Published : 08 Jun 2018 11:55 AM
Last Updated : 08 Jun 2018 11:55 AM
ரத்தம் தெறிக்க வாழும் ரவுடி ‘அசால்ட்’ சேது. அவனது வாழ்க்கையை அவனுக்குத் தெரியாமலே அறிந்துகொண்டு, அதைப் படமாக்க முற்படுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்ரமணி. தனது கதையை தானே முன்வந்து கூறும் சேது, அதில் “நானே நடிப்பேன்” என்று நிபந்தனை விதிக்கிறான். படம் வெளியாகி வெற்றிபெற்றதும் எதிர்பாராதவிதமாக ரவுடி தனது தொழிலைக் கைவிட்டு கதாநாயகன் ஆகிறான்.
அதை இயக்கிய இயக்குநரோ முன்னணிக் கதாநாயகனின் கால்ஷிட்டை கத்திமுனையில் பெரும் ரவுடியாக மாறிவிடுகிறார். கார்த்திக் சுப்பாராஜின் ‘ஜிகிர்தண்டா’ படக் க்ளைமாக்ஸ் போல, விபத்துக்கள் வாழ்க்கையின் எந்தத் தருணத்திலும் நிகழக்கூடும்.
விபத்துகள் புதிய கதவுகளைத் திறந்துவிடலாம், அல்லது அடைத்தும்விடலாம். விபத்தால் ஏற்படும் விளைவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் “இப்படி நடக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று புலம்பும் மனித வாழ்க்கையின் எதிர்பாராத் தன்மை பல சோதனை முயற்சிகளுக்குப் பாதை போட்டுக்கொடுத்திருக்கிறது.
இந்த அம்சத்தைத் திரைக்கதையின் காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய போலந்து நாட்டு இயக்குநர் கிறிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி (Krzysztof Kieslowski).1981-ல் அவர் இயக்கிமுடித்து 1987-ல் வெளியான ‘பிளைண்ட் சான்ஸ்’ (Blind Chance) படத்தில், கதாநாயகனின் வாழ்க்கை ‘இப்படி அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்’ என ஒரே படத்தில் மூன்று சாத்தியங்களைக் கதைகளாக அடுத்தடுத்து திரையில் விரிய வைத்து பார்வையாளர்களை வாய்பிளக்க வைத்தார் இயக்குநர்.
மூன்று ஓட்டங்கள்
விடேக் ஒரு மருத்துவ மாணவன். தந்தையின் கட்டாயத்தின் பேரில் மருத்துவம் படிப்பவன். போலந்தின் லாட்ஸ் ஃபேப்ரிக்கனா ரயில் நிலையத்திலிருந்து தான் படித்துவரும் வார்ஸா நகரத்துக்குச் செல்லும் குறிப்பிட்ட அவன் ரயிலைப் பிடித்தாக வேண்டும். பிடித்துவிட்டால் அவன் தனது அப்பாவுக்குப் பிடித்தமான மருத்துவப் படிப்பை தொடர்ந்து, மருத்துவர் ஆக முடியும். விடேக்கிறகு மூன்று சாத்தியங்களை இயக்குநர் உருவாக்குகிறார்.
முதலாவதில், பிளாட் ஃபாரத்தை விட்டு கிளம்பிச் சென்றுவிட்ட ரயிலை துரத்திச் சென்று பிடித்துவிடுகிறான் நாயகன். அந்தப் பயணத்தில் பழைய கம்யூனிஸ்ட் ஒருவரைச் சந்திக்கும் அவன், அக்கட்சியில் இணைய முடிவெடுக்கிறான். இரண்டாவது ஓட்டத்தில் ரயிலைத் தவறவிட்டு காவல்துறையால் தண்டிக்கப்படும் விடேக், கம்யூனிஸ்டுகளை எதிர்க்கும் போராளியாக மாறுகிறான். மூன்றாவது ஓட்டத்தில் ரயிலைத் தவறவிட்டாலும் அவனது தந்தை விரும்பியதைப் போலவே மருத்துவர் ஆகும் அவனது வாழ்க்கை எதிர்பாராத விமான விபத்தால் முடிந்துபோகிறது.
மூன்றுவிதமாக அமைந்துவிடும் பயணங்களின் வழியே முதன்மைக் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் வாழ்க்கையில், அதன் முதல் காதல், நட்பு, திருமணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களும் பயணவழியில் அவனுக்கு இடர் ஏற்படுத்தும் வழிப்போக்கர்களும் திரும்பத்திரும்ப மூன்று கதைகளிலுமே வருகிறார்கள். ஆனால் அவர்களது செயல்பாடுகள் எப்படி மாறுபாடுகின்றன என்பதிலும் அதையொட்டி தனது முடிவுகளை விடேக் எடுக்கும் விதங்களும் மூன்றுலுமே அவன் எதிர்கொள்ளும் அரசியலையே முதன்மைக் கதாபாத்திரம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர்.
விடேக்கின் நிஜ வாழ்வில் இந்த மூன்றில் ஒன்றுதான் நடக்கும். என்றாலும் மற்ற இரண்டு சாத்தியங்கள் வழியே, அழுத்தமான அரசியல் விமர்சனத்தை முன்வைக்க இந்த உத்தியை அறிமுகப்படுத்தி, பிரான்ஸுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையிலான அரசியல், சமூக ரீதிலானன தொடர்பையும் அதன் தாக்கத்தை திறமையாக ஒவ்வொரு கதையிலும் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி.
நகல்களின் வெற்றி
இந்தப் படத்தின் தாக்கத்தில் உலகம் முழுவதும் 20-க்கும் அதிகமான படங்கள் வெளிவந்தன. சில வணிக வெற்றியையும் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பெற்றன. அவற்றில் ‘ஸ்லைடிங் டோர்’, ‘ரன் லோலா ரன்’ ஆகிய இரண்டு படங்கள் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.
தன்னால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் காதலனை மீட்க ஓடும் ஒரு காதலியின் மூன்றுவிதமான ஓட்டங்கள்தான் ’ரன் லோலா ரன்’ (Run Lola Run). பத்தாயிரம் ஜெர்மன் மார்க்குகள் பணத்தைப் புரட்டிச்சென்று இருபது நிமிடங்களுக்குள் காதலனின் முதலாளியிடம் கொடுத்தால் மட்டுமே அவன் உயிருடன் இருப்பான் என்ற நிலை. காதலி லோலா ஓடத் தொடங்குகிறாள். ஒரே சம்பவத்துக்கான தொடக்கம் சில நொடிகள் வேறுபாட்டில் மூன்று வெவ்வேறு நேரங்களிலிருந்து தொடங்கியிருந்தால் லோலாவுக்கும் அவளது காதலனுக்கும் என்ன நடத்திருக்கும் என்ற 84 நிமிட கற்பனையை மூன்றுமுறை விறுவிறுப்பாக விரித்திருக்கிறார் ஜெர்மானிய இயக்குநரான டாம் டைக்வர்.
இதில் முதன்மைக் கதாபாத்திரத்தின் பிரச்சினை ஒன்றுதான். அந்தப் பிரச்சினைக்காக ஓடும் ஓட்டங்களில் சில நொடிகள் காலம் வேறுபட்டால் என்ன நடந்திருக்கும் என்ற இயக்குநரின் கோணம் வெவ்வேறு மூன்று சாத்தியங்களை உருவாக்கிவிடுகிறது.
காலத்தில் சிலநொடி வித்தியாசம் ஏற்படுத்தும் தாக்கம் முதன்மைக் கதாபாத்திரத்தில் மட்டுமல்ல, அதன் வழியில் எதிர்படும் சக மனிதர்கள், விலங்குகள், பொருட்களின் நிலையிலும் மாற்றங்களை உருவாக்கும் என்பதையும் விதியின் முன்னால், மனிதன் மிக அற்பமான துரும்பிலும் துரும்பு என்பதையும் இயக்குநர் நுணுக்கமாக சித்தரித்தரித்திருப்பதை மீண்டும் மீண்டும் இந்தப் படத்தை பார்க்கும்போது புதிதாக உணர்ந்து கொண்டே இருக்க முடியும்.
ஜீவா தவறவிட்ட 12பி
இந்தப் படங்களின் பாதிப்பில், தனது கதாநாயகனுக்கு இரண்டு சாத்தியங்களை புனைந்து ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய படம் ‘12பி’. வேலையில்லா பட்டதாரி இளைஞன் சக்தி 12பி பேருந்தைப் பிடித்து வேலை வாய்ப்புக்கான நேர்காணலுக்குச் செல்லவேண்டும். கிளம்பி வெளியே வரும்போது “ ஒரு நிமிஷம் லேட்டாபோன ஒன்னும் ஆயிடாதுடா அம்பி” என்பார் வீட்டு உரிமையாளர். “அதெல்லாம் நாம சொல்ல முடியாது சார்.. ஒரு நிமிஷம், ஒரு செக்கெண்ட், ஒரு பிராக்ஷன் ஆஃப் த செக்கெண்ட்ல லைஃப்ல எவ்வளவோ நடக்கலாம்” என்று திரைக்கதையின் உத்திக்கு முன்னோட்டம் கொடுப்பார் சக்தியாக வரும் ஷாம்.
12-பியை பிடித்து இண்டர்வியூவுக்குப் போன சக்திக்கு வேலை கிடைக்கிறது. அதே பேருந்தில் வழக்கம்போல் பயணிக்கும் ஜோதிகாவுக்கு, தோழிகள் பஸ்ஸுக்குள் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். அது பாடல்காட்சியாக மாறுகிறது. பஸ்ஸிலிருந்து வெளியே வந்து அவர்கள் திறந்த வெளியில் ஆடிக்கொண்டிருப்பார்கள். பஸ்ஸைத் தவறவிட்ட சக்தியோ, விவேக்கின் கார் கேரேஜில் மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்து ஜோதிகாவை காதலிக்கத் தொடங்குவார். பஸ்ஸைத் தவறவிடாத சக்தி, வங்கியில் வேலை கிடைத்து அங்கே பணியாற்றும் சிம்ரனோடு பழகுவார்.
காலத்தை வைத்து கபடி விளையாடும் இந்தத் திரைக்கதை உத்திக்குள் டூயட் பாடல்கள், விவேக்கின் நகைச்சுவைத் துணுக்குகள், ஒரு குத்துப்பாடல், ஒரு சண்டைக்காட்சி, வழக்கமான காதல் காட்சிகள் என்று வணிக சினிமாவின் சகல மசாலாக்களையும் இடம்பெறச் செய்து நம் மூச்சை திணற அடிப்பார் இயக்குநர். படத்தில் ஒரேஒரு சுவாரசியமான காட்சி, பஸ்ஸைப் பிடித்து வேலையில் சேர்ந்த ஷாம், 12பியில் சந்திந்த ஜோதிகாவிடம் தனது காதலைச் சொல்லிவிட வரும்போது, அவர் இன்னொருவருக்குப் பூங்கொத்து கொடுத்துக்கொண்டிருப்பார். அந்த இடத்திலிருந்து நாகரிகமாக அவர் விலகி நகரும்போது , மெக்கானிக்காக வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஷாமுக்கு ஜோதிகா பூங்கொத்து கொடுத்துக்கொண்டிருப்பார்.
12பியை சக்தி தவற விட்டாரோ இல்லையோ, இயக்குநர் ஜீவா தவறவிட்டுவிட்டார். இந்த உத்தியை அவர் துணிந்து கையாண்டபோதும் 12பியை சராசரி வணிக சினிமாவாக பிரேக் டவுன் செய்துவிட்டார். காலத்தையும் இடத்தையும் வைத்து எவ்வளவு விளையாடினாலும் அதன் வடிவம் கைமீறிச் சென்று எங்கும் தறிகெட்டுத் திரிய முடியாது. அடுத்த வகுப்பில் திரைக்கதையின் வடிவத்தைக் கற்போம்.
தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT