Published : 06 Sep 2024 06:47 AM
Last Updated : 06 Sep 2024 06:47 AM
‘அயோத்தி’, ‘கருடன்’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைக் கொடுத்திருக்கும் சசிகுமார் நடிப்பில் விரைவில் வெளிவர விருக்கிறது ‘நந்தன்’ திரைப்படம். ‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இரா.சரவணன் எழுதி, இயக்கியிருக்கும் அவருடைய மூன்றாவது படம் இது. வெற்றிப்பட இயக்குநர்களாகத் திரையுலகில் களமாடும் பத்திரிகையாளர்கள் வரிசையில் கவனம் ஈர்க்கும் இரா.சரவணனுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
சசிகுமார் என்றாலே ரஜினி உள்பட கோலிவுட்டில் உருகிப் போகிறவர்கள் அதிகம். அந்தப் பெருங்கூட்டத்தில் நீங்களும் ஒருவர். அவருக்கும் உங்களுக்குமான நட்பு குறித்துக் கொஞ்சம்... நிறைய சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து, பேசி, பழகுகிற வாய்ப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அவங்க பத்திரிகையை விட்டு விலகிட்டா நட்சத்திரங்களும் தூரமா போயிடுவாங்க. இது வழக்கமாக நடக்குறதுதான். ஆனா, நான் பத்திரிகைத் துறையை விட்டு விலகினப்போ, “அப்பாடா..! இனிமேதான் உங்ககிட்ட மனசுவிட்டு நிறைய விஷயங் களைப் பேசலாம்” என்று சொல்லி நட்போடு அரவணைச்சுக்கிட்டவர் சசிகுமார் சார்.
படத்துல மட்டுமல்ல, நிஜத்துலயுமே அவர் எனக்கு ஹீரோதான். நமக்கொரு இக்கட்டு, பிரச்சினை, நெருக்கடி என்றால், பிடிச்சிருக்க கைய விட்டுட்டு ஓடுறவங்கதான் அதிகம். ஆனா, சசி சாரைக் கடந்த 15 வருஷமா நான் பார்க்கிறேன். ஒருத்தரோட பிரச்சினைக்கு, ‘நான் இருக்கேன், எதுக்கு கலங்குறே’ன்னு அவரைப் போல் கூட நின்னு தோள் கொடுக்குறவங்க அபூர்வம். ஆனா, அவர் பிரச்சினைக்கு யாருமே நிக்கல. அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார்.
‘நீ தோல்வி கொடுத்தாலும் உன்னை விட்டுட மாட்டோம்னு மக்கள் தங்களோட மனசுல ஏத்தி வச்சுகிறதுதான் ஒரு கலைஞனோட உண்மையான வெற்றி. அதை சசி சார் சாதிச்சுட்டார். அப்படிப்பட்டவருக்கு அதிரி புதிரி வெற்றியாக ‘கருடன்’ படம் அமைஞ்சது. ‘அயோத்தி’ அவர் மேல இருக்கிற மரியாதையை மேற்கொண்டு உயர்த்தினதோட, நல்ல வரவேற்பும் பெற்றுக் கொடுத்துருச்சு. அந்த வரிசை யில அவருக்கு அடுத்த பெரிய வெற்றியா அமையப்போற படம்தான் ‘நந்தன்’.
சசிகுமாரை ‘நந்தன்’ எப்படி முன்வைக்கப்போகிறது? கதாபாத்திரத்துக்காக அவரது உழைப்பு எப்படியிருந்தது? - தோரணையான ஒரு கேரக்டரில் கெத்தாக வந்து நிற்கிறதையெல்லாம் சசி சார் ஈஸியாக நடித்துவிட்டுப்போய் விடுவார். ஆனா, ஓர் எளிய குடும்பத்து மனிதரா, எல்லா வலிகளையும் சுமைகளையும் தாங்குகிற மனிதரா, அதேநேரம், அதையெல்லாம் ஏத்துக்கிற ஆளா, இவ்வளவுக்கும் நடுவுல கல கலன்னு இருக்கிற ஒருத்தரா நிறம் மாறி, உருமாறுகிற ஒரு சவாலை ‘நந்தன்’ அவருக்குக் கொடுத்துருக்கு.
படப்பிடிப்பு தொடங்கி ஒரு நாலஞ்சு நாள் கொஞ்சம் தடுமாற்றம் இருந்துச்சு.. அதுக்கப்புறம் அவர் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி, மொத்த யூனிட்டையும் வியக்க வைச்சிட்டார். இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சமுத்திரக்கனி சார்: “சசி.. இதுவரைக்கும் நீ நடிச்ச படங்கள்ல மட்டுமல்ல; இனிமே நடிக்கப்போற படங்கள்ல கூட, உனக்கு இப்படியொரு கேரக்டர் கிடைக்குமா; உன்னோட நடிப்பு இந்த அளவுக்கு ஜொலிக்குமாங்கிறது சந்தேகம்தான்! உன்னோட நடிப்பின் உச்சம் மட்டுமல்ல, உனக்கான கதாபாத் திர வார்ப்பின் உச்சமும் ‘நந்தன்’தான்னு” சொல்லிக் கட்டிப் பிடிச்சுக்கிட்டார். அந்த அளவுக்கு சசிகுமார் சாரோட உழைப்புக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுக்கொடுக்கும்கிற உறுதியான நம்பிக்கை இருக்கு.
பிக்பாஸ் வழியாக ரசிகர் கூட்டத் தைச் சேமித்துக்கொண்டிருப்பவர் ஸ்ருதி பெரியசாமி. அவருக்குக் கதையில் எந்த அளவுக்கு இடமிருக்கிறது? - மனசில் பட்டதைப் பளிச்சுன்னு கம்பீரமா பேசக் கூடிய பெண் இந்தக் கதையோட நாயகி. துடுக்கும் பாசமும் கலந்த அன்பின் ராட்சசி. அப்படியொரு கதாபாத்திரம் பண்ணணும்னா உறுதியா ஒரு தமிழ்ப் பெண் தேவைன்னு தேடத் தொடங்கினோம். கடைசியா ஸ்ருதி பெரியசாமி போட்டோ பார்த்தப்போ சட்டுன்னு அந்தப் பெண் கிடைச்சிட்ட மாதிரி ஒரு ஃபீல். நான் பிக்பாஸ் பார்த்ததில்ல.
‘அவங்க பிக்பாஸ் சீசன் 5இல் ரொம்ப பரிச்சயம், பிரபல மாடல்’ன்னு உதவியாளர்கள் சொன்னாங்க. ஸ்ருதி கதையைக் கேட்டதும் நடிக்க ஒப்புக்கிட்டார். கதை நடக்கிற பகுதியோட வட்டார வாழ்க்கைய அவர் தெரிஞ்சுக்கணும்னு விரும்பினோம். தஞ்சையை அடுத்த கந்தர்வக்கோட்டை பகுதி கிராமங்களுக்கு அவரை அழைத்துப் போய் மக்களோடு மக்களாகப் பழக வைத்தோம். மாடலிங்ல இருந்த பெண் அவர். கந்தர்வக்கோட்டைப் பகுதியில முந்திரி வறுத்து விற்கிற ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண்ணா மாறிட்டாங்க.
உங்களது முதலிரண்டு படங்களிலும் தஞ்சையை அதன் பச்சையத்துடன் வார்த்திருந்தீர்கள். ‘நந்த’னிலும் அந்த மண் வாசனை உண்டா? - தஞ்சையும் புதுக்கோட்டையும் பக்கத்துப் பக்கத்து மாவட்டங்கள்தான். ஆனால் தஞ்சை செழிப்பாகவும் புதுக்கோட்டை வறட்சியாகவும் இருக்கும். நான் தஞ்சையில பிறந்து வளர்ந்து, புதுக்கோட்டையில் படிச்சவன். இரண்டு மாவட்டத்து மக்களோட வாழ்க்கையும் தெரியும்.
அதுல கரைபுரண்டு ஓடுற அன்பும் ஈரமும் ஒரே மாதிரி இருக்கும். எந்த ஜோடனையும் இல்லாத, இந்த இரண்டு மாவட்டங்களோட இயல்பான நிலப்பரப்பை ‘நந்த’னுக்காக அப்படியே ‘கச்சா’வா படமாக்கியிருக்கிறோம். ஏன்னா.. அந்த நிலத்துல வாழ்ற கதாபாத்திரங்களும் அப்படிப்பட்ட ‘கச்சா’ வான மனிதர்கள்தான். ஒளிப்பதிவாளர் சரண் கதையும் நிலமும் கோரியதை கேமாராவில் பதிந்து கொடுத்திருக்கிறார்.
இம்முறை ஜிப்ரானுடன் பணியாற்றியது பற்றி? - இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் கிடைச்சதுக்கு இயக்குநர் ஹெச்.வினோத்துக்குத்தான் நன்றி சொல்லணும். படத்தை முடிச்சுட்டு வினோத்துக்குத்தான் முதல்ல போட்டுக் காட்டினேன். ‘உங்கிட்டேயிருந்து நான் இப்படியொரு கிராஃப்டை எதிர்பார்க்கவே யில்ல! இதுக்கு ஜிப்ரான் இசையமைச்சா நல்லாயிருக்கும்’ன்னு சொன்னார். அவரது பரிந்துரையில்தான் ஜிப்ரான் சாருக்குப் படத்தோட ஹார்டு டிரைவை அனுப்பினேன். அவரே எனக்கு போன் செய்தார்.
“படத்தை ஒரு பத்து நிமிசம் பார்த்துட்டு, ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்திடுவோம்னுதான் பார்க்கத் தொடங்கினேன். முதல் ஷாட்லேர்ந்து என்னை இழுத்துக்கிட்டுப் போன படம், கடைசி ஷாட் வரைக்கும் எழ விடல” என்று பாராட்டிவிட்டு இசை யமைத்தார். அவர் இசைப்பணியை முடிச்சதும் படத்தைப் பார்த்தோம். உண்மையிலேயே நான்தான் இந்தப் படத்தை இயக்கினேனான்னு மூச்சடைச்சு நிற்கிற மாதிரி, அவ்வளவு வீரியமா தன்னுடைய இசையால படத்தை உயர்த்திவிட்டார்.
சூரிக்கு ‘கத்துக்குட்டி’யில் ஒரு குணச்சித்திர ‘டச்’ கொடுத்திருந்தீர்கள். இப்போது அவர் ஒரு ‘பிராமிசிங் ஆக்டர்’ என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அவரது வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? - சூரி அண்ணனுடைய திறமைக்கு நகைச்சுவை களம் பத்தாதுன்னு ‘கத்துக்குட்டி’ நாள்கள்லயே எனக்குத் தெரியும். “கதாநாயகன் வேடங்கள்தான் உங்கக் கோரப் பசிக்குச் சரியான சாப்பாடா அமையும்னு அவர் கிட்டச் சொல்லிக்கிட்டே இருப்பேன். ‘கத்துக்குட்டி’ படப்பிடிப்பு முடிச்சதுமே அவரை ‘ஸ்டைலிஷ் லுக்’க்கு மாத்தி ஒரு போட்டோ ஷூட் செய்தேன்.
அதற்கு அவர் சம்மதிக்கவே இல்ல. நான் விடுகிற மாதிரி இல்லை. ‘அண்ணே இந்த போட்டோ வெளியில போகாம பார்த்துக் கோங்கன்னு சொன்னார். அந்தச் சமயத்துல அவர் பிறந்த நாள் வந்தது. அதை ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு, அந்த போட்டோ ஷூட்டை ‘கத்துக்குட்டி’ போஸ்டராக அச்சடிச்சு சென்னை முழுக்க ஒட்டிவிட்டோம். பிறகு ‘விடுதலை’ படத்தில் கமிட் ஆனதும் ‘முதல்ல உங்களுக்குத்தான் சொல்றேன்’னு சந்தோஷமா பகிர்ந்துகிட்டார். சூரி அண்ணன் நடிக்க எழுதிய கதைதான் ‘நந்தன்’.
ஆனால், ‘விடுதலை’க்காக அண்ணன் தன்னையே ஒப்படைத்திருந்த நேரம். அதனால், சசிகுமார் உள்ளே வந்தார். ‘நந்தன்’ பார்த்துட்டு இரவு 2 மணி வரைக்கும் சூரி என் கையப் பிடிச்சுகிட்டு விடல. அவ்வளவு பாராட்டு. இப்போ அவர் நாயகனா நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் அவரோடத் திறமைக்கு ஒரு தொடக்கம் மட்டும்தான். அவரோட அடக்கத்துக்கு அவருக்குக் காலம் நிறையக் கொட்டிக்கொடுக்கும்.
- jesudoss.c@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT