Last Updated : 20 Sep, 2024 12:15 PM

2  

Published : 20 Sep 2024 12:15 PM
Last Updated : 20 Sep 2024 12:15 PM

நுனக்குழி (மலையாளம்) - திரைப் பார்வை | பிழைகளின் தோரணம்!

மறைந்த கிரேசி மோகன் உயிர்பெற்று வந்து, ஒரு மலையாளத் திரைப் படத்துக்குத் திரைக்கதை அமைத்து, வசனம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும்!? அப்படியொரு ஆச்சர்யம் அளித்திருக்கிறார் ‘நுனக்குழி’ (பொய்களின் குழி) படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கும் கே.ஆர். கிருஷ்ணகுமார். பேசில் ஜோசப், கிரேஸ் ஆன்டனி, பைஜூ சந்தோஷ் இணைந்து நடித்துள்ள இப்படத்தை ‘த்ரிஷ்யம்’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கிறார்.

ஒரு ரகசியக் காணொளி அடங்கிய மடிக்கணினி. அதைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் தொழிலதிபர். மணமுறிவால் மனமுடைந்து தற்கொலைக்கு முயலும் ஒரு ஐடி ஊழியர். சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு கதாநாயக நடிகர். பொய் சாட்சி சொன்னதால் அடிவாங்கிய ஒரு பல் மருத்துவர்.

ஒரு வருமான வரித்துறை அதிகாரி, அவரின் உறவினராக வரும் ஒரு நாளைய இயக்குநர். இவர்கள்தான் கதை மாந்தர்கள். இவர்கள் அனைவரின் பொய்களையும் ஒற்றைப் புள்ளியில் இணைக்கிறது திரைக்கதை. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களைக் கொண்ட இக்கதை, மேற்பரப்பில் சாதாரணமாகத் தோன்றினாலும் ஒரு திருகுவெட்டுப் புதிர்போல் விரியும் இதனை ஒரு திகில் படத்துக்கு இணையாகச் சுவாரசியப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியின் தொடக்கத்திலும் ஒரு குழப்பத்தைக் காட்டி, அதன் இறுதியில் எதிர்பாராத விதமாக நகைச்சுவை கலந்து முடித்திருப்பது சிறப்பு. எந்தவொரு கதாபாத்திரமோ, சம்பவமோ வீணடிக்கப் படாதது வியப்பு. ஒவ்வொரு காட்சித் துணுக்கும் கதையை நகர்த்தும் விதமாக சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வி.எஸ்.விநாயக்கின் படத்தொகுப்பு காட்சிகளை இன்னும் கூர்மையாக நம் முன் வைக்கிறது. குறைவான பாடல்கள், சற்றே கூடுதல் ஒலியுடன் பின்னணியிசை ஆகியவற்றை கதைக் களத்துக்கு வலிமை சேர்க்கும்விதமாக அமைத்திருக்கிறார்கள் விஷ்ணு ஷியாம் மற்றும் ஜெ.உன்னித்தன்.

கதாசிரியர் கே.ஆர்.கிருஷ்ணகுமாரும் இயக்குநர் ஜீத்து ஜோசப்பும் ஏற்கெனவே ‘டுவெல்த் மேன்’, ‘கூமன்’ போன்ற தீவிரமான திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி யிருந்திருக்கின்றனர். அப்படங்கள் எதிர்பார்த்த வணிக வெற்றியை அடைய முடியவில்லை. ஆனால், நுணுக்கமான திரைக்கதை, அட்டகாசமான இயக்கம், தரமான உருவாக்கம் ஆகியவற்றில் இக்கூட்டணி உச்சம் தொட்டுள்ளது.

பேசில் ஜோசப்பின் வெகு இயல்பான நடிப்பும் கிரேஸ் ஆண்டனி, நிகிலா விமல், சித்திக், பைஜு சந்தோஷ் ஆகியோரின் தேர்ச்சி மிகுந்த நடிப்பும் பெரிதும் துணைபுரிந்துள்ளன. நமது ஊர் பாண்டியராஜன் போல் பேசில் ஜோசப்பின் தனித்துவமான அப்பாவித்தனமும் தவிப்பான நடிப்பும் ‘டைமிங் சென்ஸு’ம் கதையின் ஓட்டத்துக்குக் கைகொடுத்திருக்கிறது.

குறிப்பாக, குழப்பமும் பேராசையும் கொண்ட ஆப்ரஹாம் தாரகன் என்கிற காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் பைஜூ சந்தோஷ் கலக்கியிருக்கிறார். கதையின் ஓட்டத்தில், ஒரு மருத்துவமனையில் 20 நிமிடங்களுக்கு மேலாக வெறும் பொய்களை வைத்து ஜோடிக்கப்படும் ஒரு காட்சி வருகிறது. அப்பொய்கள் யாவும் முன்னும் பின்னுமாக மாற்றிச் சொல்லப்படும்போது மொத்தத் திரையரங்குமே சிரிப்பலையில் அதிர்கிறது.

கதை மாந்தர்களின் பிழைகளும் அவற்றின் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்களும் அவ்வளவு அழகாக இரண்டு மணிநேரத்தில் சுவாரசியம் குறையாமல் கோக்கப்பட்டிருக்கின்றன. மலையாளத்தி லிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் சீரியஸ் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு மெல்லிய ஆசுவாசமாகக் குடும்பத்துடன் இரண்டு மணி நேரம் வாய்விட்டுச் சிரித்துக் கழிக்க ஓர் எளிய வழி இந்த ‘நுனக்குழி’

- totokv@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x