங்கப் புலி ஒன்றும் இருக்கிறது. விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட பைக்கு, அந்தப் புலியை மிகவும் பிடிக்கும். “விலங்குகளுக்கும் ஆன்மா உண்டு, அவற்றின் கண்களில் அதை நான் பார்த்திருக்கிறேன்” எனக் கூறுபவன் பை.

எதிர்பாராத சூழ்நிலையில் விலங்குக் காட்சிச் சாலையை பையின் தந்தையால் தொடர்ந்து நடத்த முடியாமல் போகிறது. இதனால் விலங்குகளை வடக்கு அமெரிக்கா கொண்டு சென்று விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கனடாவில் குடியேறி வாழ அவர் முடிவெடுக்கிறார்.

ஒரு சரக்குக் கப்பலில் விலங்குகளை ஏற்றிக்கொண்டு, அதே கப்பலில் பையின் குடும்பமும் பயணிக்கிறது. நான்கு நாள் பயணத்துக்குப் பின் அவர்களது கப்பல் கடும் புயலில் சிக்கித் தத்தளிக்கிறது. பையின் குடும்பத்தினர், விலங்குகளுடன் கப்பல் மூழ்கிவிட, உயிர்காக்கும் படகொன்றில் தஞ்சம் அடைகிறான் பை. அதில் பையுடன் ஒரு வரிக்குதிரை, ஒரு ஒராங் ஊத்தன் குரங்கு, ஒரு கழுதைப்புலி ஆகியவற்றுடன் அந்த வங்கப் புலியும் ஏறித் தப்பிக்கின்றன. புயல் அடங்கி கடல் அமைதியானதும் அங்கே உயிர் பிழைப்பதற்கான போராட்டம் தொடங்குகிறது.

கழுதைப் புலி முதலில் வரிக் குதிரையைக் கொல்கிறது. அடுத்துக் குரங்கைக் கொல்கிறது. அவ்விரு சைவ விலங்குகளையும் காப்பாற்ற பை முயன்றும் கழுதைப் புலியின் பசியே வெல்கிறது. ஆனால், வாழ்க்கையின் சுழற்சியில் கழுதைப் புலியைவிட வலிமையான விலங்கான அந்த வங்கப் புலியின் பசிக்குக் கழுதைப் புலி பலியாகிறது.

இப்போது பையை நோக்கித் திரும்புகிறது புலி. “மனுசங்களப் போல சிந்திக்கிற பகுத்தறிவு, விலங்குகளுக்கு இல்ல. அந்த உண்மைய புரிஞ்சுக்காதவங்கதான் அதுங்ககிட்ட உயிரை இழந்துடுறாங்க. அந்தப் புலிகிட்ட நீ என்னைக்கும் விளையாடாத, எந்த ஒரு விலங்கா இருந்தாலும் அதோட கண்கள்ல உன்னோட உள்ளுணர்வத்தான் நீ பிம்பமாகப் பார்க்கிற” என்று பையின் தந்தை முன்பு அவனுக்குச் செயல்முறைப் பாடம் நடத்தியது, இப்போது அவனைச் செயல்பட வைக்கிறது. உயிர்காக்கும் படகின் துடுப்புகளைக் கொண்டு ஒரு மிதவையைக் கட்டும் பை, ஒரு கயிறு மூலம் படகின் ஒருமுனையுடன் அதை இணைத்துவிட்டு புலியிடமிருந்து தப்பிக்க அதில் மிதக்கத் தொடங்குகிறான்.

ஆள் அரவமற்ற அந்த ஆழ் கடலில், இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன்னால் இப்போது பையும் புலியும் மட்டும் இருக்கிறார்கள்.

பசியின் வேட்டைக்குப் பலியாகாமல் இருக்கத் தண்ணீரில் இறங்கி மீன் வேட்டை ஆடுகிறது புலி. இதை அறிந்ததும் புலியிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதற்கு எஜமானன் ஆகப் போராடுகிறான் பை. அந்தப் போராட்டத்தில் யாருக்கு வெற்றி கிடைத்தது, ரிச்சர்ட் பார்க்கர் என்ற அந்தப் புலிக்கும் பைக்கும் இடையில் உறவு துளிர்த்ததா, இல்லையா, இறுதியில் புலியும் பையும் உயிர் பிழைத்து கரை சேர்ந்தார்களா என்பதே முடிவு.

அறிமுகமும் தொடக்கப் பிரச்சினையும்

158 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் பை. அதேநேரம் ரிச்சர்ட் பார்க்கர் என்ற அந்த வங்கப் புலி மற்றொரு மையக் கதாபாத்திரம். இரண்டு கதாபாத்திரங்களோடு மூன்றாவதாகவும் ஒரு முக்கியக் கதாபாத்திரம் பெரும்பகுதி திரைக்கதையை ஆக்கிரமித்திருக்கிறது. இயற்கை எனும் பிரம்மாண்டம் அது.

பையின் வாழ்க்கையை நாவலாக எழுத விரும்பும் கனடா நாட்டு எழுத்தாளரிடம் தற்போது வளர்ந்து பேராசிரியராக இருக்கும் பை, தனது கதையை விவரித்துக் கூறத் தொடங்குகிறார். பிளாஷ் – பேக்கில் பையின் பால்ய காலம் பாண்டிச்சேரியில் விரிகிறது. ஒரு இந்துவாகப் பிறந்த பைக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்து மதம் வலியுறுத்தும் கர்மப் பலனை நம்பும் பை, கிறிஸ்தவத்தின் அடித்தளமான தியாகம் முஸ்லிம் மார்க்கம் பின்பற்றும் சகோதரத்துவம் ஆகிய அம்சங்களும் அவனுக்குப் பிடித்துப்போகின்றன.

இந்த மூன்று மதங்களையும் கடைப்பிடிக்க விரும்பும் பையின் ஆன்மிகத் திறப்பு அவனை மேலும் மென்மையானவனாக மாற்றுகிறது. ஆனந்தி என்ற பெண்ணின் மீது காதலும் விலங்குகள் மீதான பரிவும் முகிழ்கின்றன.

முதல் அரை மணி நேரத்தில் பிரெஞ்சு ஆட்சியில் இருக்கும் பாண்டிச்சேரி, அங்கே பையின் குடும்பம், பையின் பெயர்க் காரணம், அதன் வழியே அவன் நீச்சல் கற்றுக்கொண்ட பின்னணி, அவனுக்கு அறிமுகமாகும் பிற மத தரிசனம், அவனது தந்தையின் விலங்குக் காட்சிச் சாலை, அதிலிருக்கும் ரிச்சர்ட் பார்க்கர் என்ற புலி, அதன் பெயர்க் காரணம், அது ஒரு ஆபத்தான விலங்கு என்பதை நிரூபிக்க முற்படும் தந்தையின் செயல், வளர்ந்து இளைஞனாகும் பை, தன் காதலிக்கு புலியை அறிமுகப்படுவது என முதன்மைக் கதாபாத்திரமான பை, சிறுவனாக இருந்து இளைஞனாக வளர்ந்து நிற்பதுவரை நிறுவுகிறது திரைக்கதையின் முதல் அங்கம்.

அதன் முடிவில், விலங்குக் காட்சிச் சாலையைத் தொடர்ந்து நடத்த முடியாது என்ற முதல் பிரச்சினையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறது. இரண்டாம் அங்கமான நடுப் பகுதியில், பை நடுக் கடலில் சிக்கிக்கொள்ளும் முக்கிய சம்பவம் ஏன் நமக்கு நம்பகமாக இருக்கிறது, முதல் அங்கம், நடுப் பகுதிக்கு நம்மை எப்படித் தயார்படுத்தியது? அது பற்றி அடுத்த வகுப்பில் கண்போம்.

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x