Published : 11 May 2018 10:27 AM
Last Updated : 11 May 2018 10:27 AM
பால்ய காலம் தொடங்கி, நாம் கடந்துவந்த வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அந்தக் கடந்த கால நினைவுகளை உரையாடல்கள் வழியே நிகழ்காலம் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. தன்னைக் கடந்துபோன நாட்களை எண்ணி அசைபோடுவதில் மனித மனதுக்கு அலாதியான சுகம். இந்த அசைபோடுதல் என்ற பழக்கத்திலிருந்து உருவானதுதான் மனித சமூகத்தின் கதை சொல்லும் வழக்கம். காலம் இல்லாமல் கதை இல்லை என்பதைப் பார்த்தோம்.
வர்ணனைக்கு இடமில்லாத காட்சி ஊடகமான திரைப்படத்தில், காலம் என்பது சரியான காலவரிசையில் அல்லது கலைத்துப்போடப்பட்ட கால வரிசையில் (லீனியர் மற்றும் நான்லீனியர்) இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டிவிட்டு ‘அலைபாயுதே’ படத்துக்குள் நுழைவோம்.
தன் நண்பனின் திருமணத்தில் பங்கேற்க அவனது கிராமத்துக்குச் செல்லும் கார்த்திக் (மாதவன்), அங்கே சக்தியைச் (ஷாலினி) சந்திக்கிறான். பின்னர் இருவரும் சென்னையில் புறநகர் ரயில் பயணத்தின்போது அடிக்கடி சந்தித்துக்கொள்ள காதல் மலர்கிறது. சக்தி குடும்பத்தின் எதிர்ப்பு காரணமாக இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீடுகளில் கமுக்கமாக இருக்கிறார்கள். ஒருநாள் குட்டு உடைகிறது. இருவரும் வீட்டிலிருந்து வெளியேறித் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து, அவர்களது திருமண வாழ்வு வெற்றிபெற்றதா இல்லையா என்பதுதான் ‘அலைபாயுதே’ திரைக்கதை.
இணை கோடுகள்
பல நூறு படங்களில் எடுத்தாளப்பட்ட ‘They lived happily ever after’வகையைச் சேர்ந்த கதைதான். ஆனால், மணிரத்னம் கதையைவிட அதைத் திரைக்கதையில், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணை கோடுகளாகச் சித்தரித்த (Time in parallel line) நேர்த்திதான் படத்தை அழகாக்கியது. நிகழ்காலத்தில் ஒரு கதை தொடங்குகிறது. காதில் ஸ்டைலாக ஹெட்போன் மாட்டியபடி, தனக்கு சாஃப்ட்வேர் ஆர்டர் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியான செய்தியை, தன்னுடன் ஊடலில் இருக்கும் மனைவியிடம் கூற பைக்கில் வந்துகொண்டிருக்கிறான் கார்த்திக்.
அவனைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்த சக்தி, தன் சகோதரியின் நின்றுபோயிருந்த திருமணத்தை அவன் நடத்தி வைத்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டபின், உணர்வு மேலிட அவனைச் சந்திக்க வரும்போது சாலை விபத்தில் சிக்கிக்கொள்கிறாள். அவள் அடிபட்டுக் கிடக்கும் இடத்தைக் கடந்தே உற்சாகமாக கார்த்திக் பைக்கில் விரைகிறான்.
இந்த நிகழ்காலச் சம்பவத் தொடருக்கு இணையாக, கடந்த காலத்தில் நடந்த கார்த்திக் - சக்தியின் காதல் கதை மற்றொரு தொடராக வந்து செல்கிறது. இந்த இரண்டு காலவரிசையும் ஒரே சீராக முன்னேறினாலும் தனித் தனியே அவை லீனியர் வகைதான். கிராமத்துக் கல்யாணத்தில் தொடங்கிக் கதை முழுவதையும் கடந்த காலத்தில் சொல்லிவிட்டு, அதன் பிறகு நிகழ் காலத்துக்கு வராமல் இரண்டையும் மாறி மாறிச் சித்தரித்ததன் வழியாக நிகழ்காலம், கடந்த காலம் இரண்டிலுமே கார்த்திக் - சக்தியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன நடந்தது என்ற த்ரில்லர் தன்மையைத் திரைக்கதைக்குள் மணிரத்னம் கொண்டு வந்துவிடுகிறார்.
‘அலைபாயுதே’ என்ற தலைப்பைத் திரைக்கதையில் ஊடாடும் காதலுக்கு மட்டுமல்ல, இணைகோடுகளாக அலைபாயும் காலத்தையும் சுட்டிக்காட்டும்விதமாகவே அவர் சூட்டியிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். ஆக, மணிரத்னம் போல காலத்தை உங்கள் திரைக்கதையில் எத்தனை சுவாரசியமாகப் பந்தாடுகிறீர்கள் என்பது மிக முக்கியம்.
அலுப்பூட்டும் கால உத்தி
நரைத்த தலையுடன் ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளியே வருகிறான் நாயகன். ஊர் திரும்பி, பூட்டப்பட்டு ஒட்டடை படிந்துகிடக்கும் தனது வீட்டுக்குள் நுழைந்து, தான் சிறையில் இருந்த காலத்தில் இறந்துபோன அப்பா – அம்மாவின் படங்களைப் பார்த்து அழுகிறான். அதன்பின் சாய்வுநாற்காலியில் அமர்ந்து தன் வாழ்க்கையை நினைக்கத் தொடங்க… அவனது கண்களை நோக்கி கேமரா குளோஸ்-அப்பில் நெருங்க (வருஷம் 16), திரையரங்கில் “அய்யோ…! ஃப்ளாஷ் பேக் போடப்போறான்யா…!” என்று ரசிகர்கள் அலறுவதைப் பார்த்திருப்பீர்கள். திரைக்கதைகளில் மிக நீளமான ஃப்ளாஷ் - பேக்குகளைப் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. அது இன்று அலுப்பூட்டக்கூடிய உத்தியாகவும் ஆகிவிட்டது. எனினும் முழுக் கதையும் ஒரே ஃப்ளாஷ் பேக்கில் கூறும் படங்கள் இன்னும் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன.
சித்தரின் கையில் காலம்
திரைக்கதையில் ஒரு கதை சொல்லும் உத்தியாகப் பயன்படும் ஃப்ளாஷ்பேக், கடந்த காலத்தில் நடந்தவற்றைச் சித்தரிக்கப் பயன்படுகிறது என்றால் ஃப்ளாஷ் ஃபார்வர்டு எதிர்காலத்தில் நடப்பதை அல்லது நடக்க இருப்பதைக் கூறப் பயன்படுத்தப்படுகிறது. ஃ ப்ளாஷ் ஃபார்வேடு உத்தியை முழுமையாகப் பயன்படுத்தாமல் ஒரே ஒரு புகைப்படம் வழியாக புரட்டகானிஸ்ட் (கதாநாயகன், கதையின் நாயகன் அல்லது முதன்மைக் கதாபாத்திரம் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்க்கையில் நடைபெறப்போகும் சம்பவங்களுக்கான தூண்டுதலாகக் காட்டிய படம் சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான ‘மான் கராத்தே’.
நண்பர்களுடன் மலைப் பகுதி ஒன்றுக்கு ட்ரெக்கிங் செல்கிறார் சதீஷ். அங்கே சித்தர் ஒருவரைக் கண்டு, அவரிடம் ‘ஆயுத பூஜை’க்கு மறுநாள் வெளிவரப்போகும் நாளிதழ் ஒன்றின் பிரதி கிடைக்குமா என்று கேட்க, அதைத் தனது சக்தியால் வரவழைத்துக் கொடுத்துவிட்டு மறைந்துவிடுகிறார் சித்தர். பேப்பரைப் புரட்டினால் அதில் புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தி அவர்கள் கண்களில் படுகிறது. குத்துச்சண்டை போட்டியில் இரண்டு கோடி ரூபாய் வென்ற பீட்டர் என்பவரையும் அவர் வெல்லக் காரணமாகப் பின்னால் இருந்து உதவியவர்கள் என்று சதீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் என்று குறிப்பிட்டு, அவர்கள் கூட்டாக போஸ் கொடுத்திருக்கும் படத்துடன் செய்தி வெளியாகியிருக்கிறது.
தொடக்கத்தில் இந்தச் செய்தியை நம்பாத அவர்கள், அந்த பேப்பரில் இருக்கும் ஒவ்வொரு செய்தியும் நடக்கத் தொடங்குவதைப் பார்த்து பீட்டரைத் தேடிப் போகிறார்கள். அந்த பீட்டர் சிவகார்த்திகேயன். குத்துச்சண்டை என்றால் என்னவென்றே தெரியாத அவரை, சதீஷும் அவரது நண்பர்களும் ஜெயிக்க வைத்தார்களா இல்லையா என்பதுதான் கதை.
கதையின் மதிப்பு
‘மான் கராத்தே’ படத்தில், வெளியீட்டு நாளுக்கு முன்பே சித்தரால் வரவழைத்துத் தரப்பட்ட ஒரு நாளிதழ் பிரதி, எதிர்காலத்தில் கதாநாயகன் மற்றும் துணைக் கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கப்போகும் அடுத்தடுத்த சம்பவங்களை விரித்துச் செல்ல ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதே படத்தில் ஹன்சிகா மோத்வானியின் பின்னால் அலையும் சிவகார்த்திகேயனின் காதல் லீலைகள் அனைத்தும் இந்தச் சுவாரசியமான ஒருவரிக் கதையில் பொழுதுபோக்கு அம்சம் என்ற பெயரில் கோத்து போட்டு ஒட்டப்பட்டவை.
ஃப்ளாஷ் ஃபார்வர்டு உத்தியே மிகப் பெரிய த்ரில்லர் தன்மையுடன் இருக்கும்போது, அதற்குள் இதுபோன்ற ஒட்டல்கள் பிதுங்கிக்கொண்டு நிற்கும் என்பதற்குக் கால இயந்திரக் கதைகளும் காலத்தை வென்று பயணிக்கும் கதைகளும் சிறந்த உதாரணங்கள். நம்ம ஊர் விக்ரம் கே.குமார் தொடங்கி ஹாலிவுட்டின் கிறிஸ்டோபர் நோலன், அந்நாளின் அகிரா குரசோவா முதல் இந்நாளின் கமல் ஹாசன் வரை இதில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். அவர்களின் திரைக்கதைகளில் கால விளையாட்டையும் அதை மீறி நிற்கும் கதை மதிப்பையும் (Story value) அடுத்த வகுப்பில் காணத் தயாராகுங்கள்.
தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT