Last Updated : 18 May, 2018 10:38 AM

 

Published : 18 May 2018 10:38 AM
Last Updated : 18 May 2018 10:38 AM

சி(ரி)த்ராலயா 18: சொன்னது நீதானா விசு!

ஒரு நல்ல கதையைத் தாங்கிப் பிடிக்க உணர்வுபூர்வமான பாடல்கள் அமைந்துவிட்டால் அந்தப் படத்தின் வெற்றி எளிதாகிவிடும். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கு மிகச் சிறந்த பாடல்களை அளித்துவிட்டது எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை. ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…’, ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘என்ன நினைத்து என்னை அழைத்தாயோ’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘சொன்னது நீதானா’ உட்படப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை உருகவைத்தது.

‘சொன்னது நீதானா’ பாடல் உருவான பின்னணியில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. பெரும்பான்மையான நேரத்தில் கண்ணதாசன் வரிகளை எழுதிக் கொடுத்த பிறகு மெட்டுப்போடுவதுதான் எம்.எஸ்.வியின் வழக்கம். ஸ்ரீதரும் பாடலுக்கான சூழ்நிலையை கண்ணதாசனிடம் முதல்நாளே கூறிவிட்டார். கண்ணதாசன் வருகைக்காகக் காத்திருந்தனர். இப்போது வருவார் அப்போது வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாளில் கண்ணதாசன் இரவாகியும் வரவே இல்லை. மன உளைச்சல் அடைந்த எம்.எஸ்.வி. “இவருடன் போராட வேண்டியிருக்கிறதே” என்று கோபித்துக்கொள்ள, அதைச் சிரமேற்கொண்டு கண்ணதாசனிடம் போய் இறக்கி வைத்து விட்டார்கள்.

இரண்டு தினங்கள் கழித்து கம்போசிங் வந்த கண்ணதாசன், கம்போஸிங் அறையில் நுழைந்து எம்.எஸ்.வியைக் கண்டதும் “விசு..! சொன்னது நீதானா! சொல் சொல்... என் உயிரே !” என்றபடி அவரை போய்க் கட்டிக்கொள்ள, “சூப்பர்…! இதையே பாட்டின் பல்லவியாகப் போட்டு விடுவோமே..!” என்று ஸ்ரீதர் சொல்ல, அப்போது பிறந்ததுதான் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘சொன்னது நீதானா’ பாடல்.

இயக்குநரின் மீடியம்

கேன்சர் நோயாளி கதாபாத்திரத்தில் முத்துராமன். அவர் மனைவியாக தேவிகா. அவருடைய முன்னாள் காதலன்தான் முத்துராமனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரான கல்யாண்குமார். முத்துராமன் கல்யாணகுமாரின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மூவருக்கும் இடையே நடைபெறும் மனப்போராட்டம்தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.

வெறும் 25 நாட்களில் ஒரே லொக்கேஷனில் எடுக்கப்பட்ட படம். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பல காட்சிகள் எடுக்கப்பட்டன. படம் ரிலீஸ் ஆனதும் எங்கும் ஒரே பரபரப்பு. சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் வளர்ந்துவரும் புதுமுகங்களைக் கொண்டு மிகச் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படம் ஒரு இயக்குநரின் மீடியம் என்பதை உணர்த்தி, பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

சென்னை, மதுரையில் 25 வாரங்கள் ஓடி சித்ராலயாவுக்கு பெரும் புகழைத் தந்தது. விமர்சகர்கள் பாராட்டித் தள்ளினார்கள். “இனி தரமான படங்கள் வெளிவர ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ உந்துதல் அளிக்கும்” என்று பாராட்டினார்கள்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ வெளியாகி பத்து வாரங்கள் ஆகியும் திரையரங்குகளில் கூட்டம் குறையவில்லை. இந்த நேரத்தில் சிவாஜி கணேசனும் இயக்குநர் ஏ.பி.நாகராஜனும் இணைந்து எட்டயபுரத்தில் பாரதியார் விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையிலிருந்து ஒரு பேருந்து மற்றும் பத்து கார்களில் எட்டயபுரத்துக்கு நடிகர், நடிகையர், இயக்குநர்கள், வசனகர்த்தாக்கள் என சுமார் நூறு கலைஞர்களை அழைத்துக்கொண்டு சென்றனர்.

அதில் ஸ்ரீதரும் கோபுவும் அடக்கம். மதுரை நகரை அடைந்ததும் சிவாஜியின் வேண்டுகோளை ஏற்று கலைஞர்கள் அனைவரும் திறந்த ஜீப்களில் ஏறிக்கொண்டு மதுரை நகரை வலம் வந்து கொண்டிருந்தனர்.

ஒரு ஜீப்பில் கே.ஏ.தங்கவேலு, ஸ்ரீதர், கோபு, நாகேஷ், எஸ். வி. சுப்பையா ஆகியோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கே.ஏ.தங்கவேலு பெரிய காமெடி நடிகர். கூட்டத்தினர் இவர்கள் சென்ற ஜீப்பை நோக்கி முண்டியடித்துக் கொண்டு வந்து “அதோ பாருடா நாகேஷ்..!” என்று ஆச்சரியமாய்க் கூவியபடி நாகேஷின் கைகளைப் பற்றி குலுக்கத் தொடங்கினர். அருகில் இருந்த தங்கவேலு, சுப்பையா ஆகிய இருவரையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. தங்கவேலுவின் முகம் இருண்டுபோனது.

18chrcj_MSV kannadasan எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனும் படமும் பாடமும்

எட்டயபுரத்தைச் சென்றடைந்ததும் அனைவரும் ஒரு பங்களாவில் தங்கவைக்கப்பட்டனர். அப்போது தங்கவேலு கோபு இருந்த அறைக்கு வந்தார். கண்களில் நீர் மல்க, “சடகோபா…! ‘கல்யாணபரிசு’ வெற்றி விழாவை அஞ்சு பெரிய நகரங்கள்ல கொண்டாடினோம். என்னை ரசிகர்கள் எப்படி மொய்ப்பாங்க?” என்று கேட்டார். “ஆமா வேலு அண்ணே! உங்கக் கையைப் போட்டிபோட்டு குலுக்குவாங்க. அதுல யாரோ ஒரு ஆள், KAT என்று உங்க பெயர் பொறித்த தங்க மோதிரத்தைக் கழற்றிட்டுப் போய்ட்டானே.. அதை மறப்பேனா?” என்று ஜோக்கடித்து அவரது கலக்கத்தைப் போக்க முயன்றார் கோபு.

“ஆனா இன்னைக்கு நடந்ததையும் நீங்க பார்த்தீங்கதானே… ஒண்ணு சொல்றேன்…. ‘நெஞ்சில் ஓர் ஆலய’த்துல ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்ச நாகேஷைப் பார்த்து, “அதோ பாருடா நாகேஷுனு ரசிகர்கள் கத்தறாங்க. இதுவரை 200 படங்கள்ல நடிச்சே என்னை நொடிப்பொழுதுல மறந்துட்டாங்க. இதுதான் சினிமா. சினிமால கிடைச்ச அந்தஸ்து, புகழ் நிரந்தரம்னு நினைக்கக் கூடாது. இன்னைக்கு நான் கண்டு அனுபவிச்ச காட்சி, எனக்குப் பெரிய பாடம்....அதிர்ச்சியும் கூட!” என்றார் தங்கவேலு.

தங்கவேலு சிறந்த நகைச்சுவை நடிகர். சிறந்த நாடகக் கலைஞர். அவர் நடிக்காத நகைச்சுவைப் படங்களே இல்லை. ‘ரம்பையின் காதல்’, ‘நான் கண்ட சொர்க்கம்’, ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்று அவரது திரை நகைச்சுவை பலவித பரிமாணங்களில் வெளிப்பட்டிருக்கிறது. வசன உச்சரிப்பில் நகைச்சுவை உணர்வைப் பொதிந்து கொடுத்த முதல் ஆளுமை.

பண்பட்ட மனிதர். அவர் இப்படி மனம் புண்பட்டு தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியது திரைப் புகழ் குறித்த நெருடலை ஏற்படுத்தியதாக நினைவுகூர்கிறார் கோபு. சினிமா புகழ் என்பதே மாயை என்பதை உணராததன் விளைவாக இன்று பல முன்னாள் நடிகர், நடிகையர் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் என்கிறார் கோபு.

பம்பாய் நோக்கி

எட்டயபுரத்தில் கோபுவுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. பிரபல நாதஸ்வர வித்துவான் காருக்குறிச்சி அருணாசலத்தின் வீடு எட்டயபுரத்தில் இருந்தது. ஜெமினி கணேசன் அவரைப் பார்க்க திட்டமிட்டு இருந்தார். சங்கீத நாட்டம் உள்ள கோபுவையும் உடன் அழைத்துக்கொண்டு அவரது இல்லம் சென்றார் ஜெமினி.

காருக்குறிச்சியாருடன் ராகங்களைப் பற்றி கோபு ஆர்வம் பொங்க பேச… “தம்பிக்கு நல்ல சங்கீத ஞானம்! யார் இவர்?” என்று ஜெமினியிடம் கேட்டார் காருக்குறிச்சியார். “சங்கீதம் மட்டுமில்ல, நல்ல ஹாஸ்ய ராஜன். இவன் இருக்கற இடம் கலகலன்னு இருக்கும். சித்ராலயா ஸ்ரீதரோட சினேகிதன்!” என்று ஜெமினி அறிமுகப்படுத்தினார்.

எட்டயபுரத்தில் பாரதி விழாவை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்கள் ஸ்ரீதரும் கோபுவும். ஒருநாள் கோபுவை அழைத்த ஸ்ரீதர், “நாம நாளைக்கே பம்பாய் போறோம். ராஜேந்திரகுமார், ராஜ்குமார், மீனாகுமாரி, மெஹ்மூத் எல்லோருக்கும் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ கதையைக் கூறி ஒப்பந்தம் செய்யப்போறோம்.” என்றார். கோபு மலைத்துப் போய் நின்றார்.

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x