Published : 22 Jun 2018 10:52 AM
Last Updated : 22 Jun 2018 10:52 AM
வள்ளியூர் ஏ.பி.எஸ் ரவீந்திரன் - பத்திரிகைகளில் வாசகர் கடிதம் பகுதிகளைப் படிக்கிறவர்களுக்கும் வானொலி கேட்கிறவர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர். நாகர்கோவில்வாசிகளுக்கோ இன்னும் நெருக்கமானவர். நாகர்கோவிலில் ஏ.பி.எஸ் ஜவுளிக்கடை, பாஸ்கர் தங்கும்விடுதி, வள்ளியூரில் ஏ.பி.ரத்தினமால், அங்கும் ஒரு ஜவுளிக்கடை எனப் பல தொழில் நிறுவனங்களை நடத்திவந்த வெற்றிகரமான தொழிலதிபர்.
நாகர்கோவில் நகர ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவரும் அவரே! அரிமா சங்க மாவட்ட ஆளுநராக இருந்தபோது பல அரசுப் பள்ளிகளுக்குக் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தந்தவர். குமரியில் பல இலக்கிய அமைப்புகளுக்குப் புரவலராகத் துணை நின்றார். இலக்கியக் கூட்டங்கள் நடத்த இலவச அரங்க வசதி செய்து கொடுத்திருந்தார். அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டேபோகலாம் என்றாலும் அவரே விரும்பிய முதன்மையான அடையாளம் ‘தீவிர வாசகர்’.
ஒருமுறை அவரது ஜவுளிக்கடையின் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது அவரது மேஜையில் ஆயிரத்துக்கும் அதிகமான தபால் அட்டைகள். “என்ன சார், மொத்த போஸ்ட் ஆபீசையே காலிபண்ணி வைச்ச மாதிரி இருக்கு, ஒருவருசத்துக்கு இது போதுமா என்று கேட்டபோது, “இரண்டு மாசம் போனா பெருசு” என்றார். உண்மைதான், அவர் மிகைப்படுத்தவில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள், தமிழகம் மற்றும் கடல் கடந்து ஒலிக்கும் வெளிநாட்டுத் தமிழ் வானொலி அலைவரிசைகள் ஆகியவற்றுக்கு நாள் ஒன்றுக்கு 50 முதல் 75-க்குக் குறையாமல் வாசகர் மற்றும் நேயர் கடிதங்கள் எழுதி, தன் கைப்பட அஞ்சல் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
“எவ்வளவு பிஸியாக வியாபாரம் நடந்துகொண்டிருந்தாலும் அவரது கை வாசகர் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கும். ஒருமுறை கேட்டேன். அப்பா, உங்களுக்குக் கை வலிக்கலையா, இப்படி எழுதுறதால உங்களுக்கு என்ன லாபம் என்றேன். அதுக்கு அவர் ‘என்னை மாதிரி லட்சக்கணக்கான வாசகர்களோட கருத்துகள்தான் பத்திரிகைகளுக்கும் அதில எழுதறவங்களும் உண்மையான வைட்டமின். வாசகர்கள் கருத்துதான் மக்களோட மனசு.
எந்த சார்பும் இல்லாம, வாசிச்சு முடிச்சதும் மனசுலப்பட்டதை பளிச்சுன்னு உடனே எழுதி அனுப்பணும். நம்ம கடிதம் முதல் கடிதமா பத்திரிகை அலுவலகத்துல கிடைக்கணும். நல்ல கருத்துகள் படிப்படியா செயலா மாறும்’ன்னு அப்பா சொன்னார்” என்று கண் கலங்குகிறார் ரவீந்திரனின் மகன் ரத்னசாமி. அவரது கலக்கத்துக்குக் காரணம் கடந்த 7-ம் தேதி இரவு, வாசகர் ஏ.பி.எஸ் ரவீந்திரன் மாரடைப்பால் மறைந்துவிட்டார்.
அஞ்சல் அட்டைகளோடு நிறுத்திவிடாமல் தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்ப மின்னஞ்சலிலும் வாசகர் கடிதம் அனுப்பிவந்த வள்ளியூர் ஏ.பி.எஸ் ரவீந்திரனின் மறைவு, பத்திரிகை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. காலத்துக்கும் நினைவுகூரப்படுவார் வாசகர் ரவீந்திரன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT