Published : 01 Jun 2018 10:54 AM
Last Updated : 01 Jun 2018 10:54 AM
சத்தமே இல்லாமல் சாதித்தவர்கள் என்று ஒருசிலரைச் சொல்லுவார்கள். முக்தா சீனிவாசன் அப்படியான சாதனையாளர். காங்கிரஸ் கிழக்கு என்றால் கம்யூனிஸ்ட் மேற்கு என்று சொல்வார்கள். கம்யூனிச தாக்கம் நெஞ்சினில் வேரெனப் பரவியும் விரவியும் இருக்க... அந்தத் தாக்கத்திலேயே திரைக்குள் நுழைந்தவர் தன் முதல் படத்துக்கு வைத்த தலைப்பு ‘முதலாளி’. ஆனால் தொழிலாளியின் குரலை அதில் ஓங்கி ஒலிக்கச் செய்திருப்பார். அந்த ‘ஏரிக்கரையின் மேலே...’ பாடல், ஏரிகள் பிளாட்டுகளாகிவிட்ட இந்தக் காலத்தில் கூட மனசுக்கு நெருக்கமான பாடல்களில் ஒன்று.
காவிரி மைந்தர்
கும்பகோணம் பக்கம் பூர்வீகம். படிக்க வசதியில்லை. இவரின் துடிப்பையும் சிந்தனைகளையும் பார்த்துவிட்டு, அப்போது அதே பள்ளியில் படித்த மாணவர் ஒருவர், இவருக்கான பள்ளிக்கட்டணத்தைக் கட்டினார். அவர்களின் நட்பு அன்புடனும் மரியாதையுடனும் இன்னும் இன்னுமாகப் பலப்பட்டது. கட்டணத்தைக் கட்டிய மாணவர், ஜி.கே.மூப்பனார். பள்ளியில், பால்யத்தில் தொடர்ந்த நட்பு, சினிமாவுக்கு இவரும் அரசியலுக்கு அவரும் என்றானாலும் கூட, நட்பு மட்டும் ஒரேபாதையில் பயணித்துக்கொண்டே இருந்தது.
சீனிவாசனின் வளர்ச்சியால், ‘சார்’ சொல்லி அவர் கூப்பிட, மூப்பனாரை ‘ஐயா’ என்றே அழைத்து, தோழமையுடன் பழகி வந்தார். இன்றைக்கு ஜி.கே.வாசனிடம் நெருங்கிப் பழகும் அளவுக்கு வயது வித்தியாசம் பார்க்காத குணம் முக்தாவின் தனி ஸ்பெஷல் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
திரைப் பயணம்
வி.சீனிவாசன் பிறகு முக்தா சீனிவாசனானார். ஆனாலும் இவருக்கு சினிமா உலகில், பட்ஜெட் சீனிவாசன் என்று சொல்லும் அளவுக்கு, இவரின் திட்டமிடலைச் சொல்லிப் புகழ்கிறார்கள் திரையுலகினர்.
“ பட்ஜெட் போட்டார்னா கனகச்சிதமாக இருக்கும். அதைத்தாண்டி ஒரு பத்துபைசா கூடச் செலவாகாது. அதேபோல குறித்த நேரத்தில் படப்பிடிப்பு, சொன்ன தேதில ரிலீஸ்னு கட்டுக்கோப்பா வேலை செய்வார் முக்தா சீனிவாசன்’’ என்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். ஏவி.எம் தயாரித்து வீணை எஸ்.பாலசந்தர் இயக்கிய ‘அந்தநாள்’ படத்தில், உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார்.
“அப்பா கத்துக்கிட்டது எல்லாமே மாடர்ன் தியேட்டர்ஸ்லதான். பின்னாடி சொந்தக் கம்பெனிக்கும் படம் டைரக்ட் பண்றதுக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ் அனுபவங்கள் அவருக்கு ரொம்பவே கைகொடுத்துச்சு’’ என்கிறார் முக்தா சீனிவாசனின் மூத்த மகன் ரவி.
நேர்மைக்கு ஒரு முக்தா
நடிகர் திலகத்தின் சகோதரர் சண்முகம் அவருக்கு உறுதுணையாக இருந்தது போல, முக்தா சீனிவாசனுக்கு அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி பக்கபலம், பக்கா பலம்.“செட்டுக்கு வெளியேதான் அண்ணா, தம்பி எல்லாம். உள்ளே வந்துட்டா, அவர் தயாரிப்பாளர். இவர் இயக்குநர். யாரையும் மரியாதைக்குறைவாக் கூப்பிடவே மாட்டார் முக்தா சீனிவாசன். ‘சார்...’, இல்லேன்னா ‘அண்ணா’ போட்டுதான் கூப்பிடுவார். ஏழு மணிக்கு படப்பிடிப்புன்னா, ஆறுமணிக்கே வந்து, மேக்-அப் போட்டுக்குவார் சிவாஜி. இவர் சிவாஜிக்கு முன்னால் அஞ்சு அம்பதுக்கே வந்து நிப்பார்.
அன்றைய காட்சிகளை, வசனங்களை, மாடுலேஷன்களைச் சொல்லிக்கொண்டே வருவார். கண்களை மூடிக் கேட்டுக்கிட்டே இருப்பார். சொல்லி முடிச்சதும், ‘நான் ரெடி சீனு’ன்னு டக்குன்னு எந்திரிப்பார் சிவாஜி சார். நடிச்சு முடிச்சதும், ‘சீன் எப்படி வந்துருக்கு சீனு’ன்னு ஸ்டைலாகக் கேப்பார். அவங்க ரெண்டுபேருக்குள்ளே அப்படியொரு கெமிஸ்ட்ரி இருந்துச்சு.
‘நிறைகுடம்’ படம். சுமாராத்தான் போவும், பரவாயில்லைன்னு கொஞ்சம் சம்பளம் குறைவாத்தான் பேசி ஓகே பண்ணினார் அப்பா. ஆனா படம் செம ஹிட்டு. நல்ல வசூல். ஒருநாள் அப்பா, சிவாஜி சார் வீட்டுக்குப் போய், ஒரு பேப்பர்ல எழுதி வைச்சதைக் காட்டினார். ‘சார், படத்துக்குச் செலவு இது, கலெக்ஷன் இவ்வளவு. நல்ல லாபம். நினைச்சதை விட கூடுதல் லாபம். அதனால அந்த லாபத்துலேருந்து உங்களுக்கான சம்பளத் தொகை’ன்னு சொல்லிக் கொடுக்க, அப்பாவின் நேர்மையைக் கண்டு சிலிர்த்துப் போன சிவாஜி சார், அப்படியே கட்டிப்பிடிச்சிக்கிட்டார் ’’ என்று சொல்லி நெகிழ்கிறார் ரவி.
“ஷூட்டிங்ல, மதியம் ஒண்ணு ஒண்ணரைக்கு லஞ்ச் பிரேக் விடுவாங்க. ஆனா நடிகர் நடிகைகள் சாப்பிட்டு முடிச்சு, டெக்னீஷியன்ஸ் சாப்பிட்டு முடிச்சு, லைட்மேன் உட்பட அடுத்தகட்ட ஊழியர்கள் சாப்பிட மூணு மூணரைன்னு ஆயிரும். இதைப் பார்த்துட்டு ரொம்பவே வேதனைப்பட்ட முக்தா சீனிவாசன், ‘நாளைலேருந்து 12.30 மணிக்கே லஞ்ச் பிரேக்’னு கொண்டுவந்தார்.
அதுமட்டுமா? கைல காசில்லாம, வயித்துல பசியோட இருக்கற சினிமாக்காரங்களுக்கு, முக்தா பிலிம்ஸ்ல படவேலை கிடைச்சிச்சின்னா, சந்தோஷம்தான். உற்சாகம்தான். வேலை முடிஞ்சு போகும்போது, அவரோட அண்ணன் தயாரிப்பாளர் முக்தா ராமசாமி, கைல பணத்தோட ரெடியா இருப்பார்.’முக்தா பிலிம்ஸ்ல வேலையா.. வீட்ல உலையை வைச்சிட்டு தைரியமா வரலாம்’னு ஒரு நம்பிக்கையை விதைச்சாரு’’ என்கிறார் எஸ்.பி.முத்துராமன்.
குடும்பப் படங்களின் நாயகன்
“புதுமை, புரட்சி என்றெல்லாம் இல்லாமல், எல்லோரும் பார்க்கும்படி, குடும்பத்துடன் ரசிக்கும்படி, சின்ன மெலோ டிராமாக் கதைகளும் அதனூடே காமெடிகளும்தான் முக்தா சீனிவாசனின் சாய்ஸ். கணவனை விட மனைவி இன்னிக்கி அதிகமா சம்பளம் வாங்கறது சாதாரணமாயிருச்சு. ஆனா, அப்பவே முத்துராமனையும் ஜெயலலிதாவையும் வைச்சிக்கிட்டு, ‘சூரியகாந்தி’ படத்தோட கதைக்கருவா, இந்தச் சம்பளப் பிரச்சினை கணவன் மனைவி இடையில ஈகோவா வெடிக்கிற மாதிரி பண்ணிருப்பார்.
யதார்த்தம்தான் அவரோட ப்ளஸ் பாயிண்ட். முக்தா பிலிம்ஸ் படமா, முதலுக்கு மோசம் இருக்காது. முக்தா பிலிம்ஸ் படமா, குடும்பத்தோட ரசிக்கலாம். பட உலகத்துல இந்த நல்லெண்ணம் அண்ணனும் தம்பியுமா சேர்ந்து சம்பாதிச்ச சொத்து’’ என்று சொல்லும் பதிப்பாளர் அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன், அவருடைய பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.
எழுத்து, சினிமா, அரசியல்.
“ படிச்சிக்கிட்டே இருப்பார். எழுதிக்கிட்டே இருப்பார். நல்ல தகவல் படிச்சார்னா, அதை எடுத்து இன்னும் தகவல்கள் சேர்த்து, ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பிவைப்பார். அதேபோல ஏதாவது செய்தி படிச்சாலும் அதை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பிவைப்பார். ஒய்.ஜி.மகேந்திரனோட டிராமா இலங்கையில நடந்துச்சு. சோவும் அதுல நடிச்சார். அந்த போட்டோ, இங்கிலீஷ் ஹிண்டுல வந்துச்சு. அதைக் கட் பண்ணி, சோவுக்கு அனுப்பிவைச்சார். எனக்குத் தெரிஞ்சு சோவை ‘டா’போட்டுக் கூப்பிடுவார்’’ என்று அவரின் குணங்களைச் சொல்லி வியக்கிறார் முக்தா சீனிவாசனின் உதவியாளர் வாசு. 41 வருடங்களாக அவர்தான் உலகம் இவருக்கு!
“சினிமா, அரசியல், கலை, தயாரிப்பாளர் கவுன்சில்னு இயங்கிக்கிட்டே இருப்பார்.
காங்கிரஸ், கதர்ச்சட்டை என்று இருந்தாலும் கூட, அடிப்படையில் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் இருந்தார். “வீண் செலவு பண்ணினா அப்பாவுக்குக் கோபம் வந்துரும். ஆடம்பரச் செலவு பண்ணாதீங்கடா. சரியா செலவு செஞ்சா உன் காசு. ஆடம்பரமாப் பண்ணினா, அது இன்னொருத்தர் காசுன்னு சொல்லுவார். காசு பணம் மட்டுமில்ல, டைமும் வேஸ்ட் பண்ணமாட்டார். படிப்பு, எழுத்து, சினிமா, அரசியல்... இயங்கிக்கிட்டே இருக்கணும். ஓய்வுங்கறது என்ன... செத்துப்போறதுதான் ஓய்வுன்னு சொல்லுவார். இப்போ, அப்பா ஓய்வுலதான் இருக்கார்’’ என்று சொல்லிக் குமுறுகிற முக்தா ரவியும் அவரைத் தேற்றும் முக்தா சுந்தரும் அடுத்த தலைமுறை அண்ணா, தம்பிகள்.
‘’ராமசாமி பெரியப்பாவுக்கு பெண் குழந்தை பொறந்தப்ப, முக்தான்னு பேரு வைச்சாரு. முக்தான்னா மகாலக்ஷ்மின்னு அர்த்தம். அந்த சமயம்தான், புதையல் பட வாய்ப்பு கிடைச்சுது. அப்புறம் படக்கம்பெனிக்கு முக்தானு வைச்சாச்சு. ஒருநாள், நாகிரெட்டி சார், ‘சீனிவாசனைக் கூப்பிடுங்க’ன்னு சொன்னப்ப சிங்கிதம் சீனிவாச ராவ் உட்பட ஆறேழு சீனிவாசன்களைக் கூட்டிட்டு வந்துட்டாங்க. அப்பதான் நாகிரெட்டி சார், ‘இனி முக்தா சீனிவாசன்னு வைச்சுக்கோ. தனியாவும் தெரியும்’னு சொன்னார். அதன் பிறகு ‘முக்தா’ சீனிவாசன், ஊருக்கே பிரபலமாச்சு.
அப்பா இறந்து போற அன்னிக்கி மதியம் கூட (29.5.18) நல்லாத்தான் பேசிட்டிருந்தார். ‘ஏம்பா, நீ தயாரிச்சு, உன் தம்பி டைரக்ட் பண்ணியிருக்கிற ‘வேதாந்த தேசிகர்’ படம் சென்சார் முடிஞ்சிருச்சு. அப்புறமென்ன, மெளனத்தை (மக்கள் தொடர்பாளர் மெளனம் ரவி)கூப்பிடு. ஒரு பிரஸ் மீட் வைக்கணும். பத்திரிகைக்காரர்களைச் சந்திச்சு, படம் பத்தி, வேதாந்த தேசிகர் பத்தி சொல்லணும்’’னு சொன்னார். அதுக்குள்ளே...’’ என்று பேசமுடியாமல் வாய்பொத்திக்கொண்டார் முக்தா ரவி.
அவர் சொன்னபடியே பிரஸ்மீட் நடக்கும். பத்திரிகையாளர்களும் கூடுவார்கள். ஆனால் அந்த வெள்ளைவெளேர் கதர்ச்சட்டையும் பளீர்ச் சிரிப்பும் கொண்டு கணீர்க் குரலில், பேசவும் விவரிக்கவும் முக்தா சீனிவாசன்தான் இல்லை.
படங்கள் உதவி:ஞானம்
தொடர்புக்கு: ramji.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT