Last Updated : 30 Aug, 2024 06:56 AM

 

Published : 30 Aug 2024 06:56 AM
Last Updated : 30 Aug 2024 06:56 AM

திரை நூலகம்: வெற்றிமாறனின் வெற்றிக் கதை

வணிக சினிமா சட்டகத்துக்குள்ளேயும் வாழ்க்கையைப் படமாக்க முடியும், கதாநாயகனையும் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்க முடியும் என்று அறிமுகப் படத்திலேயே தன்னை அடையாளம் காட்டியவர் வெற்றிமாறன்.

மூன்றாவது படத்திலேயே சர்வதேச அளவில் சிறந்த இயக்குநர் என்கிற அடையாளத்தை வெனிஸ் படவிழாவில் தனது ‘விசாரணை’காகப் பெற்றுத் திரும்பினார். இந்தப் படம், உலக சினிமா என்கிற வெற்றிக் கோப்பையுடன் நின்றுவிடாமல், வெகுஜனப் பார்வையாளர்களின் மனதையும் வென்று காட்டியது. இரண்டு தளங்களிலும் ஒருசேர வென்றதே அவரது திரையாளுமையின் தனித்துவம்.

ராணிப்பேட்டையிலிருந்து திரையுலகில் அடையாளம் பெறும் கனவுடன் புறப்பட்ட அவர், பல வருட உழைப்புக்கும் தேடலுக்கும் பின் எப்படி வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநராக வென்றார் என்பது வரையிலான தனது வெற்றிக் கதையைத் தன் மொழியில் சுவாரசியமாக இந்நூலில் சொல்லியிருக்கிறார்.

மொத்தம் 24 அத்தியாயங்கள், 170 பக்கங்கள். ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்ப்பதைப் போலவே, ‘வடசென்னை’ படம் வரையிலான தனது வாழ்க்கையை விரித்து எழுதியிருக்கிறார்.

வெற்றியைத் தேடுபவர்களுக்கும் வெற்றியை நேசிப்பவர்களுக்கும் இவரது கதை ஒரு எனர்ஜி டானிக். தனது பெற்றோரில் தொடங்கி, படைப்பாளி பாலு மகேந்திராவின் நிழலில் அடைக்கலமானது, நடிகர் தனுஷ் மற்றும் அவரது பாதையில் எதிர்கொண்ட நட்பு, காதல் எனப் பல வகையில் கிளை விரித்து திரைக்கதைக்கான சுவாரசியத்துடன் எழுதி, தனது சொற்களால் சொக்கி இழுத்துவிடுகிறார்!

மைல்ஸ் டு கோ
வெற்றி மாறன்
வெளியீடு: நாதன் பதிப்பகம்,
சாலிகிராமம், சென்னை - 93
தொடர்புக்கு: 98840 60274

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x